வரலாற்றில் பெண் இனம் மட்டும்தான் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு ஒடுக்குமுறையைச்
சந்திக்கக்கூடியதாக இருந்துகொண்டிருக்கிறது. பெண்ணின் தேவையைச் சமையலுக்கும் வாரிசைப் பெற்று சந்ததியைப் பெருக்குவதற்குமான எல்லைக்கோட்டுக்குள் வரையறை செய்துவைத்து அதைப் பலமாகக் காவல் காத்து வருவது இந்தச் சமூகம்.
அதனால்தான் தந்தை பெரியார் சொன்னார், “பெண்களை எந்த நிலையிலும் சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்பதே மத சம்பிரதாயம்” என்று. அப்படி மதத்தோடும் சாதியின் ஊடாகவும் பின்னிப்பிணைந்து கெட்டித் தட்டிக் கிடந்த சமூக கட்டமைப்பைத் தகர்ப்பதென்பது அத்தனை எளிதல்ல. அதற்கு ஆகப்பெரும் கருத்தியலும் துணிவும் வேண்டும். அப்படி அந்த நிலையிலிருந்துதான் பெண்ணின் இன்றைய நிலையில் கிடைத்திருக்கிற சமத்துவத்தை நாம் பார்க்க வேண்டியதிருக்கிறது; அவர்களது வாழ்க்கை மாற்றத்தை அணுக வேண்டியிருக்கிறது.
தான் கல்வி பயின்ற பெரியாரிடம் இருந்து அவரது கருத்துகளோடு தனது ஆளுமையை மிகச் சிறப்பாக வடிவமைத்துக் கொண்டவரான கலைஞர் மிகப் பெரிய மானுடனாகவும் திகழ்ந்தார். சமூக விடுதலை என்பது பெண்ணின் விடுதலை இல்லாமல் நிகழாது என்பதை அவர் அறிந்ததால்தான், அவர் தனது ஆட்சிக் காலத்தில் பெண் விடுதலைக்கான அடிகளைக் கவனமாக எடுத்துவைத்தார்.
பெண்ணின் உயரத்தை ஆணுக்கு நிகராக மாற்றுவதற்கான சட்டங்களைச் சிந்தித்துச் செயல்படுத்தினார். ஒரு பெண்ணின் விடுதலை எதன் அடிப்படையில் நிகழ வேண்டும், அவள் எதனால் பிறரைச் சார்ந்து வாழ வேண்டும், எதெல்லாம் அவளது விடுதலைக்குத் தடையாக இருக்கிறது என்பதை உணர்ந்ததால் பிறந்தவையே அவரது சட்டங்கள் பலவும்.
வாய்ப்பு தந்த இட ஒதுக்கீடு
அண்ணல் அம்பேத்கர், பெண்ணுக்குச் சொத்தில் உரிமை உண்டென நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற இயலாமல் தோல்வியுற்றபோது, இந்தியாவிலேயே முதல்முறையாகப் பெண்ணுக்குச் சொத்தில் உரிமை உண்டெனத் தமிழ்நாட்டில் கலைஞர்தான் சட்டம் இயற்றினார்.
பெண் என்பவள் உணர்வற்ற பிண்டம் என்ற சமூக அமைப்பின் நம்பிக்கையிடம் அண்ணல் அம்பேத்கர் தோற்றபோதும் அவளுக்கு உடல் மட்டுமல்ல: உணர்வுகளும் உண்டென உறுதிப்படுத்தினார் கலைஞர். என்னைப் பொறுத்தவரை அது ஒரு சட்டம் மட்டுமல்ல; பறைசாற்றலும்கூட. அதேபோல அரசுப்பணியில் 30 சதவீதம் பெண்ணுக்கு இட ஒதுக்கீடும் பள்ளி ஆசிரியைகளாக, காவல்துறை அதிகாரிகளாக மகளிர் பணியாற்ற சொல்லிய சட்டங்களும் உள்ளாட்சி அமைப்பில் 33 சதவீத இட ஒதுக்கீடும் சட்டமாக ஆக்கப்பட்டபோதும் மாபெரும் அரசியல் நகர்வாக அது மாறியது.
அவர் இயற்றிய சட்டங்கள் பெண்களை வெளியுலகத்துக்குக் கொண்டுவந்ததாக நாம் நினைக்கலாம். அதைவிட இந்தச் சமூக அமைப்பிடம் ஒரு புத்தம் புதிய பிம்பத்தைப் பெண்கள் குறித்துக் கட்டமைத்தார் கலைஞர். பெண் சமைக்க மட்டும்தான் தகுதியும் திறனும் கொண்டவள் என்ற பழைய பிம்பத்தைச் சமூகத்திடம் மட்டுமல்ல; பெண்களிடமிருந்துமே உடைத்து எறிந்தார். இதுதான் மிக முக்கியமான விஷயம்.
