என் பெயர் மோகனப்பிரியா. நான் சேலம் மாவட்டம் குரால்நத்தம் ஊராட்சியில் வசிக்கிறேன். எங்கள் ஊராட்சியில் 1227 குடும்பங்களும் 9 குடியிருப்புகளும் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் மலைவாழ் இன பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாயத் தொழில் புரிபவர்கள். இங்கு ராகி, திணை, நிலக்கடலை, சோளம், அரளி போன்றவற்றைப் பயிரிடுகின்றனர்.
குரால்நத்தம் ஊராட்சியில் உள்ள மலைவாழ் இன பழங்குடிப் பெண்கள் என்னுடன் சேர்த்து 100 நபர்கள் உற்பத்தியாளர் குழுவைத் தொடங்கினோம். உற்பத்தியாளர் குழுவுக்கு முதல்கட்டமாக ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்திலிருந்து ரூ. 75,000 தொடக்க நிதி வந்தது. இத்தொகையைக் கொண்டு ரோட்டோவேட்டர் இயந்திரம் வாங்கி தேவையான உறுப்பினர்களுக்கு அதை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டிவந்தோம்.
பிறகு நிலக்கடலை எண்ணெய் பிழிந்தெடுக்கும் இயந்திரம் வாங்கு வதற்காக ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்ட மாவட்ட அலுவலகத்தின் பரிந்துரையின்படி மாநில அலுவலகத்திலிருந்து ரூ.8,25,700 (Tribal Innovation Fund) வந்தது. கடந்த ஆண்டு கோணமடுவு பகுதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டச் செயல் அலுவலர் தலைமையில் எண்ணெய் நிறுவனம் துவங்கப்பட்டது. இதில் நானும் உற்பத்தியாளர் குழுவிலுள்ள இரண்டு நபர்களும் பணிபுரிகிறோம். எண்ணெய் பிழிந்தெடுத்து விற்பனை செய்வதுடன் கடலைப் பருப்பு, கடலைப் புண்ணாக்கு போன்றவற்றையும் விற்பனை செய்கிறோம். கூடுதல் வருமானத்திற்காகக் கடலையை உடைத்துத் தருவதுடன் தேங்காய் எண்ணெய்யைப் பிழிந்தும் விற்பனை செய்கிறோம். அவ்வப்போது நடைபெறும் கண்ணகாட்சிகளிலும் பங்கேற்கிறோம்.
மாதம்தோறும் செலவினம் போக ரூ.30,000 லாபம் பெறுகிறோம். இதனால், மக்கள் சிரமமின்றியும் தரகர் தொகையின்றியும் எளிதில் நிலக்கடலை விற்பனை செய்ய முடிகிறது. தரமான கடலை எண்ணெய்யையும் பெற முடிகிறது.
தொழிலை மேம்படுத்திய திட்டம்: வணக்கம். என் பெயர் பெ. மஞ்சு. என் கணவர் பெயர் பெருமாள். நான் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள கம்பராஜபுரம் ஊராட்சியில் வசித்து வருகிறேன். நான் இளநிலை வேதியியல் படித்துள்ளேன்.
நான் கடந்த 5 ஆண்டுகளாகத் தையல் தொழில் செய்துவருகிறேன். மகளிருக்கான அனைத்து வகையான ஆடை ரகங்களைத் தைத்து சிறந்த முறையில் என்னுடைய தொழிலை செய்துவந்தேன். இதன் மூலம் கிடைத்த வருமானத்தால் என் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கக் கடினமாக இருந்தது. அது மட்டும் அல்லாமல் எங்கள் வட்டாரத்தைச் சுற்றியுள்ள இடங்களில் இருந்து நிறைய ஆர்டர்கள் வந்தது. இதைச் சமாளிக்கக் கூடுதலாக வேளைக்கு ஆள் வைத்துத் தொழிலை விரிவுசெய்ய முடிவெடுத்தேன். கூடுதலாகத் தையல் இயந்திரங்கள் தேவைப்பட்டன. பல வங்கிகளை அணுகிக் கடனுக்காக முயற்சி செய்தேன்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் எங்கள் ஊராட்சியின் தொழில்சார் சமூக வல்லுநர் ஆதரவால் இணை மானிய நிதி கடன் திட்டத்தில் விண்ணப்பித்து ரூ.3,00,000 பெற்றேன். அதில் ஒரு தையல் இயந்திரம் மற்றும் ஒரு ஓவர்லாக் இயந்திரம் வாங்கினேன். இப்போது வேலை மிக எளிதாக முடிவதுடன் குறித்த நேரத்தில் முடிக்க முடிகிறது. எனது வருமானம் முன்பைவிட உயர்ந்து தற்போது மாதத்திற்கு சராசரியாக ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை கிடைக்கிறது. மேலும் இந்த வாய்ப்பளித்த வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கு எனது நன்றி. | இந்தத் திட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு: 1800 599 1600/155 330