பெண் இன்று

அழகிய கண்ணே: நம் அன்பு உண்மையானதா?

டாக்டர் எஸ்.யமுனா

இன்றைய குழந்தைகள் பெரும்பாலும் செல்போனிலும் சமூக வலைத்தளங்களிலும்தான் மூழ்கி இருக்கிறார்கள். பெற்றோர் அவர்களுக்கு இரண்டாம்பட்சம் ஆகிவிட்டனர். 15 வயது அருணும் இதற்கு விதிவிலக்கல்ல. எந்நேரமும் செல்போனும் கையுமாகத்தான் இருப்பான். செல்போனில்தான் சிம் கார்டு இல்லையே என அவனுடைய பெற்றோரும் அருணைக் கண்டுகொள்வதில்லை. ஆனால், சிம் கார்டு இல்லாத செல்போனில் அருணுக்கு என்ன வேலை?

லட்சுமி, கார்த்திக் இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். அருண் அவர்களுடைய ஒரே மகன். வீட்டில் அருணைப் பார்த்துக்கொள்ள தாத்தா, பாட்டி இருப்பதால் அவர்கள் இருவரும் ஓரளவு நிம்மதியோடு வேலைக்குச் செல்கிறார்கள். அருணுக்குத் தேவையான அனைத்தையும் செய்து முடித்து, அவனைப் பள்ளியில் விட்டுவிட்டு அவர்களும் அலுவலகத்துக்குச் செல்வார்கள். மாலை பள்ளி முடிந்ததும் தாத்தாவுடன் அருண் வீட்டுக்கு வந்துவிடுவான்.

ஒரு நாள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவன் பாட்டியின் போனில் இருந்த சிம் கார்டை எடுத்துத் தன் அப்பாவின் பழைய செல்போனில் போட்டு, வாட்ஸ் அப் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொண்டான். சிம்மை மீண்டும் பாட்டியின் செல்போனில் போட்டுவிட்டான். அதன் பிறகு வாட்ஸ் அப்தான் அவனது அந்தரங்க உலகமானது. வீட்டுக்குத் திரும்பியதும் நேராகத் தன் அறைக்குச் செல்பவன், சுமார் இரண்டு மணி நேரம் போனும் கையுமாகத்தான் இருப்பான். தன் நண்பர்களுடன் சாட் செய்துகொண்டே இருப்பான்.

தாத்தாவும் பாட்டியும் ஏதாவது கேட்டால்கூட போனைப் பார்த்தபடியேதான் பதில் சொல்வான். நாளடைவில் இந்தப் பழக்கத்தால் வீட்டில் இருப்பவர்களுடன் அவன் பேசுவதே குறைந்துவிட்டது. படிப்பிலும் கவனம் சிதறத் தொடங்கியது. அவனுடைய பெற்றோருக்கு இது குறித்து எதுவுமே தெரியவில்லை. அவர்கள் வரும்போது அவன் வீட்டுப் பாடம் முடித்துச் சாப்பிட்டு முடித்திருந்தால் போதும் என்பதோடு இருந்துவிட்டார்கள்.

சந்தியாவின் நிலையும் இதேதான். ஆனால், அவள் செல்போன் பின்னால் போகாமல் தனிமையில் வாடிக்கொண்டிருந்தாள். நல்ல சம்பளம் கிடைக்கிற காரணத்தால் அவளுடைய பெற்றோர் இரவு நேரப் பணிக்குச் செல்கின்றனர். அவர்கள் சந்தியாவுடன் இருக்கும் நேரம் மிகக் குறைவு. சந்தியாவுக்கு வசதிக்குக் குறைவில்லை. ஆனால், அவள் வசதியைவிடத் தன் பெற்றோரது அரவணைப்பைத்தான் எதிர்பார்த்தாள்.

சந்தியா ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். எது சரி, எது தவறு என்பதைப் பிரித்துப் பார்க்கும் பக்குவம் அவளுக்கு இருக்கிறது. தன்னுடைய தாத்தா, பாட்டி இருவரும் வேதனைப்படுவார்களே என்று நினைத்த அவள், அவர்களுக்காகத் தான் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடித்தாள். தன்னை வளர்த்து ஆளாக்கி வரும் அவர்களுக்கு எந்தவிதத்திலும் கஷ்டம் தரக் கூடாது என்பதற்காக வீட்டில் இருக்கும் நேரத்தில் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வாள். ஆனால், பெற்றோர் தன்னுடன் அன்பாக இல்லாத ஏக்கம் சந்தியாவுக்கு இருந்துகொண்டே இருந்தது. வெளிப்பார்வைக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் உள்ளுக்குள் அவள் தனியாகத்தான் உணர்ந்தாள்.

ஒரு நாள் சந்தியா வீட்டுக்கு வந்ததும் டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு பால்கனிக்குச் சென்றதை சந்தியாவின் தாத்தா பார்த்தார். ஏன் அவள் டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு அங்கே போகிறாள் என அவருக்குக் குழப்பமாக இருந்தது. மதியம் கொண்டு சென்ற உணவை பால்கனி வழியாக அவள் வெளியே கொட்டியதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். சந்தியாவிடம், “ ஏம்மா டிபன் பாக்ஸை எடுத்துக்கிட்டு பால்கனிக்குப் போனே?” எனக் கேட்டார். அதற்கு அவள், “இல்ல கிச்சனுக்குப் போறதுக்குப் பதிலா மறந்து அங்கே போயிட்டேன் ” என்றாள். தாத்தா எதுவும் பேசவில்லை. சந்தியா பல நாட்களாக மதிய உணவு சாப்பிடாமல் இப்படிச் செய்கிறாள் என்பது அவர்களுக்குப் பின்னர்தான் தெரியவந்தது.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்களது வேலைப் பளு காரணமாகப் பிள்ளைகள் கேட்பதைச் செய்துகொடுத்தால் போதும் என்றே நினைத்திருக்கிறார்கள். செல்போன், நகை, விளையாட்டுச் சாமான் என அவர்கள் விரும்பும் பொருட்களை வாங்கிக் கொடுத்துவிட்டால் குழந்தைகள் திருப்தி அடைந்துவிடுவார்கள் எனப் பல பெற்றோர் நினைக்கிறார்கள். அதனால் பொருட்களை வாங்கித் தருவதையே அன்பின் வெளிப்பாடாக அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.

ஆனால், குழந்தைகளுக்குத் தேவைப் படுவது உண்மையான அன்புதான். குழந்தைகளிடம் பெற்றோர் இப்படிப் பொருள்சார்ந்த அன்பை வெளிப்படுத்தும்போது செல்போன் போன்றவற்றின் மீது அவர்கள் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறார்கள். இதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குழந்தைக்கு 15 வயதுக்குள் கிடைக்கும் அன்பும் அரவணைப்பும்தான் அவர்கள் வளர்ந்த பிறகு பெற்றோருடன் இணக்கமாக இருப்பதற்கான அடிப்படை. பெற்றோர் தரும் அன்பை வேறு எதனாலும் ஈடுசெய்ய முடியாது. வாழ்க்கைக்குப் பொருளாதாரம் அவசியம்தான். ஆனால், குழந்தைகளின் எதிர்காலம் அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது.

(வளர்ப்போம்,வளர்வோம்)
கட்டுரையாளர், குழந்தைகள் நல மற்றும் வளரிளம் பருவ சிறப்பு மருத்துவர்.
தொடர்புக்கு: dryamunapaed@yahoo.com

SCROLL FOR NEXT