பெண் இன்று

மது அருந்துவதா பெண் முன்னேற்றம்?

ஜே.சி.ஜெரினாகாந்த்

சில நாட்களுக்கு முன் ‘அரிமா நம்பி’ படம் பார்த்தேன், அதிர்ந்துபோனேன். இதைவிடப் பெண்மையைக் கேவலப்படுத்த முடியாது என்று தோன்றியது.

நாயகியை மது அருந்தும் பாரில் வைத்து சந்திக்கிறான் நாயகன். ‘தமிழ்ப் பெண்ணே அழகு’ என்ற முத்தாய்ப்புடன் கண்டதுமே காதல் வந்து, ஒரு பாடலை நாயகிக்கு டெடிகேட் செய்து, பாடல் முடியும் முன்பே செல்போன் எண்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இதுவே நம்ம ஊருக்குத் தாங்க முடியாத வேகம் என்றால், மறு நாள் இரவே இருவரும் இரவு உணவுக்காக ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறார்கள். போட்டி போட்டுக் கொண்டு மது அருந்தி, ஹோட்டல் மூடும் நேரம் வந்துவிட்டதெனக் கிளம்புகிறார்கள். அப்போது நாயகனைத் தன் வீட்டுக்கு அழைக்கிறாள் நாயகி.

சாப்பிட வா என்று யோசித்தால் நம் நினைப்பு தவறு. “என் வீட்டில் மது பாட்டில் இருக்கு. வா, தண்ணியடிக்கலாம்” என்கிறாள் நாயகி. நாயகன் கொஞ்சம் யோசனையுடன், “இந்த நேரத்துக்குப் போனால் சரி வருமா? யாராவது ஏதாவது சொல்ல மாட்டார்களா” என்று தயங்க, நாயகியோ ஏகமாக எகிறுகிறார்.

இருவரும் மீண்டும் மதுக் கோப்பைகளை நிரப்புவார்கள். மகள் வசதியாகப் படிக்க வேண்டுமே என்பதற்காக நாயகியின் அப்பா எடுத்துத் தந்த வீடு அது.

என்னதான் மேல்தட்டுப் பெண் என்றாலும் எந்தப் பெண் இப்படி ஒரு ஆணைச் சந்தித்த ஒரே நாளில் அவனுடன் சேர்ந்து குடித்துவிட்டு, வீட்டுக்கும் அழைத்து வருவாள்? இதுதான் முன்னேற்றமா? ஆண்கள் குடிப்பதற்கே கண்டனம் தெரிவிக்கும் நாட்டில் ஒரு பெண்ணை இப்படியா காட்சிப் படுத்துவது?

பெண்ணைக் குணவதியாக, பொறுமை சாலியாக, சிந்தனாவாதியாக, போராளியாக, நியாயவாதியாகக் காட்டிய காலம் மலையேறிவிட்டது. ஆணுக்குப் பெண் இளைப்பில்லை தான். அதற்காக அவனுடன் போட்டி போட்டுக்கொண்டு மது அருந்துவதிலா பெண் முன்னேற்றம் இருக்கிறது? அதுவும் மக்களிடம் நேரிடையாகப் போய்ச் சேரும் ஊடகங்கள் இப்படிப் பெண்களைச் சித்தரிப்பதை நிச்சயம் நிறுத்தியே ஆக வேண்டும். நல்லது சொல்லாவிட்டால்கூட பரவாயில்லை, கெட்டதைத் தவிர்க்கலாமே.

SCROLL FOR NEXT