பெண் இன்று

அழகிய கண்ணே: எல்லாமே பேசலாம்

டாக்டர் எஸ்.யமுனா

குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் எவ்வளவுதான் கவனத்துடன் பார்த்துக்கொண்டாலும் பல நேரம் அவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள். பள்ளிக்குச் சென்றுவிட்டால் அங்குள்ள  கழிவறையைத்தான் அனைத்து மாணவர்களும் பயன்படுத்த வேண்டும். 

நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே கழிவறையைப் பயன்படுத்தும் சூழலில் அவர்களுக்குச் சிறுநீரக நோய்த்தொற்று, ஆசனவாய் பகுதியில் எரிச்சல், கட்டி போன்றவை ஏற்படலாம். மேலும், பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளின் படிப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதி அளவுகூட அவர்களின் உடலைப் பராமரிக்கக் கற்றுத்தருவதில் கொடுப்பதில்லை.

கிருமிகளின் கூடாரம்

பெற்றோரின் இந்த அக்கறையின்மையால் குழந்தைகளுக்கே பாதிப்பு அதிகம். ஒன்றாம் வகுப்பு படிக்கும் பிரியாவுக்குச்  சிறுநீர்ப் பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டது. வலியும் எரிச்சலும் அதிகமானதால் சிறுநீர் வந்தால்கூட, அதை வெளியேற்ற பிரியா பயப்பட்டாள். மருத்துவரின்  ஆலோசனைக்குப் பிறகே நிலைமை சீரானது.  குழந்தைகளுக்குத் தங்களுடைய உடலை எப்படிச் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என எட்டு, ஒன்பது வயதுவரை ஆன பிறகும்  கூட பெற்றோர் முறையாகக் கற்றுக்கொடுப்பதில்லை.

மேலும், இன்றைக்குப் பெரும்பாலான வீடுகளில் வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துகிறார்கள். இதனால் குழந்தைகள் மலம் கழித்த பின்னர்  ஹாண்ட் ஷவர் மூலம் தாங்களாகவே சுத்தம்செய்துகொள்கிறார்கள். பல குழந்தைகள் அதைச் சரியாகக் கையாளத் தெரியாததால் ஆசனவாய்ப் பகுதி முழுமையாகச் சுத்தமாகாமல் கிருமிகள் தங்கிவிடும். நாளடைவில் இந்தக் கிருமிகள் ஆசனவாய்ப் பகுதியில் கட்டிகள் உருவாகக் காரணமாகின்றன. இதைக் கவனிக்காமல்விட்டால் கட்டி பெரிதாக வளரும். அதேபோல் ஆண், பெண் குழந்தைகள் சிறுநீர் கழித்த பிறகு அந்தரங்கப் பகுதியைத் தண்ணீரால் சுத்தம்செய்யப் பெற்றோர்  கற்றுக்கொடுக்க வேண்டும்.

இதுபோன்ற நோய்த்தொற்றுகளைத் தவிர்க்கக் குழந்தைகளை இரண்டு வயதிலிருந்தே இந்திய முறை கழிவறையைப் பயன்படுத்தப் பழக்கப்படுத்த வேண்டும். மேற்கத்திய பாணி கழிவறையைவிட இதுதான் நல்லது.  மலம் கழித்த பிறகும் குளிக்கும்போதும் அந்தரங்கப் பகுதியைச் சுத்தம் செய்ய வேண்டும்

எனக் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். ஆரம்பத்தில் அவர்களின் அருகிலிருந்து முறையாகச் செய்கிறார்களா என்பதைக் கவனிப்பது அவசியம்.

தயக்கத்தை உடையுங்கள்

இன்றைக்குத் தெருவுக்குத் தெரு ஃப்ரைடு ரைஸ், சிக்கன் 65, பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுக் கடைகள் முளைத்துவிட்டன. இதனால் சிறுவயதிலேயே பல குழந்தைகள் வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சியுடன் காணப்படுகிறார்கள். குறிப்பாக,  பெண் குழந்தைகள் உணவு முறை மாற்றம், மரபுவழி பிரச்சினைகள் போன்றவற்றால் எட்டு, ஒன்பது வயதிலேயே பருவ வளர்ச்சி தொடங்கிவிடுகிறது.

ஆரம்பகால உடல்வளர்ச்சியின் போது பெண் குழந்தைகளுக்கு மார்பகப் பகுதி விரிவடைவது, ஆண் குழந்தைகளுக்குக்  குரல் உடைவது, தூக்கத்தில் விந்து வெளியேறுவது போன்ற மாற்றங்கள் நிகழும். இந்தப் பருவத்தில் வளரிளம் குழந்தைகள் பயத்துடன் கூடிய  குழப்பமான மனநிலையில் இருப்பார்கள். தனக்கு ஏற்படும் சந்தேகங்களை யாரிடம் பகிர்ந்துகொள்வது என்ற தயக்கம் அவர்களிடம் காணப்படும். பெற்றோராகிய நாமும் இதுபோன்ற மாற்றங்களைக் கடந்து வந்திருப்போம். அதனால் குழந்தையின் வளர்ச்சியைப் பெற்றோர் புரிந்துகொண்டு, குழந்தைகளின் உடல் மற்றும் மனரீதியான மாற்றங்களை எடுத்துச் சொல்ல வேண்டும்.

உதாரணத்துக்கு, திரைப்படத்தில் திருமணக் காட்சி முடிந்த பிறகு ஒரு காதல் பாடல் வரும். அதன் பிறகு அவர்களுக்குக் குழந்தை பிறந்துவிட்டதுபோல் படமாக்கியிருப்பார்கள்.  இதைப் பார்க்கும் குழந்தைகள், “அம்மா நீயும் அப்பாவும் இப்படித்தான் மரத்தைச் சுற்றிப் பாட்டு பாடியதால்தான் நான் பிறந்தேனா?” எனக் கேட்பார்கள். அப்போது, “ஏய் வாயை மூடு. இப்படியெல்லாம் பேசக் கூடாது” எனச் சொல்லி அவர்களைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்கக் கூடாது. “இல்லப்பா, நானும் அப்பாவும் அன்பாக இருந்தோம். அதனால்தான் நீ பிறந்தாய்” என அந்த நிமிடத்துக்கான எளிமையான பதிலை எடுத்துச்சொல்லி வேறு விஷயத்தைப் பற்றிப் பேசத் தொடங்க வேண்டும்.

குழந்தைகள் சுயமாகச் சிந்தித்துப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கு முன் அவர்களின் முதல் ரோல் மாடல் பெற்றோர்தான். பெற்றோரிடமிருந்துதான் குழந்தைகள் தங்களுடைய சமூகப் பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொள்கிறார்கள். அதைப் புரிந்துகொண்டு செயல்படுவதே பெற்றோரின் கடமை.

தொகுப்பு: எல்.ரேணுகா தேவி
(நிறைவடைந்தது)
கட்டுரையாளர், குழந்தைகள் நல மற்றும் வளரிளம் பருவ சிறப்பு மருத்துவர்.
தொடர்புக்கு: dryamunapaed@yahoo.com

SCROLL FOR NEXT