நான் ஒரு விவசாயி. என் கணவர் ஒரு முழு நேரக் குடிகாரர். தினமும் குடித்துவிட்டு வந்து போதையில் என்னிடம் வம்பிழுத்துச் சண்டைபோடுவார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பார்க்கிறார்கள் என்றுகூட நினைக்காமல் என்னை மிகவும் கேவலமாகத் திட்டுவார். என் கணவருடைய இந்த இம்சைகளைப் பொறுக்க முடியாமல் ஒரு முறை தற்கொலைக்கும்கூட முயன்றிருக்கிறேன். பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று என்னைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.
அப்போதெல்லாம் என் அப்பாதான் எனக்கு ஆறுதலாக இருப்பார். ‘உனக்காக இல்லையென்றாலும் உன் இரண்டு பிள்ளைகளுக்காகவாவது நீ வாழணும்’ என்று சொல்லி, சு.தமிழ்ச்செல்வியின் ‘கற்றாழை’ நாவலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அந்த நாவலை வாசிக்க வாசிக்க எனக்குள் புது உத்வேகம் ஏற்பட்டது. ‘எந்தவிதமான வறட்சியிலும் துவண்டு போகாமல் தன்னைத் தகவமைத்துக்கொண்டு வாழும் கற்றாழை போன்றதுதான் பெண்களின் வாழ்க்கை’ என்கிற கருத்தைக் கொண்டதாக இருக்கும் அந்த நாவலின் கதை. கிட்டத்தட்ட அது என் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதைப் போன்றே இருந்தது.
அதனாலேயே எனக்கு மிகவும் பிடித்த நாவலானது ‘கற்றாழை’. மேலும், அளம், ஆறுகாட்டுத் துறை, கண்ணகி, கீதாரி என சு.தமிழ்ச்செல்வியின் எல்லா நாவல்களையும் படித்தேன். பிறகு இந்தப் புத்தக வாசிப்பே என் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மருந்தாகியும்போனது.- உமா கணேசன், நமச்சிவாயபுரம், கள்ளக்குறிச்சி.