பெண் இன்று

தூய்மைப் பணியாளர் வரலட்சுமி உயிரிழப்புக்கு யார் பொறுப்பு?

செய்திப்பிரிவு

சென்னை கண்ணகி நகரில் உள்ள ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுக் குடியிருப்’பில் வசித்துவந்த தூய்மைப் பணியாளர் ஆர்.வரலட்சுமி (30), சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் ஏற்பட்ட மின்கசிவால் ஆகஸ்ட் 23 அன்று அதிகாலை மரணமடைந்தார். இவருக்கு 11 வயதில் மகளும் 8 வயதில் மகனும் உள்ளனர். தூய்மைப்பணியாளராகப் பணியாற்றிவந்த இவரது வருமானத்தை நம்பித்தான் இவர்களது குடும்பம் இருக்கிறது.

வரலட்சுமி உடனடியாக இறந்துவிட்டதால் மட்டுமே இது பேசுபொருளாகியிருக்கிறது. ஆனால், தூய்மைப் பணி யாளர்கள் அனைவரும் ஒரு வகையில் ‘தாமதப்படுத்தபட்ட மரண’த்துக்குத் தங்களை ஒப்புக்கொடுத்துவிட்டுத்தான் தூய்மைப் பணியில் ஈடுபடுகின்றனர். வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் அனைத்துவிதமான கழிவு களைக் கையாள்வதற்கான கருவிகள் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. குறைந்தபட்சம் கையுறை, காலுறை, முகக்கவசம் போன்றவைகூட இல்லாத நிலையில்தான் பலரும் பணியாற்றிவருகிறார்கள்.

குப்பையை நேரடியாகக் கையாள்வதால் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு அவர்கள் ஆளாகிறார்கள். மோசமான சூழலில் மிகக் குறைந்த வருமானத்தில் பணிப் பாதுகாப்பும் இல்லாத நிலையில் பணியாற்றும் இவர்களுக்குக் குறிப்பிட்ட இடைவேளையில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

சென்னையில் தூய்மைப் பணிக்கு ஒவ்வொரு மண்டலத்தையும் தனியாருக்குக் கொடுத்துவிட்டதால் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைக்கூடப் பெற முடியாமல் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுவதும் நடக்கிறது. கண்ணகி நகரில் மின்கசிவால் உயிரிழந்த வரலட்சுமியின் குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் எனச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உண்மையில் வரலட்சுமியின் மரணத்துக்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்?

அந்தப் பகுதியில் ஆபத்தான முறையில் மின்கம்பிகள் இருப்பதாக மின்சார வாரியத்துக்குப் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் அலட்சியத்தைத் தொடர்ந்தே இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. அடித்தட்டு மக்கள் குடியிருக்கும் பகுதி என்பதாலேயே அதன் பராமரிப்பில் மின்சார வாரியமும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமும் உள்ளாட்சி அமைப்புகளும் அலட்சிய மனோபாவத்துடன் நடந்துகொள்வதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தன் உழைப்பால் குடும்பத்தைத் தாங்கிவந்த வரலட்சுமியின் மரணத்துக்கு இரங்கல் அறிக்கையும் சில லட்சங்களில் இழப்பீடும் மட்டுமே தீர்வல்ல. அரசு இயந்திரத்தின் அலட்சியத்தால் இதுபோன்று இன்னோர் உயிர் பறிபோகாமல் காப்பதும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது சமரசமற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதும் அவசியம்.

SCROLL FOR NEXT