பெண் இன்று

உனக்கு மட்டும்: ஆம், நான் விவாகரத்தானவள்!

செய்திப்பிரிவு

நிறைவான இல்லற வாழ்க்கை குறித்துப் பொதுவாக யாரிடம் கேட்பார்கள்? பல ஆண்டுகள் ஒற்றுமையோடு வாழும் தம்பதியிடம்தானே. ஆனால், என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் சறுக்கலைச் சந்தித்தவர்களே நிறைவான வாழ்க்கை குறித்துச் சொல்ல தகுதியானவர்கள். நம்பிக்கை வைத்துத் தொடங்கிய ஒன்றில் தோற்று, மீண்டெழுந்து வந்த அவர்களின் அனுபவங்களும் ஆலோசனைகளும் உண்மைக்கு நெருக்கமானவை.

எல்லாம் சரி, விவாகரத்தான பெண்ணால் அதைச் சொல்ல முடியுமா? ஏன் இந்தக் கேள்விக்குறி? சொல்ல முடியுமென்று முற்றுப்புள்ளி வைக்க இயலாதா?

திருமண பந்தம் பற்றிப் பொன்விழா கண்ட தம்பதிகளைவிட, இரண்டு வருடங்களில் அந்தப் பந்தத்தை முறித்துக்கொண்டவர்கள் இன்னும் முழுமையாகப் பேச முடியாதா? முடியாது என்கிறது இச்சமூகம்.

நான் முப்பதுகளில் அடியெடுத்து வைத்திருக்கும் பெண். எந்த வெட்கமும் தயக்கமும் இல்லாமல் சொல்கிறேன், எனக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காதல்கள் இருந்தன. பல காரணங்களால் அவை முறிந்தும் போயின. ஒரு பந்தம் திருமணம்வரை கூட்டிச்சென்றது. காதலில், நட்பில், அன்பில் மூழ்கித் திளைக்கவைத்தது. பின் அதற்குக் கசந்ததோ என்னவோ, அந்தக் காதல் என்னைத் திருப்பி அனுப்பியது.

திருமணம் வேண்டாமென்று இருந்த காலத்தில், ஒரு காதல் தேடி வந்தது. இணையின் இருப்பை ரசிக்கத் தொடங்கும் தருணத்தில் அது உதறிச் சென்றது. மனம் குழம்பி, தவித்து நின்ற பொழுதில், உனக்குத் திருமணம் சரிப்பட்டு வராதென ஊர் சொன்னது. அது உண்மையோ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

என் திருமண வாழ்க்கை குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்ததால், என் இணையுடன் இருக்கும் நட்பை நான் ஏன் முறித்துக்கொள்ள வேண்டும்? எங்களுக்கு மட்டுமே புரியக்கூடிய காரணங்களால் நாங்கள் விலகினோம். ஆனால், அந்தக் காரணங்கள் எங்கள் நட்பை எப்படித் தவிர்க்கும்? விவாகரத்துக்குப் பின், நட்பு தொடரக் கூடாது என இச்சமூகம் ஏன் எதிர்பார்க்கிறது?

நான் தோற்கவில்லை

மற்றவர்களின் பார்வையில் நான் தோற்றுப்போனவள். ஒரு திருமண பந்தத்தைச் சரியாகக் கையாளத் தெரியாமல், இவள் எப்படி மற்றவர்கள் வாழ்க்கைக்கு அறிவுரை கூறுவதை ஏற்றுக்கொள்வதென்ற கேள்வி மற்றவர்களுக்கு. ஏன் புத்தகம் வாசிக்க வேண்டும், ஏன் பயணிக்க வேண்டும், ஏன் ஓரினச்சேர்க்கையாளர்களை அங்கீகரிக்க வேண்டும், ஏன் நடனம் ஆட வேண்டும் என்ற எனது புரிதலையும் விருப்பத்தையும் இந்தத் திருமண முறிவு கொச்சைப்படுத்துமா?

ஒரு மணவாழ்வு கசந்ததென்று அவர்களாகவே நினைத்துக்கொண்டு, எனது சகலமும் கசப்பானதென நினைக்கும் அவர்களது அறியாமை வேதனையைத் தருகிறது. விவாகரத்தான ஆண்களைவிட, பெண்கள் தம் வாழ்க்கையை வழக்கமாக எதிர்கொள்ள அவர்களே தயாரானாலும்,  அதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பதே நிதர்சனம்.

விவாகரத்து ஆன பெண்களின் வாழ்க்கையும் வாழ்வைப் பற்றிய புரிதலும் ஓர் இரவில் நிறம் மாறிவிடக்கூடியவையல்ல. அவர்களின் பாதையில் நாம் ஒளி சேர்க்கத் தேவையில்லை. இருளைப் பரப்பாமல் இருப்பதே ஆகச் சிறந்த செயல்.

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

SCROLL FOR NEXT