திருப்பூரைச் சேர்ந்த 28 வயது கிருத்திகா பிரசவத்தின்போது ஏற்பட்ட ரத்தப்போக்கால் உயிரிழந்திருக்கிறார். பிரசவத்தின்போது இதுபோன்ற எதிர்பாராத மரணங்கள் இயல்புதான் என்றாலும் கிருத்திகாவின் மரணம் இயல்பானதல்ல.
இது, வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொள்ளலாம் என்ற தவறான செய்கையால் நிகழ்ந்த விபரீதம். தன் நண்பர் ஒருவரின் பேச்சைக் கேட்டு வீட்டிலேயே பிரசவம் என்ற முடிவுக்கு கிருத்திகாவின் கணவர் கார்த்திகேயன் வந்திருக்கிறார். எம்.எஸ்சி., பி.எட். பட்டதாரியான கிருத்திகா, தன் கணவரின் முடிவை ஆரம்பத்தில் மறுத்திருக்கிறார். ஆனால், கார்த்திகேயனோ தன் தாத்தா எந்த ஆங்கில மருந்தையும் எடுத்துக்கொள்ளாததால்தான் 75 வயதுவரை திடகாத்திரமாக இருந்ததாக கிருத்திகாவிடம் சொல்லியிருக்கிறார்.
கிருத்திகாவும் அதற்குச் சம்மதிக்க, கருவுற்ற நாள் முதல் மருத்துவப் பரிசோதனைக்கு கிருத்திகா செல்லவில்லை. இந்நிலையில்தான் அந்தத் துயரச் சம்பவம் நடந்திருக்கிறது. பிரசவ வலி வந்தவுடன் கிருத்திகாவுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ரத்தப்போக்கால் கிருத்திகாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதற்குப் பிறகே விஷயம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
நாம் மருத்துவரா?
அண்மைக் காலமாக சுய மருத்துவம் தொடர்பாகப் பரவிவரும் வதந்திகளுக்குப் பலியானவர்களில் கிருத்திகாவும் ஒருவர். இயற்கை முறையில் வாழ்வது, நஞ்சில்லா ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவது போன்றவை தவறல்ல. ஆனால், அவற்றின் பெயரால் உயிருடன் விளையாடுவது நல்லதல்ல. இது மட்டுமல்ல, சர்க்கரை என்பது கற்பனை; அது வெளிநாட்டவரின் சதி, புற்றுநோய்க்கு உணவே மருந்து என்பன போன்ற செய்திகளும் தொடர்ந்து பரப்பப்பட்டுவருகின்றன.
அறுவை சிகிச்சை தேவைப்படுகிற முற்றிய நோய்களுக்குக்கூடச் சிலர் ஏதாவது பழத்தையோ காயையோ பரிந்துரைத்தபடி இருக்கிறார்கள். காயையும் பழத்தையும் சாப்பிடுவதில் சிக்கல் இல்லை. ஆனால், மருத்துவர்களை ஆலோசிக்காமல் நமக்கு நாமே வைத்தியம் செய்துகொள்வது சரியா? தவிர மருத்துவத் துறையிலேயே ஒவ்வொருவரின் உடல் தன்மைக்கு ஏற்பத்தான் சிகிச்சை முறை இருக்கும். ஒரு மருந்தையோ சிகிச்சை முறையையோ ஒருவரது உடல் ஏற்றுக்கொண்டால்தான் அதைத் தொடர முடியும்.
இப்படியொரு சூழலில் வாட்ஸ் அப் செய்தியையும் யூடியூப் வீடியோவையும் நம்பி நமக்கு நாமே சிகிச்சை எடுத்துக்கொண்டால் நிலைமை என்னவாகும் என்பதற்கு கிருத்திகாவின் மரணம் ஓர் உதாரணம்.