ப
ள்ளியிலிருந்து வீடு திரும்பிய அம்மு டென்ஷனாக இருந்தாள். வீட்டுக்குள் நுழைந்தவுடன், “ஷூவை எடுத்து ஸ்டாண்டில் வை, புத்தகப் பையை டேபிள் மீது வை, யூனிஃபார்மை மாற்று” என அம்மாவின் அடுத்தடுத்த உத்தரவுகள் அவளை மேலும் எரிச்சலடைய செய்தன. “எனக்கு எல்லாம் தெரியும்” என வெடுக்கெனச் சொல்லிவிட்டுச் சென்றாள்.
மகளின் இந்தப் பதிலால் கோபமடைந்த ராணி, “வர வர உன் பேச்சும் நடவடிக்கையும் சரியில்லை” என ஆரம்பித்துத் திட்டத் தொடங்கினாள். இதனால் மனமுடைந்த அம்மு, காபியும் குடிக்காமல் இரவு உணவும் சாப்பிடாமல் தன் எதிர்ப்பைத் தெரிவித்தாள். மகள் சாப்பிடாமல் தூங்கிவிட்டதால் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் தொடங்கியது.
“நீங்க செல்லம் கொடுக்கறதாலதான் அவ இப்படி எதிர்த்துப் பேசுறா” என ராணியும் “நீ எப்பவும் அவளைத் திட்டிக்கிட்டு இருக்கறதாலதான் அவ இப்படி இருக்கா” என அவருடைய கணவரும் ஒருவர் மாற்றி ஒருவர் புகார் சொன்னார்கள். மறுநாள் காலை அம்முவின் மனத்தை மாற்ற ராணி செய்த முயற்சி பலனளித்தது. பள்ளியில் தோழியுடன் நடந்த சண்டையால்தான் அம்மு டென்ஷனாக இருந்தாள் என்பது ராணிக்கு அப்போதுதான் தெரிந்தது. ஆனால், எல்லா நாட்களிலும் இதே போன்ற புரிதல் ஏற்படுவதில்லை.
அம்முவைப் போல் எட்டு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ‘ஹோம் வெர்க் செய்யல’, ‘சொல் பேச்சு கேட்பதில்ல’, ‘ஒழுங்கா சாப்பிடு’, ‘எப்பவுமே டி.வி, இல்லைன்னா செல்போன்’ போன்ற வசனங்கள் இன்று தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. இதுவரை அம்மா, அப்பா சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த குழந்தைகள் ஏன் வளர்ந்த பிறகு இப்படி எதிர்த்துப் பேசுகிறார்கள்? பொதுவாகக் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதுவரைதான் பெற்றோர் சொல்வதைக் கேட்பார்கள். எட்டு வயதைத் தாண்டிய பிறகு சுயமாகச் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். தங்களுக்குப் பிடிக்காதவற்றைப் பெற்றோர் செய்தாலோ வற்புறுத்தினாலோ அவர்கள் அதை எதிர்ப்பார்கள்.
குழந்தைகளின் இந்தத் திடீர் மாற்றம் குறித்து நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சொல்லி பெற்றோர் புலம்புவார்கள். இன்னும் சில பெற்றோர், குழந்தைகளைத் தாங்கள் சொல்வதைக் கேட்டுக் கீழ்ப்படிந்து நடக்கவைக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். மிரட்டுவது, பயமுறுத்துவது, அடிப்பது போன்றவை அந்த எல்லைக்குள் அடங்கும். இப்படிப் பெற்றோர், குழந்தைகளிடம் மூர்க்கத்தனமாக நடக்கத் தொடங்கினால் குழந்தைகள் மனத்தளவில் தனிமையாக உணர்வார்கள்; பெற்றோரை வெறுக்கவும் தொடங்கிவிடுவார்கள்.
உதாரணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்றால், குழந்தைகள் அதிக நேரம் தூங்க ஆசைப்படுவார்கள். ஆனால், பெற்றோர் அன்று ஒரு நாள் அதிக நேரம் தூங்கிவிட்டால், அடுத்த நாள் அவர்களை எழுப்புவது சிரமம் என நினைத்து விடுமுறை நாட்களிலும் சீக்கிரமாக எழுப்புவார்கள்.
