கடந்த வார பெண் இன்று இணைப்பின் ‘முகம் நூறு’ பகுதியில் திருச்சியின் முதல் கால்-டாக்ஸி ஓட்டுநரான இந்திராணியின் வெற்றிக்கதை இடம்பெற்றிருந்தது. இவர் கால்-டாக்ஸி மட்டுமல்லாமல் ஆட்டோ, பேருந்து, ஜேசிபி போன்ற வாகனங்களையும் ஓட்டக் கற்றுக்கொண்டுள்ளார். இந்தத் திருவிழாவில் அவர் தன் வாழ்க்கை அனுபவங்களை வாசகிகளிடம் பகிர்ந்துகொண்டார்.
தன் கணவர் மூலமாக எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி, தான் எய்ட்ஸ் விழிப்புணர்வு அமைப்பொன்றின் தலைவரானது எப்படி என்பதைப் பகிர்ந்துகொண்டார். சொந்தக் குடும்பத்தாலேயே ஒதுக்கிவைக்கப்பட்ட இவர், தன்னுடைய மகனின் அன்பான புரிந்து கொள்ளுதல் மூலம் இன்று ஒரு சாதனை மனுஷியாக விளங்குகிறார். இதுவரை இவர் ஆயிரக்கணக்கானவர்களுக்கு எய்ட்ஸ் நோயைப் பற்றிய விழப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். இவரது வாழ்க்கை அனுபவத்தைக் கேட்ட வாசகிகள் பலர் நெகிழ்ந்து கண்ணீர் சிந்தினர்.
இவர்களைத் தவிர, பெண் இன்று இணைப்பில் வெளிவந்த வெற்றிக் கதைகளின் நாயகியரான பெட்ரீஷியா (ஆண்களுக்கான சலூன் நடத்துபவர்), ஃபேஷன் டெய்லர் ஷனாஸ், சமையல் கலை நிபுணர் ராதா பாலு உள்ளிட்டோரும் திருவிழாவில் கலந்துகொண்டனர்.