என் பெயர் சு.பட்டுச்செல்வி, நான் கோவை மாவட்டம், காரமடை வட்டாரம், சிக்கதாசம்பளையம் ஊராட்சியில் வசித்து வருகிறேன். நான் 12 ஆம் வகுப்புக்குப் பிறகு புகைப்படம் மற்றும் கணினி பயிற்சி முடித்துள்ளேன். என் கணவர் இறந்து மூன்று வருடங்கள் ஆகின்றன, நான், என் அம்மா, என் மகள் மூவரும் ஒன்றாக வசித்து வருகிறோம். பூந்தென்றல் மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ளேன்.
நான் ஏழு வருடங்களாகத் தனியார் போட்டோ பிரின்டிங் லேபில் வேலை செய்து வந்தேன். ரூ.9,000 மாத வருமானம் எனக்கும் என் குழந்தையின் படிப்புச் செலவுக்கும் போதுமானதாக இல்லை. எனவே, சொந்தமாகத் தொழில் தொடங்க முடிவெடுத்தேன், முதலீட்டுக்கான பணம் என்னிடம் இல்லாததால் வங்கியில் கடனுதவி கேட்டபோது கிடைக்கவில்லை. அதன் பின் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் பற்றி மகளிர் குழு கூட்டமைப்பின் மூலம் தகவல் வந்தது. அதன் அடிப்படையில் நான் வங்கியில் இணை மானியத் திட்டம் மூலம் ரூ.5,00,000 வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தேன். உடனே கடன் கிடைத்தது. இதில் 30% மானியமாக ரூ.1,50,000 கிடைத்தது.
காரமடை மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையை வாடகைக்கு எடுத்தேன். கேமரா. கணினி போன்றவற்றை வாங்கினேன். திருமண விழா, காதணி விழா. பிறந்த நாள் விழா போன்ற அனைத்து விஷேசங்களுக்கும் புகைப்படம் எடுத்துத் தருகிறேன். சுற்றுவட்டாரப் பகுதிகளில் பள்ளிகள் இருப்பதால் பாக்ஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் எடுத்தும் வருமானம் ஈட்டி வருகிறேன். என்னிடம் இரண்டு பேர் வேலை செய்கிறார்கள்.
ஊதியம், செலவுகள் போக மாத வருமானம் ரூ.30,000 வரை வருகிறது. இதனால்,வங்கிக் கடனை முறையாகச் செலுத்தி என் குடும்பத்தையும் எந்தவிதச் சிரமமும் இன்றி பார்த்துக் கொள்ள முடிகிறது.
மணக்கும் மசாலா விற்பனை: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோவளம் ஊராட்சியில் மனநலம் பாதிக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டும் ‘பேன்யன்’ நிறுவனத்தின் மூலம் தங்கும் விடுதி, மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சிகிச்சை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அட்டை பெற செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது.
அப்போது மாவட்ட ஆட்சியர், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் மாவட்டச் செயல் அலுவலரைத் தொடர்பு கொண்டு எங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்ய அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் மாவட்டச் செயல் அலுவலர் எங்கள் நிறுவனத்தைப் பார்வையிட்டார். மாற்றுத் திறனாளிகளுக்குரிய அடையாள அட்டை மற்றும் அவர்களுக்குத் திறன் சார்ந்த பயிற்சி வழங்க முடிவு செய்து, முகாம் நடத்தி அடையாள அட்டை வழங்கினார். மேலும், அவர்களுக்குத் திறன் வளர்ப்பு பயிற்சியை காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் (KVK) நிறுவனத்தின் வாயிலாக ஒரு நாளுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அருகிலுள்ள கடைகளுக்குச் சென்று மசாலா பொருள்களின் விவரம் மற்றும் விலைப்பட்டியலைத் தயார் செய்தோம். பின்னர் இப்பயிற்சியை மேற்கொண்ட அனைத்து நபர்களை வைத்து ‘D’Lite மசாலா தொழிற்குழு’வாக அமைத்து, அதற்குரிய நிதி முன்மொழிவு விவரத்தினை ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் மூலம் சமர்ப்பித்து மாநில அலுவலகத்திலிருந்து தொடக்க நிதியாக ரூ.75,000 பெற்றுத் தொழிற்குழுவின் செயல்பாட்டை ஆரம்பித்தோம்.
இன்று அருகிலுள்ள அனைத்துக் கடைகளிலும் மசாலா பொருள்கள் விற்பனை அதிகரித்து வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இதன் மூலம் நாங்கள் மாதம் ரூ.50,000 வரை வருமானம் ஈட்டுகிறோம். இந்த வருவாயை எங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் பராமரிப்புச் செலவுகளுக்காவும் உபயோகப்படுத்திக் கொள்கிறோம். இந்த வாய்ப்பை அளித்த ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்திற்கு நன்றி. | இந்தத் திட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு: 1800 599 1600/155 330