சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி (டிசம்பர் 3) மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பேரணி நடத்தினர். தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தப் பேரணியில் மாற்றுத்திறனாளி பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி மாநில மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
பெண் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பணியாற்றிவரும் ‘ஸ்ருதி’ தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ஷம்பா சென்குப்தா ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “மேற்கு வங்கத்தில் மட்டும் 2012 முதல் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
2017 ஜனவரி முதல் 2018 நவம்பர் வரை மட்டும் மாற்றுத்தினாளி சிறுமிகள், பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்கள் மீது 35 வழக்குள் தொடரப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிப் பெண்கள், சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறவர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்கும்வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.
அப்போதுதான் மாற்றுத்திறனாளிப் பெண்கள், சிறுமிகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் தாக்குதல்கள் மிக மோசமான குற்றமாகக் கருதப்பட்டு அவர்களுக்கு அதிகபட்சத் தண்டனை பெற்றுத்தர முடியும்” என வலியுறுத்தினர்.
திருமணங்களும் தற்கொலைகளும்
உலக அளவில் தற்கொலை செய்துகொள்ளும் ஒவ்வொரு பத்துப் பெண்களிலும் நால்வர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று சமீபத்தில் வெளியான பிரபல லான்செட் மருத்துவ இதழ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவில் தற்கொலை செய்துகொள்ளும் பெண்களில் பெரும்பாலானவர்கள் நாற்பது வயதுக்குட்பட்டவர்களாகவும் திருமணமானவர்களாகவும் இருக்கின்றனர்.
ஏற்பாட்டுத் திருமணம், குழந்தைத் திருமணம், தாய்மை, சமூக பொருளாதாரக் காரணிகள், குடும்ப வன்முறை, பொருளாதாரச் சார்பு போன்றவற்றையே தற்கொலைக்கு முக்கியமான காரணங்களாக இந்த ஆய்வு முன்வைத்திருக்கிறது. இந்தியா போன்ற வருவாய் குறைவான நாடுகளில், திருமணம் என்பது பாதுகாப்பான அம்சமாக இருப்பதில்லை. அது பிரச்சினைகளை மேலும் கடுமையாக்கும் அம்சமாகத்தான் இருக்கிறது.
திருமணமான பிறகு புதிய சூழலில் பொருந்திப்போக வேண்டிய கட்டாயம், உறவுகளுக்கிடையேயான பிரச்சினைகள் போன்றவற்றைத் தீர்க்க முடியாமல் இருப்பது போன்றவையே திருமணமான பெண்கள் அதிகமாகத் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணங்களாக உளவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆய்வின்படி, உலக அளவில் 2016-ல் தற்கொலை செய்துகொண்ட 2,57,624 பெண்களில் 36.6 சதவீதத்தினர் அதாவது 94,380 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.