பெண் இன்று

யானைகளின் தோழி!

ஆர்.சி.ஜெயந்தன்

சொரைடா சல்வாலா - தாய்மையின் வலிமைக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டு. இவர் தாய்லாந்து நாட்டில் வாழ்வை சாதனையாக்கிக் காட்டியிருக்கும் ஒர் அசாதாரணப் பெண். 40 வயதாகும் சொரைடா, எட்டு வயதுப் பள்ளி மாணவியாக மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் அது.

காலை 9 மணிக்கு அப்பாவின் அருகில் அமர்ந்து பள்ளிக்குக் காரில் சென்று கொண்டிருந்தார். சாலையில் வட்ட வடிவில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு மகளைக் கூட்டத்தின் நடுவே அழைத்துச் சென்றார் அப்பா. அங்கே ஒரு குட்டி யானை தன் வலது கால் வெடித்துச் சிதறிய நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது.

இந்தக் காட்சியைக் கண்டதும் சிறுமி சொரைடாவுக்குக் கண்கள் கலங்கிவிட்டன. அத்தனை வலியிலும் தன் துதிக்கையைத் தூக்கி, என்னைக் கொஞ்சம் தூக்கிவிடேன் என்பதுபோல சொரைடாவைப் பார்த்தது அந்த யானை. இப்போது கலங்கியிருந்த சொரைடாவின் கண்கள் கட்டுப்பாடின்றி வழிந்து விட்டன.

தவறு செய்துவிட்டதுபோல் உணர்ந்த சொரைடாவின் தந்தை மகளை அங்கிருந்து உடன் அழைத்துக்கொண்டு பள்ளிக்கு விரைந்தார். அப்பாவிடம் சொரைடா இப்படிக் கேட்டாள். “அப்பா இந்த யானையை நம் வீட்டில் இருக்கும் டிரக்கில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லலாமா?”

“அதற்கு வாய்ப்பில்லை யம்மா. நமது நாட்டில் யானைகளுக்கென்று மருத்துவமனை கிடையாது. இன்னும் சிறிது நேரத்தில் அதைக் கருணைக் கொலை செய்துவிடுவார்கள்” என்றார் அப்பா.

அதிர்ந்துபோனாள் சிறுமி சொரைடா. இந்தச் சம்பவம் சொரைடாவை ஆழமாகப் பாதித்தது. யானையை அரசுச் சின்னமாக வைத்திருக்கும் நமது (தாய்லாந்து) நாட்டில் யானைகளுக்கு மருத்துவமனை இல்லையே என்று அப்பாவுடன் விவாதித்தார். நான் பெரியவள் ஆனதும் படித்து யானைகளுக்காக ஒரு மருத்துவமனையை உருவாக்குவேன் என்றாள். இதைக் கேட்டு அப்பா சிரித்துக்கொண்டார்.

ஆனால் சொரைடா தன் லட்சியத்தை நோக்கி மெல்ல நகர்ந்து அதைச் சாதித்துக் காட்டினார்.

கால்நடை மருத்துவம் படித்துப் பட்டம்பெற்ற சொரைடா, தாய்லாந்து நாட்டில் வாழும் பல்லாயிரக்கணக்கான ஆசிய யானைகளின் பிரச்சினைகள் என்ன என்பதை ஆராய்ந்தார். எல்லைப் பிரச்சினை மற்றும் உள்நாட்டுப் புரட்சி காரணமாக, தாய்லாந்தை ஒட்டிய மியன்மார், கம்போடிய எல்லைப் பிராந்தியங்களில் உள்ள காடுகளில் புரட்சியாளர்களும், கூலிப்படையினரும் புதைத்து வைத்த பல கண்ணி வெடிகள் யானைகளை முடமாக்கி வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பத்து ஆண்டுகளுக்கு முன் இப்படிக் கண்ணி வெடியில் ஒரு காலை இழந்த மொதோலா என்ற பெண் யானையைத் தத்தெடுத்து, அதற்குச் சிகிச்சை செய்தார். இதற்காகத் தன் தந்தையின் பணத்தைப் பெருமளவில் செலவு செய்ய ஆரம்பித்தார்.

பிறகு மோஷா என்ற குட்டி யானையும் வந்து சேர்ந்து கொண்டது. இதுவும் கண்ணி வெடியில் காலை இழந்த குழந்தை.

இந்த யானைகளை வைத்துக் கொண்டு 1993-ம் ஆண்டு சொரைடா தாய்லாந்தின் ஸங்மாய் நகரில் ஒரு யானைகள் மருத்துவமனையை உருவாக்கினார். இதுதான் உலகின் முதலாவது யானைகள் மருத்துவமனை.

ஆசிய யானைகளின் நண்பர்கள் என்ற அமைப்பு இதை வெற்றிகரமாக நடத்த சொரைடாவுக்கு நிதியுதவி அளிக்கிறது. இதுவரை இங்கே நான்காயிரம் யானைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கண் நோய் தொடங்கி, கத்திக் காயம், குண்டு காயம், எலும்பு முறிவு, கார் விபத்து, கண்ணி வெடி எனப் பல்வேறு சம்பவங்களில் கால்களை இழக்கும் யானைகளுக்கு,

தனது குழுவினருடன் இங்கு சிகிச்சை அளிக்கிறார் சொரைடா.

யானைகளுக்குப் பிரசவமும் பார்க்கிறார். ஒரு முழுமையான மருத்துவமனையாக இதை வளர்த்தெடுத்த பிறகு அதன் அடுத்த கட்டமாக, கால்களை இழந்த யானைகளுக்கு மனிதர்களுக்குப் பொருத்துவது போல் செயற்கைக் கால்களைப் பொருத்தி அவற்றை வெற்றிகரமாக நடக்கவைக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை நம்பி சோதனைகள் செய்ய ஆரம்பித்தார். பிறகு அதில்100 சதவிகிதம் வெற்றியும் பெற்றுவிட்டார் சொரைடா. தனது கனவு மருத்துவமனைக்கு முதன்முதலில் காயங்களோடு வந்து சேர்ந்த மொதோலா, மோஷா ஆகிய இரு யானைகளுக்கும் முதன்முதலாக செயற்கைக் கால் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இன்று நூற்றுக்கணக்கான தாய்லாந்து யானைகள் இழந்துவிட்ட கம்பீர நடையை சொரைடாவால் திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கின்றன.

சொரைடாவின் இந்தச் சாதனையைக் கேள்விப்பட்ட அமெரிக்காவின் ஆவணப்பட இயக்குநர் விண்டி போர்மேன், சொரைடாவின் இந்த சாதனைப் பயணத்தை, ‘தி ஐஸ் ஆஃப் தாய்லாந்து’ (The Eyes of Thailand) என்ற பெயரில் ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். உலகப்பட விழாக்களின் ரசிகர்களின் கண்களைப் பணிக்கச் செய்தபடி வலம் வந்துகொண்டிருக்கிறது சொரைடாவின் பேரன்பு. சொரைடா என்றால் தாய்லாந்து மொழியில் பாதுகாப்புத் தருபவள் என்று பொருள்.

SCROLL FOR NEXT