பெண் இன்று

பெண் நூலகம்: அன்பால் நிரம்பியவள்

ப.கலாநிதி

பணி நிமித்தமாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழும் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கும்? அவள் மீது அன்பு கொண்டு, பரிவு கொண்டு, நட்பு கொண்டு, காதல் கொண்டு, அவளது உடலின் மீது ஈர்ப்பு கொண்டு எத்தனை ஆண்கள் அவளது வாழ்க்கைக்குள் நுழைந்துவிட முடியும்?

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்காக எவ்வளவுதான் அதீதமாகக் கற்பனை செய்தாலும் அவை எல்லாவற்றையும் தாண்டிய அதிகமான வாழ்வனுபவங்களைக் கடந்து வருகிறாள் ‘அற்றவைகளால் நிரம்பிய’ அஞ்சனா.

கதையில் பத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் வருகிறார்கள். எல்லோரும் அஞ்சனாவைக் காதலிக்கிறார்கள். சிலர் குடிக்கிறார்கள். உழைக்கிறார்கள். தத்துவம் பேசுகிறார்கள். புரட்சி செய்கிறார்கள். கைதாகிறார்கள். சிலர் இறந்தும் போகிறார்கள்.

வெவ்வேறு கிராமங்கள், வெவ்வேறு நகரங்கள், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கதைக்குள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருமே ஏதாவது ஒரு வகையில் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். துயரங்களைத் தாங்கிக்கொள்கிறார்கள். சிலர் செத்துப் போகிறார்கள். பலர், வாழ வேண்டும் என்கிற விருப்பத்தில், துன்பங்களைக் கடந்து எழுந்து நிற்கிறார்கள். வாழ்வின் வலிகளை அனுபவங்களாகச் சேமிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அடுத்தவர் மீதான அன்பை விட்டுவிடாதிருக்கிறார்கள்.

எண்ணற்ற கதைமாந்தர்கள், ஏகப்பட்ட கிளைக் கதைகளுக்கு ஊடாக, வாழ்க்கை என்பது ஏற்றுக்கொள்ளுதலும் அதிலிருந்து கற்றுக்கொள்ளுதலுமே என்ற புரிதலில் நின்று, வாழ்வின் பக்கங்கள் அனைத்திலும் அன்பையே எழுதிச் செல்கிறாள் அஞ்சனா.

இந்நூலின் ஆசிரியர் பிரியா விஜயராகவன் லண்டனில் மருத்துவராகப் பணிபுரிகிறார். அவரது பரந்துபட்ட அனுபவங்களும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிவும் கதையில் விரவிக் கிடைக்கின்றன. 43 அத்தியாயங்களுக்கும் அட்டகாசமான 43 ஓவியங்களைப் பிரியாவே வரைந்திருக்கிறார்.

அதிகாரம், சாதியம், வன்மம், குரூரம், சுயநலம், காமம், தனிமை இவற்றுக்கு நடுவே அன்பு செலுத்துவதையே வாழ்வின் பாடலாக, அன்பைத் தேடிச் செல்வதையே வாழ்வின் பயணமாக ஆக்கிக் கொண்ட ஒருத்தியின் கதையைப் படிக்கும்போது, இனம்புரியாத துயரொன்று இதயக்கூட்டுக்குள் உறைந்துகொள்கிறது.

வாழ்வனுபவங்களால் விரவிக் கிடக்கும் ஓர் உலகப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குத் திரும்பும் அஞ்சனாவிடம், ஒரு பெண், “நீங்க என்ன சாதி?” என்று கேட்கிறாள். அதற்கு அஞ்சனா, “நான் ஷெட்யூல்ட் கேஸ்ட்” என்று சொல்வதோடு அஞ்சனாவின் கதை நிறைவுறுகிறது. பலரின் கதைகள் அங்குதான் தொடங்குகின்றன.

SCROLL FOR NEXT