பொதுவெளியில் பெண்கள் குறித்துத் தரக்குறைவாகப் பேசியதற்காக ஏற்கெனவே மக்கள் மத்தியில் கடும் கண்டனங்களைப் பெற்ற ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தற்போது பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் அநாகரிகமாகப் பேசியிருக்கிறார். பெரியார் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக அந்தப் பத்திரிகையாளர் சீமானிடம் கேட்க, ஒருமையில் விளித்துத் தரக்குறைவான வகையில் பதில் அளித்தார் சீமான்.
பொதுவெளியில் பேசத் தகாத, பெண்ணை மையப்படுத்திய வசைச்சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினார். இறுதியாக அந்தப் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு மிக மோசமான உடல்மொழியிலும் அலட்சியத் தொனியிலும் மீண்டும் அந்த வசைச்சொல்லைச் சொன்னார். சீமானின் இந்த அநாகரிகப் பேச்சுக்கு, ‘கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சீமானின் இந்த நடத்தையே அவரது கட்சியின் தரத்தைச் சொல்கிறது’ என்பது போன்ற விமர்சனங்களும் எழுந்தன.