பெண் இன்று

அழகிய கண்ணே: என்னதான் பேசுவார்களோ

டாக்டர் எஸ்.யமுனா

வீட்டுக்கு வந்ததும் முகம், கை, கால் எல்லாம் கழுவ வேண்டும். ஒழுங்காகப் பால் குடிக்க வேண்டும். நேரத்தை வீணாக்காமல் புத்தகத்தை எடுத்துப் படிக்க வேண்டும். அப்படி இருப்பவர்கள்தாம் நல்ல பிள்ளைகள். அப்படியில்லாமல், வீட்டுக்கு வந்ததும் செல்போனை எடுத்துப் பேசினாலோ விளையாடினாலோ அவர்களைக் கண்டிக்க வேண்டும். இதுதான் பெரும்பாலான பெற்றோரின் மனநிலை.

பாலாஜி, கட்டுப்பாடுகள் நிறைந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறான். பள்ளியில் ஒருவர் மற்றவருடன் பேசக் கூடாது. படிப்பது மட்டும்தான் அவர்களின் வேலை. அதனால் வீட்டுக்கு வந்ததும் போனை எடுத்துத் தன் பள்ளி நண்பர்களுடன் கொஞ்ச நேரம் பேசிய பிறகே அவன் படிக்க ஆரம்பிப்பான். “ஏன் போன்ல பேசுற? இந்த வயசுல அப்படி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?” எனத் திட்டுவது அவனுடைய பெற்றோரின் வாடிக்கை. இன்னும் சில பெற்றோர் அதுக்கு ஒருபடி மேலே போய், “என் கண்ணெதிரே பேசு, இங்க உட்கார்ந்து பேசு, ஸ்பீக்கர்ல போட்டுப் பேசு” எனக் குற்றவாளியைப் போல நடத்துவார்கள். இன்னும் சில பெற்றோர், “ஏன் வீட்டுக்கு வந்தவுடன் ஃபிரெண்ட்ஸ்கிட்ட போன்ல பேசுற? ஏன் நாங்க உனக்கு நண்பர்கள் இல்லையா?” என சென்டிமென்ட்டைப் பிழிவார்கள்.

இன்றைய பள்ளி அமைப்பில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் வகுப்பில் பேசுவது மிகவும் குறைந்துவிட்டது. இடைவேளை, சாப்பிடும் நேரம் எனக் குறிப்பிட்ட சிலநேரம் மட்டுமே அவர்கள் பேசிக்கொள்ள முடியும். வீட்டுக்கு வந்த பிறகு நண்பர்களுடன் அவர்கள் பேசத் துடிக்கவும் அதுவே காரணம். இதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.

செல்போன்கள் இல்லாத அன்றைய பள்ளி நாட்களில் அடுத்தநாள் எப்போது வரும், நண்பர்களை எப்போது சந்திப்போம் என்ற ஏக்கத்துடன்தான் குழந்தைகள் வீட்டுக்குள் நுழைவார்கள். பள்ளியில் இருக்கும் ஆறு அல்லது ஏழு மணிநேரம் பெற்றோர் துணையின்றி அவர்கள் தனியாகத்தான் இருக்கிறார்கள். பள்ளியில் குழந்தைகள் தனியாக இருக்கும்போது அவர்களை நாம் நம்புகிறோம். அதே நம்பிக்கையைக் குறைந்தபட்சம் குழந்தைகள் போனில் பேசும்போதும் நாம் வைக்க வேண்டும்.

குழந்தைகள், நண்பர்களுடன் பேசும்போது அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது. குறிப்பிட்ட நேரத்தை அவர்களுக்கு ஒதுக்கி, “செல்லம் உனக்கு 20 நிமிஷம் தர்றேன். அதுக்குள்ள நீ பேசிட்டு வந்து வீட்டுப்பாடம் செய்யணும் இல்ல சாப்பிடணும்” என ஒரு எளிய ஒப்பந்தத்தை இட்டுக்கொள்ளலாம். பெற்றோர் அவர்களிடம் விட்டுக்கொடுக்கும்போது, அவர்களும் நம்ம அம்மாவும் அப்பாவும் நம்ம நல்லதுக்குத்தான் எல்லாத்தையும் சொல்றாங்க என நினைக்கத் தொடங்குவார்கள்.

இதுபோன்ற புரிதலைக் குழந்தைகளிடம் உருவாக்குவது அவசியம். அப்போதுதான் பள்ளியில் நடப்பவற்றைப் பெற்றோரிடம் தயங்காமல் சொல்வார்கள். உதாரணத்துக்கு, “என்னடா இன்னைக்கு ரொம்ப ஜாலியா இருக்க. உன் ஃபிரெண்ட்ஸ் ஏதாவது ஜோக் சொன்னாங்களா? அதை என்கிட்டேயும் சொல்லேன்” எனக் கேட்கலாம். அப்படிக் கேட்கும்போது அன்று நடந்த பெரும்பாலானவற்றை அவர்கள் பகிர்ந்துகொள்வார்கள்.

மற்றுமொரு சுலபமான வழி, குழந்தைகளைப் பள்ளியில் இருந்து அழைத்து வரும்போது அவர்களின் நண்பர்களிடம் புன்னகையோடு சில வார்த்தை பேசலாம். வீட்டுக்கு வரும் வழியிலேயே பள்ளியில் நடந்தவற்றைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். “இன்னைக்கு ஸ்கூல்ல எப்படிப் போச்சு?” என இயல்பாகத் தொடங்கலாம்.

குழந்தைகள் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும்போது உணர்ச்சிப் பிழம்பாக இருப்பார்கள். அப்போது நீங்கள் குழந்தைகளிடம் ஆசையாகப் பேசினால் அவர்கள் அனைத்தையும் மனம் திறந்து சொல்வார்கள். வேலைக்குச் சொல்லும் பெற்றோராக இருந்தால் குழந்தைகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பியவுடன் ஒரு போன் செய்து அவர்களிடம் பேசலாம்.

அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா கோபமாக இருக்கிறார்களா அல்லது அவர்களை யாராவது கோபப்படுத்தினார்களா இல்லை இவர்கள் யார் வம்புக்காவது போனார்களா என்பதை அவர்களின் போக்கில் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இல்லையென்றால் பெற்றோரின் காதுக்குப் பல விஷயங்கள் வராமல் போய்விடும். குழந்தைகளுடன் பெற்றோர்கள் செலவிடும் நேரமே, குழந்தைகளின் செழிப்பான வாழ்வுக்கான உரம்.

(வளர்ப்போம்,வளர்வோம்)
கட்டுரையாளர், குழந்தைகள் நல மற்றும் வளரிளம் பருவ சிறப்பு மருத்துவர்.
தொடர்புக்கு: dryamunapaed@yahoo.com

SCROLL FOR NEXT