பெண் இன்று

நிலையான வருமானத்தை கொடுத்த சமுதாயத் திறன் பள்ளி | வாழ்ந்து காட்டுவோம்!

செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள பாப்பம்பாளையம் ஊராட்சியானது மிகவும் பின்தங்கிய கிராமங்களில் ஒன்று. வாழ்வாதாரத்திற்காக இப்பகுதி மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். மேலும், இப்பகுதியில் நிலக்கடலை, தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது.

விவசாயத்திற்காகப் பூச்சிக்கொல்லிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதனால் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள 20 பெண்களைக் கொண்டு இயற்கை இடுபொருள்கள் தயாரிக்கும் சமுதாயத் திறன் பள்ளிப் பயிற்சி வழங்கப்பட்டது. பஞ்சகவ்யம், மீன் அமிலம், மண்புழு உரம் தயாரித்தல் போன்ற பயிற்சிகளைப் பயிற்சியாளர் நல்லசிவம் வழங்கினார்.

பயிற்சி பெற்ற 16 பெண்களைக் கொண்டு ‘செங்கோ தொழில் குழு’ உருவாக்கப்பட்டது. இக்குழுவில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்றாக இனணந்து இயற்கை இடுபொருள்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்தத் தொழில் குழுவின் செயல்பாடுகளை ஆராய்ந்து தொழிலை விரிவுபடுத்த தமிழ்நாடு வேளாண்மை துறையின் மூலம் ரூ.1,00,000 மானியம் வழங்கப்பட்டது.மேலும், பாப்பம்பாளையத்தில் சில்லறை விற்பனை நிலையம் அமைக்க பள்ளிபாளையம் Seshasayee Paper and Boards Limited மூலம் கண்டெய்னர் இலவசமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் பாப்பம்பாளையத்தில் செங்கோ இயற்கை இடுபொருள் சில்லறை விற்பனை நிலையம் அமைக்கப்பட்டது.

இந்தத் தொழில் குழு ஒவ்வொரு மாதமும் தோராயமாக ரூ.50,000 வரை விற்பனை செய்து வருகின்றது. இக்குழு உறுப்பினர்களின் தேவையின் அடிப்படையில் அவர்கள் லாபத் தொகையைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

சமுதாயத் திறன் பள்ளியின் மூலம் வழங்கப்பட்ட பயிற்சியின் மூலம் பெண்கள் நிலையான வருமானத்தைப் பெற உறுதுணையாக இருந்தமைக்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்.

புதிய வாழ்வைத் தந்த ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம்

என் பெயர் ஜீவிதா, என் கணவர் பெயர் மணிகன்டன். நான் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டாரம் ஜம்புகுளம் கிராமத்தில் வசித்துவருகிறேன். என் கணவர் கூலி வேலை செய்துவருகிறார். இதன் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமே எங்கள் குடும்பத்திற்கான முக்கிய வருமானம்.

இந்நிலையில், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தில் எங்கள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் சமுதாயத் திறன் பள்ளி LED பல்பு தயாரித்தல் பயிற்சி 10 நாள்கள் நடைபெற்றது. பயிற்சிக்கு பின் சில நாள்கள் தனித் தனியாக பல்பு தயாரித்தோம். அதில் விற்பனை செய்வதில் சிரமம் எற்பட்டது. மேலும், மூலப்பொருள்களைத் தனித்தனியாக வாங்குவதால் அதிக விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. பின்பு அனைவரும் இணைந்து ‘ரோஜா தொழில் குழு’ என்கிற பெயரில் குழுவாக அமைத்துச் செயல்பட்டோம். இதன் மூலம் மாதத்திற்கு 300 முதல் 500 வரையிலான LED பல்புகள் உற்பத்தி செய்யப்படுவதால் மாத வருமானம் கூடுதலாகக் கிடைக்கிறது. மேலும் LED பல்புக்கு Own Branding and Labelling, Logo ஆகியவற்றைச் செய்துள்ளோம்.

இணைமானியத் திட்டத்தில் 30% மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் ரூ.2,00,000 பெற விண்ணப்பித்துள்ளோம். இதன் மூலம் கூடுதலாக இயந்திரம் வாங்கி, தற்போது செய்துவரும் தொழிலைப் பெரிய அளவில் விரிவாக்கி கடைகளுக்கு மொத்த விலையில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். மேலும் ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யப் போகிறோம்.

நாங்கள் தொழில் தொடங்க பயிற்சியும் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனும் ஏற்படுத்தித் தந்த ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்திற்கு நன்றி. | இந்தத் திட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு: 1800 599 1600/155 330

SCROLL FOR NEXT