பெண்கள் என்றாலே பலவீனமானவர்கள் என்ற கருத்து ஆணாதிக்கச் சமூகத்தால் நம் மனங்களில் ஏற்றப்பட்டுள்ளது. வீட்டிலும் சமூகத்திலும் புராணக் கதைகளிலும் பெண்களால்தான் பிரச்சினை தொடங்கியதாகக் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது.
பெண் சமூகத்தின் மீது குற்றம் சுமத்துவதன் தொடர்ச்சியாக நம் வீடுகளில் கடைப்பிடிக்கப்படும் பெண்களுக்கு எதிரான மூடப்பழக்கங்கள் எண்ணில் அடங்காதவை. பல நேரம் இது போன்ற மூடப்பழக்கங்கள் அறிவியல்பூர்வமானவை என நம்புவோரும் உண்டு.
உதாரணத்துக்கு, பெண்கள் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால் வீட்டுக்கு ஆகாது, வெளியே போகும்போது கணவனை இழந்த பெண் எதிரில் வந்தால் கெட்ட சகுனம், கிரகணம் பிடிக்கும் நேரத்தில் காய்கறி அரிந்தாலோ கீரையைக் கிள்ளினாலோ குழந்தை ஊனமாகப் பிறக்கும், தனியாகப் பயணிக்கும்போது கையில் வேப்பிலையை எடுத்துக்கொண்டு போக வேண்டும் எனப் பெண்களுக்காக இந்தச் சமூகம் ஏற்படுத்தி வைத்துள்ள மூடப்பழக்கங்கள் ஏராளம். கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படும் இந்தக் கட்டுப்பாடுகளில் எந்த அளவுக்கு அறிவியல் உள்ளது? ஏன் அவை பெண்களின் மீது மட்டும் திணிக்கப்படுகின்றன?
அறிவியல் காரணங்கள்
கிரகணம் பிடிக்கும் நேரத்தில் ஏதாவது வேலை செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்பதில் எந்த அறிவியல் காரணமும் இல்லை என்கிறார் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தலைவர் வசந்தாமணி.
“அதேபோலத்தான் மெட்டி அணிந்தால் கருப்பை வலுப்பெறும் என நம்புவதும். நம் உடலில் உப்பின் அளவு அதிகரித்தால் கை, கால் விரல்களில் வீக்கம் ஏற்படுவது இயல்பு. கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல் வீக்கத்தை உணர்த்துவதற்கே மெட்டி உதவுகிறது” என்கிறார் வசந்தாமணி. பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பை உருவாக்க முயல்வதே இன்றைய தேவையே தவிர, இது போன்ற மூடநம்பிக்கைகளைச் சொல்லிப் பெண்களை முடக்கிவைப்பதல்ல.
கடவுளின் கோபம் எங்கே போனது?
“பெண்களைத் தங்களுடைய உடைமையாக ஆண்கள் என்றைக்குக் கருதத் தொடங்கினார்களோ, அன்று முதல் பெண்கள் மீதான அடக்குமுறையும் தொடங்கிவிட்டது. மதத்தின் பெயராலும் ஒழுக்கத்தின் பெயராலும் பெண்கள் என்னென்ன செய்யவேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் இன்றும் தொடர்கின்றன. காரணம், பெண்களுக்கான சுதந்திர வெளி இன்றும் ஏற்படுத்தப்படவில்லை.
பேய் பிடித்துவிடும், பிசாசு பிடித்துவிடும் எனப் பயமுறுத்திப் பெண்களை வீட்டுக்குள் அடைத்துவைக்கும் முறை அந்தக் காலம் தொட்டு இன்றுவரை தொடர்கிறது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் குழந்தை வளர்ப்பில் மகன்-மகள் இருவருக்கும் சம உரிமை வழங்க வேண்டும். பெரியவர்கள் சொன்னார்கள் என எந்த விஷயத்தையும் ஆராயாமல் அதைப் பெண் குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது.
பெண்களை வீட்டில் பூட்டி வைப்பதைவிட அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான் பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மூடப்பழக்கங்களை ஒழிக்க முடியும்” என்கிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என். மாதவன்.
பாஞ்சாலி சிரித்ததால்தான் பாரதப் போர் நடந்தது எனப் போகிற போக்கில் சொன்னவர்கள், இன்று கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளத்துக்கும் பெண்களையே காரணம் என்கிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை ஏன் அனுமதிக்கக் கூடாது என்று நீதிபதிகள் கேட்டதுதான் காரணம் எனச் சொல்கிறார்கள்.
காஷ்மீர் கதுவா பகுதியைச் சேர்ந்த சிறுமி கோயிலுக்குள் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டபோது, அந்தக் கடவுளின் கோபம் எங்கே போனது என்ற கேள்விக்கு யாரிடம் பதில் இருக்கிறது?