பெண் இன்று

திறமைக்கு மேடை: பழையதில் புதியது

டி.செல்வகுமார்

பருத்திச் சேலைகள் பழையதான பிறகும் அவற்றைத் தன் பேரப் பிள்ளைகளுக்காகப் பத்திரப்படுத்தி வைக்கும் பழக்கம் இன்றும் பலரது வீடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதேபோல் வடமாநிலங்களில் உள்ள பெண்கள் வீணாகும் பருத்தித் துணிகளைக் கொண்டு மெத்தை, துணிப்பை, சுவர் அலங்காரப் பை போன்ற கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் வல்லவர்களாக உள்ளனர்.

இதுபோன்ற கலையைத் தமிழகத்தில் மேம்படுத்தக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த டீனா கட்வால், தீபா வாசுதேவன், வர்ஷா சுந்தரராஜன் ஆகிய மூவரும்.

பருத்தித் துணிகளைக் கொண்டு கலைநயத்துடன் கம்பளி, படுக்கை விரிப்பு, அலங்காரப் பொருட்கள் போன்றவற்றைச் செய்யும் போட்டியை இவர்கள் நடத்துகிறார்கள்.  அதற்காக www.indiaquiltfestival.com  என்ற இணையதளத்தில் ஆன்லைன் பதிவு தற்போது நடைபெற்றுவருகிறது.

இந்தப் போட்டி ‘பாரம்பரியம்’, ‘நவீனம்’, ‘கலைநயம்’, ‘புதியவர்கள்’, ‘மயிலின் நடனம்’ ஆகிய ஐந்து தலைப்புகளில் நடத்தப்படுகிறது. ‘ஓல்டு இஸ் கோல்டு’ என்பது முன்னோர்களுக்கு மட்டுமல்ல; அவர்களது படைப்புகளுக்கும் பொருந்தும். பாட்டியின் சமையலை ருசித்துப் பார்க்கும் பேரக்குழந்தைகள் அவர்களது கலைநயத்தையும் கலைப்பொருட்களாகப் பார்க்கும் ஏற்பாடுதான் இந்தப் போட்டி என்கிறது இந்த மூவர் குழு.

“வெளிநாடுகளில் நடக்கும் இந்தக் கலைத் திருவிழா, இந்தியாவில் முதன்முறையாகச் சென்னையில் வரும் ஜனவரி மாதம்  25- ம் தேதி நடைபெறவுள்ளது. சென்னைக் கண்காட்சியை வெளிநாட்டுப் படைப்புகளும் அலங்கரிக்கவிருக்கின்றன. கண்காட்சியில் கலைநயத்துடன் கூடிய படைப்புகளைக் காட்சிப்படுத்த விரும்புவோர் எங்கள் இணையதளத்துக்குச் சென்று தகவல் அறியலாம்.

கூடுதல் விவரம் தேவைப்படுவோர் இணையதளத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும் மின்னஞ்சலைத் (contact@indiaquiltfestival.com) தொடர்புகொள்ளலாம்” என்கிறார் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் வர்ஷா சுந்தரராஜன்.

இந்தப் போட்டியில் பங்கேற்கக் கடைசி நாள் டிசம்பர் 31. போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகளை சர்வதேச நடுவர்கள் தேர்வு செய்வார்கள். தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் வரும் ஜனவரி 25-ம் தேதி காட்சிக்கு வைக்கப்படும்.  இந்தப் போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு ஜனவரி 26 அன்று பரிசு வழங்கப்படும்.

“இந்தப் போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு வெளி ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல் நூல், தையல் மிஷின், அதைச் சார்ந்த தொழில்களும் மேம்படும். இந்த வாய்ப்பை இல்லத்தரசிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்கின்றனர் கண்காட்சி அமைப்பாளர்கள். 

SCROLL FOR NEXT