இப்போதெல்லாம் தங்க நகைகளைவிட மணிகள், சுடுமண், காகிதம் போன்றவற்றில் செய்யப்படும் ஃபேஷன் நகைகளுக்குத்தான் அதிக வரவேற்பு. பட்டு நூலால் செய்யப்படுகிற அணிகலன்களுக்குக் கூடுதல் வரவேற்பு. எடை குறைவு, விலையும் மலிவு என்பதாலேயே பலரும் இதுபோன்ற நகைகளை விரும்பி அணிகிறார்கள். மக்களின் இந்த விருப்பம்தான் சில மகளிர் சுய உதவிக்குழுக்கள் முன்னேற காரணமாகவும் இருக்கிறது.
கடலூர் மாவட்டம் எஸ். புதூர் கிராமத்தில் செயல்பட்டுவரும் மகளிர் குழுவினர் நூல் அணிகலன் தயாரிப்பில் ஈடுபட்டுத் தங்களின் குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்திவருகின்றனர். இந்தக் கிராமத்தில் ரியல் சமூக சேவை நிறுவனத்தின் மூலமாகப் பெண்கள் மற்றும் சிறுவிவசாயிகளுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நிலமற்ற பெண்களுக்குப் பல்வேறுவிதமான தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. இதில் குறிப்பாக நூலால் அணிகலன்கள் செய்வதற்கான பயிற்சி 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சொந்தக் காலில் நிற்கும் பெண்கள்
பலர் இதுபோன்ற பயிற்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றாலும் அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவு. காரணம் மூலப் பொருட்களை வாங்குவது, தயாரித்தவற்றைச் சந்தைப்படுத்துவது ஆகியவையே இந்தப் பின்னடைவுக்குக் காரணங்கள். ஆனால், நகை செய்வதற்கான மூலப்பொருட்கள் கிடைக்கும் கடைகளையும் நகைகளை விற்பனை செய்யும் கடைகளையும் பயிற்சி அளித்த நிறுவனமே அறிமுகப்படுத்திவிட்டனர்.
அதனால் கடலூர் அருகே உள்ள மேற்கு ராமாபுரம், குறவன்பாளையம் கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 15 பெண்கள் நூல் அணிகலன் தயாரிக்கும் தொழிலைச் செய்துவருகின்றனர்.
கம்மல், வளையல், ஆரம் போன்றவற்றை நேர்த்தியான முறையில் புதுப்புது டிசைன்களில் இவர்கள் செய்கின்றனர். அவற்றைப் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.
“ஒருத்தருக்கு 1500 ரூபாய் கணக்கில் மொத்தமாக ஐந்து பேர் சேர்ந்து பணம் போட்டு மூலப்பொருள்களை வாங்குவோம். இதுல இருபதாயிரத்துக்கு மேல வருமானம் கிடைக்கும். செலவு போக ஒருத்தருக்கு மாதம் நாலாயிரத்துக்கு மேல கிடைக்கும். குடும்பத்துல மாத பட்ஜெட்ல விழுற துண்டைச் சமாளிக்க இந்தப் பணம் எங்களுக்குக் கைகொடுக்குது. சேமிக்கும் பழக்கத்தையும் அதிகரிக்குது.
பிள்ளைகளோட படிப்புச் செலவுக்கும் இது உதவியா இருக்கு. கையில பணம் இருப்பதால யார் தயவையும் எதிர்பார்க்காமல் நாங்களே சுயமாக சிலவற்றைச் சமாளிக்க முடியுது. எங்களைப் பார்த்து மற்ற பெண்களும் இதுபோன்ற சுய தொழிலைச் செய்ய முன்வருவது மகிழ்ச்சியா இருக்கு” என்கிறார் செயற்கை நகைத் தொழிலில் ஈடுபட்டுவரும் லதா.
வீட்டில் இருந்தபடியே ஃபேஷன் நகைகள் செய்து லாபம் ஈட்டுவது நகரத்துப் பெண்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற சிலரது நினைப்பைத் தங்கள் வெற்றியால் மாற்றியிருக்கிறார்கள் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த இந்தப் பெண்கள்.