அதேபோல் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது இரண்டு இட்லி அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும். ஆனால், சில பெற்றோர் காலையில் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்பதற்காக மூன்று, நான்கு இட்லியைச் சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்துவார்கள். பெற்றோரின் இதுபோன்ற நடவடிக்கைகளால் குழந்தைகளின் உடல் அசௌகரியமாகிறது. விடுமுறை நாட்களிலும் படிக்கக் கட்டாயப்படுத்துவது போன்றவற்றால் பெற்றோர் தங்கள் மீது அன்பாக இல்லையோ என்ற எண்ணம் குழந்தைகளுக்கு உருவாகிறது.
மேலும், அதுவரை குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த பெற்றோர், குழந்தைகள் வளரிளம் பருவத்தில் அடியெடுத்து வைத்ததும் அவர்களை முத்தமிடுவது, அணைத்துக்கொள்வது போன்றவற்றைக் குறைத்து ‘கண்டிப்புமிக்க’ பெற்றோராக மாறிவிடுகிறார்கள். இதனால் தன்னைப் புரிந்துகொள்ளாத பெற்றோரிடம் ஏன் அன்பாக இருக்க வேண்டும், ஏன் பேச வேண்டும் என்பன போன்ற கேள்விகள் இயல்பாகக் குழந்தைகள் மனத்தில் எழுகின்றன.
பொதுவாகப் பெற்றோர் குழந்தைகளின் சாப்பாடு, தூக்கம், விளையாட்டு போன்ற சாதாரணச் செயல்பாடுகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். இரண்டு இட்லி போதும் என்றால் அவர்களை அதற்குமேல் கட்டாயப்படுத்தக் கூடாது. எல்லாவற்றிலும் தலையிட்டுவந்தால், ஒரு கட்டத்தில் நாம் சொல்வது சரியாக இருந்தாலும் அதைக் குழந்தைகள் கேட்க மாட்டார்கள். எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளிடம் பெற்றோர் கவனிக்க வேண்டிய மூன்று விஷயங்கள் உண்டு. ஒன்று, அவர்கள் எந்தவிதமான போதைப் பொருளையும் நாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இரண்டாவது, பொதுவான ஈர்ப்பைக் காதல் என நினைத்து, அவர்கள் தடம் மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வளரிளம் பருவத்தில் ஏற்படும் உடல், மன மாற்றங்கள் குறித்துக் குழந்தைகளிடம் வெளிப்படையாகப் பேசிப் புரியவைக்க வேண்டும். இரவு நேரத்தில் நண்பர்களிடம் அதிக நேரம் அரட்டை அடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பதைச் சொல்லிப் புரியவைக்க வேண்டும். மூன்றாவது, குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த படிப்பு, விளையாட்டு, ஓவியம் என ஏதாவது ஒரு விஷயத்தில் ஈடுபாட்டுடன் இருக்குமாறு ஊக்குவிக்க வேண்டும்.
வேலைக்குச் செல்லும் பெற்றோராக இருந்தாலும் வீட்டில் இருக்கும் பெற்றோராக இருந்தாலும் அவர்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும். குழந்தைகள் ஏதாவது சொல்ல வந்தால் எந்த அவசர வேலையாக இருந்தாலும் அதைச் சற்று நேரம் ஒதுக்கிவைத்துவிட்டு அவர்கள் சொல்வதை ஆர்வத்துடன் கேட்க வேண்டும். இதுபோன்ற அணுகுமுறை, குழந்தைகளுக்குப் பெற்றோர் மீது நம்பிக்கையை உண்டாக்கி, நேசத்தை அதிகரிக்கும்.
(வளர்ப்போம்,வளர்வோம்)
கட்டுரையாளர், குழந்தைகள் நல மற்றும் வளரிளம் பருவ சிறப்பு மருத்துவர்.
தொடர்புக்கு: dryamunapaed@yahoo.com