கல்வி எனும் கைவிளக்கு
சட்டம் சில மாற்றங்களை உண்டாக்கும். அதைவிடச் சமூகத்தின் அசைக்கவும் எனச் செய்துகாட்டினார். அதேபோல அவர் கொண்டுவந்த எட்டாவது வரை படித்த பெண் குழந்தைக்குத் திருமண உதவித் திட்டம், பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துவந்தது. இந்தியாவிலேயே முதன்முறையாக அவரால் அமைக்கப்பட்ட சுய உதவிக் குழுக்கள் கல்வி கற்காத பெண்களது வாழ்க்கையை மாற்றியமைத்துப் பொருளாதார விடுதலைக்கு வித்திட்டன.
கல்வியும் சொத்தும் பெண் விடுதலைக்கு ஆதாரமான விஷயம் என்ற மாபெரும் சேதியை இந்தத் திட்டங்களின் மூலம் முன்வைத்தார். அதேபோல ஏழைப் பெண்கள் பட்டப்படிப்புவரை செல்ல வறுமை தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இலவச பட்டப் படிப்பு எனும் சட்டத்தை முதுகலைவரை கொண்டுவந்தார். தமிழகப் பெண்களின் கல்வி வளர்ச்சியில் புரட்சியை அவர்தான் கொண்டு வந்தார்.
பெண்கள் கர்ப்ப காலத்தில் ரத்தசோகை நோயால் பாதிக்கப்படுவதைக் கவனத்தில்கொண்டு அவர்களது ஊட்டச்சத்துக்குக் கர்ப்பகால நிதியை ஒதுக்கீடு செய்ததன் வழியே, குடும்பங்களிடமும் பெண்களிடமும் கர்ப்ப காலத்தில் பெண்ணுக்குச் சத்தான உணவு அவசியம் என்ற விழிப்புணர்வையும் சேர்த்தே அளித்தார்.
அனைவருக்குமான திறவுகோல்
இன்று நம் கண் முன்னால் ஒரு அதிகாரியாக, ஆசிரியையாக, என்னைப்போல அரசியல்வாதியாக இன்னும் பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பில்-அடையாளத்தில் தெரிவது அவர் போட்ட சட்டங்கள் மூட்டிய தீதான். விளிம்புநிலை மனிதர்களை எப்போதும் தனது சிந்தனைகளில் வைத்தே அவர் இயங்கிக்கொண்டு இருந்தார். பெண்களையும் விளிம்புநிலைக்குள் வைத்துதான் பார்த்தார்.
இட ஒதுக்கீடு எனும் திறவுகோலை அவர் எப்போதும் தனது கைகளில் வைத்திருந்தார். அதன் வழியே எல்லோருக்குமான கதவுகளைத் திறந்துவைத்தார். யாருக்கும் யாரும் அடிமைகள் அல்ல, பிறப்பால், கருத்தால், நம்பிக்கைகளால் யாரும் யாரையும் அடிமைப்படுத்த விடமாட்டேன் என்று வரிந்து கட்டிக்கொண்டு வாழ்நாளெல்லாம் நின்ற மாபெரும் போராளி அவர்.
நீதிக்கும் அநீதிக்குமிடையேயான ஒரு எழுத்தை அழித்தொழிக்கத் தான் பதவிக்கு வந்த காலங்களில் எல்லாம் போராடினார். அரவாணிகள் என அழைக்கப்பட்டு குடும்பத்தாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டவர்களுக்காக அவர் கொடுத்த அங்கீகாரமும் ‘திருநங்கை’ எனும் பெயர் குறிப்பிடத்தகுந்தவை.
மாற்றத்தின் விதைகள்
இன்னும் பல சட்டங்கள் சமூக மாற்றத்துக்கான விதைகளாக மிக இயல்பாக எந்தப் பதற்றமும் அற்று நமது வாழ்க்கைமுறைக்குள் ஊடுருவி இன்று இந்த மாநிலத்தின் அடையாளமாகப் பெண் இருப்பை, சமூக நீதியைத் தக்கவைத்து, ஸ்திரப்படுத்திக் காட்டிக்கொண்டு இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இங்கே கலைஞர் என்ற ஒரு தலைவர் இருந்ததுதான்.
அவர் பெண்ணியவாதியாகவும் இருந்தார் என்பதே.
ஒரு தலைவன் தனக்கென ஒரு வரலாற்றை விட்டுச்செல்வது யதார்த்தம். ஆனால், எண்ணற்ற பெண்களுக்கு அவர்களது அடையாளத்தை மீட்டுத் தந்துவிட்டுச் செல்வது என்பது எத்தகைய அதிசயம் என்பதைத் தலைவர் கலைஞர் உணர்த்திவிட்டுச் சென்றிருக்கிறார். பெண்களது இன்றைய நாளைய அத்தனை முன்னேற்றத்துக்கும் அவர் இட்ட கையெழுத்து அடித்தளம் என்பதை, அவரது இருப்பைக் காலம் தொடர்ந்து தக்கவைக்கும்.
சல்மா, கவிஞர்.
தொடர்புக்கு: tamilpoetsalma@gmail.com