பெண் இன்று

ஜூலை 1: தேசிய மருத்துவர்கள் நாள் - வேலையல்ல, சேவை!

அனுரத்னா

இ ந்தியாவில் 1991 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை முதல் தேதி தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. பாரத ரத்னா விருது பெற்ற இவர் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராகவும் இருந்துள்ளார்.

தற்கால இளைய மருத்துவர்கள் மறக்க முடியாத, மறக்கக் கூடாத ஒப்பற்ற இந்திய மருத்துவர்கள் வரிசையில் தமிழகத்தின் லட்சுமி ஷெகல், முத்துலட்சுமி ரெட்டி இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். 1914 அக்டோபர் 24 அன்று பிறந்த லட்சுமி ஷெகல் மருத்துவராக மட்டும் சேவை புரியவில்லை. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ஜான்சிராணி படையை 1943-ல் லட்சுமி தொடங்கினார். இந்தப் படை ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் ராணுவப்படை. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். லட்சுமியின் சேவையப் பாராட்டி இந்திய அரசு, அவருக்கு 1998-ல் பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்தது.

01CHBRI_LAKSHMI

முத்துலட்சுமி ரெட்டி, 1886 ஜூலை 30-ல் பிறந்தார். மருத்துவராகவும் சமூகப் போராளியாகவும் திகழ்ந்தார். 1926-ல் பாரிசில் நடந்த அகில உலகப் பெண்கள் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் இவர் கலந்துகொண்டார். சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். 1925-ல் சட்டசபை துணைத்தலைவராகப் பதவி வகித்த முத்துலட்சுமி ரெட்டி, தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களைத் தடை செய்யும் சட்டம் போன்ற சட்டங்களைச் சட்டசபையில் முன்மொழிந்து நிறைவேற்றினார்.

இவர்களைப் போன்ற மருத்துவர்களை முன்னுதாரணமாகக் இளைய மருத்துவர்கள் கொண்டு சமூக நோய்க்கும் சிகிச்சை அளிக்கும் விதமாகச் சமூகப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். தற்போது மருத்துவத்துறை வணிகமயமாகிவருகிறது. பணக்காரர்களுக்கு உயர்தர சிகிச்சை, ஏழைகளுக்கு வேறு வகை சிகிச்சை என்ற நிலை உள்ளது. முதலாளிகள் கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும் தொழிலாளிகள் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறும் நிலை மாற வேண்டும். கல்வி, மருத்துவம் இரண்டும் அடிப்படைத் தேவை மட்டுமல்ல ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையும்கூட. அதைத் தரமாகவும் கட்டணம் இல்லாமலும் தரவேண்டியது அரசின் கடமை. அதைப் பின்பற்ற வேண்டியது மருத்துவர்களின் கடமை.

நோயை மட்டும் குணப்படுத்தாமல் நோய்க்கான காரணங்கள் எவை என்று ஆராய்ந்து அவற்றைத் தீர்க்க வழிசெய்வதும் மருத்துவர்களின் கடமையே. மருத்துவப் பணி ஓர் அறப்பணி, அதற்கு நம்மை அர்ப்பணிப்போம்.

கட்டுரையாளர்,
பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் (பொறுப்பு).

          
SCROLL FOR NEXT