பெண் இன்று

பக்கத்து வீடு: மக்களின் மனம் கவர்ந்த அதிபர்

எஸ். சுஜாதா

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளின் மூலம் உலக அளவில் பிரபலமான பெயர் எது தெரியுமா? கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியும் இல்லை; இரண்டாம் இடத்தைப் பிடித்த குரேஷிய அணியும் இல்லை. கொலிண்டா கிராபர் கிதாரோவிச் என்பதுதான் அந்தப் பெயர்.  கால்பந்து ரசிகர்களின் மனங்களை மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மக்களின் மனங்களில் இடம்பிடித்த கொலிண்டா, குரேஷியாவின் அதிபர்.

‘வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்போது பின்னால் இருப்பதும் தோல்வியும் துக்கமும் அடையும்போது முன்னால் இருப்பதும் நல்ல தலைவனுக்கு அழகு’ என்பார் நெல்சன் மண்டேலா. அவரது கூற்றை கொலிண்டா மெய்ப்பித்திருக்கிறார்.

குரேஷிய வீரர்களை உற்சாகப் படுத்துவதற்காக, சொந்தச் செலவில் விமானத்தில் பொதுப் பிரிவில் ரஷ்யாவுக்குச் சென்றார். குரேஷிய வீரர்கள் பங்கேற்ற கால் இறுதிப் போட்டியையும் இறுதிப் போட்டியையும் பார்த்தார். அதிபர்களுக்கான விஐபி பகுதியில் அமராமல் மக்களோடு மக்களாக அமர்ந்திருந்தார்.

குரேஷிய கொடியின் சிவப்பு வண்ணத்தில் டீஷர்ட் அணிந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார். பரபரப்பான இறுதிப் போட்டியில் ஜாம்பவான் பிரான்ஸை எதிர்த்து விளையாடிய சின்னஞ்சிறு நாடான குரேஷியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது. தோல்வியில் அழுத வீரர்களைக் கட்டிப்பிடித்து, கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொன்ன கொலிண்டாவை உலகமே அதிசயமாகப் பார்த்தது.

படிப்பும் அரசியலும்

கொலிண்டா, குரேஷியாவின் முதல் பெண் அதிபர். இவர், கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய பெற்றோர் பண்ணையும் கசாப்புக்கடையும் வைத்திருந்தனர். படிப்பில் ஆர்வம்கொண்ட கொலிண்டா, 17-வது வயதில் மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் அமெரிக்காவின் நியூமெக்சிகோ பள்ளியில் சேர்ந்தார்.

நாடு திரும்பிய பிறகு, மனித நேயம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றார். ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்திலும் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலும் மேற்படிப்பை முடித்தார். சர்வதேச உறவுகள் குறித்து முனைவர் பட்டமும் பெற்றார். பல்வேறு அரசுப் பொறுப்புகளைத் திறம்பட வகித்தார்.

1993-ல் குரேஷிய ஜனநாயக யூனியனில் சேர்ந்தார்.  2005 முதல் 2008 வரை வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். 2008 – 2011 வரை அமெரிக்காவுக்கான தூதராகச் செயல்பட்டார். 2011 – 2014 வரை நேட்டோவின் உதவிச் செயலர் ஜெனரலாகப் பணியாற்றினார். இந்தப் பதவிக்கு அமர்த்தப்பட்ட முதல் பெண் என்ற சிறப்பையும் கொலிண்டா பெற்றார். 2015-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று, குரேஷிய அதிபரானார்.

இவருக்கு குரேஷியன், ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துக்கீசிய மொழிகள் நன்றாகத் தெரியும். இத்தாலியன், ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆண்-பெண் திருமணத்தைப் போலவே தன்பால் ஈர்ப்பாளர்  திருமணங்களுக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். தன் மகன் தன்பால் திருமணம் செய்துகொண்டாலும் அதை வரவேற்பதாகச் சொல்லியிருக்கிறார். கருக்கலைப்பைத் தடுப்பதன் மூலம் எந்தப் பிரச்சினையும் தீர்ந்துவிடுவதில்லை. கரு உருவாவதற்கு முன்பே அதைத் தடுத்துக்கொள்வதற்கான விழிப்புணர்வு ஊட்டப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

விளக்கம் தேவையில்லை

நீண்ட கால காதலரான ஜாகோவ் கிதாரோவிச்சை, 1996-ல் மணந்துகொண்டார். கொலிண்டா, அரசாங்கத்தில் உயர் பொறுப்புகளை வகித்ததால் ஜாகோவ் முழு நேரத் தந்தையாக மாறி மகளையும் மகனையும் கவனித்துக்கொண்டார். இதனால் தனது தொழில் வாழ்க்கையை அவர் முற்றிலுமாகக் கைவிட நேர்ந்தது.

குழந்தைகள் வளர்ந்த பிறகு, மென்பொருள் நிறுவனத்தையும் கார்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்திவருகிறார். மகள் கட்டாரினா, பனிச் சறுக்கு விளையாட்டு வீராங்கனையாக இருக்கிறார். மகன் லூகா படித்துக்கொண்டிருக்கிறார். அமைதியான, அழகான வாழ்க்கை வாழ்ந்துவரும் கொலிண்டா, பொதுவாழ்க்கையில் சில சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்.

2010-ல் அமெரிக்கத் தூதராக இருந்தபோது, அலுவலக ரீதியாகக் கொடுத்த காரை, இவருடைய கணவர் தனிப்பட்ட வேலைக்குப் பயன்படுத்திக்கொண்டார் என்ற குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது. கணவர் பயன்படுத்திய காருக்கான முழுத் தொகையையும் உடனடியாகச் செலுத்தி, அந்தப் பிரச்சினையில் இருந்து கொலிண்டா வெளிவந்தார். சமீபத்தில் ஒரு கூட்டத்தில் இரண்டாம் உலகப் போரைப் பாராட்டி பேசியதற்காகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

பெண் என்பதற்காகத் தனிப்பட்ட தாக்குதல்களுக்கும் உள்ளாகியிருக்கிறார். நடிகை டையமண்ட் ஃபாக்ஸ், அமெரிக்க மாடல் கோகோ ஆஸ்டின் இருவரது கவர்ச்சிப் படங்களையும் கொலிண்டா என்று இணையதளங்களில் தவறாகப் பரப்பிவருகிறார்கள். ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கானோர் இவரைப் பின்தொடர்கின்றனர். உண்மை இல்லாத விஷயங்களுக்காக வருத்தப்படவோ விளக்கம் கொடுக்கவோ தேவையில்லை என்று சொல்லும் கொலிண்டா அதைக் கடைப்பிடித்தும்வருகிறார்.

SCROLL FOR NEXT