என் பெயர் கஸ்தூரி. நான் திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டாரம் தென்பள்ளிப்பட்டு ஊராட்சியில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகிறேன். எனக்கு 31 வயது. இளநிலை பட்டப்படிப்பு (BCA) படித்துள்ளேன். எனக்கு இரண்டு குழந்தைகள். உடல் நலம் சரியில்லாததால் என் கணவர் இறந்துவிட்டார். அதனால், குடும்பச் செலவுகளைச் சமாளிக்க அழகுக் கலை நிபுணர் பட்டயப் படிப்பு படித்தேன். பின்னர் RSETI மற்றும் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் அழகுக் கலை நிபுணர் மற்றும் ஆரி கலை பயிற்சியின் பயிற்றுநராக இருந்தேன்.
திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் ஊராட்சியில் சிறிய அளவில் அழகு நிலையம் தொடங்கினேன். போதுமான உபகரணங்கள் இல்லாததால் குறிப்பிட்ட சேவைகளை மட்டுமே வழங்க முடிந்தது. அதற்கேற்ப வருமானமும் குறைவாகத்தான் கிடைத்தது.
அதன் பின் எங்கள் ஊராட்சியில் உள்ள தொழில் சார் சமூக வல்லுநர் மூலம் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் இணை மானியத் திட்டம் குறித்து அறிந்துகொண்டேன். போதிய ஆவணங்களோடு விண்ணப்பித்து ‘மதி சிறகுகள் தொழில் மையம்’ மூலம் வணிகத்திட்டம் தயார் செய்து வங்கியில் சமர்ப்பித்தேன். ரூ 3,25,487 கடனுதவி பெற இந்தியன் வங்கியில் அனுமதி பெறப்பட்டு எனது விண்ணப்பம் மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு மாநில அலுவலகத்திற்கு மானிய நிதி (ரூ.97,646) பெற அனுப்பப்பட்டது. மாநில அலுவலகத்தில் இருந்து மானிய நிதி இந்தியன் வங்கிக்கு அனுப்பப்பட்டது.
இந்தத் தொகையின் மூலம் அழகு நிலையத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கினேன். வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து அழகுக்கலை சேவைகளையும் இப்போது வழங்க முடிகிறது. தற்போது மேலும் இரண்டு கிளைகளை கலசபாக்கம் மற்றும் போளூரில் தொடங்கியுள்ளேன். இதன் மூலம் 6 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடிந்தது. மேலும், மாதம் ரூ 30,000 முதல் 40,000 வரை வருமானம் ஈட்ட முடிகிறது. இதன் மூலம் எனது குடும்பச் சூழ்நிலையும் பொருளாதார நிலையும் உயர்ந்துள்ளன.
ஆட்டோ மொபைல் துறையில் தடம் பதித்தேன்!
என் பெயர் சங்கீதா. நான் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வட்டாரத்தில் உள்ள அஞ்சிவாக்கம் கிராமத்தில் வசித்துவருகிறேன். 2018 முதல் டிரேடிங் பிசினஸ் செய்துவருகிறேன். அதில் போதுமான வருமானம் ஈட்டமுடியவில்லை. கரோனா தொற்றுப் பரவலுக்குப் பிறகு 2019 – 2020 காலக்கட்டத்தில் ஆட்டோ மொபைல் உதிரிபாகங்களுக்கு அதிக தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைப் பற்றிய ஓர் ஆய்வு மேற்கொண்டு அந்தத் தொழிலுக்கு இருக்கிற தேவை பற்றித் தெரிந்துகொண்டேன். கார் ஏர் பேக், கார் சீட் பெல்ட், கார் வார்னிங்க் லேபிள் ஆகியவை அதிக அளவில் தேவைப்படுவதை அறிந்து தொழிலைத் தொடங்கினோம். அவற்றை இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன். இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு என் கணவர் மிகவும் உறுதுணையாக இருந்தார்.
இந்தத் தொழிலைத் தொடங்கத் தேவையான செலவுகள் அதிகமாக இருந்ததால் தொழில் தொடங்குவதில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், எப்பாடு பட்டாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன் பின் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தில் இணை மானியக் கடன் 30% மானியத்துடன் பெற விண்ணப்பித்து, ரூ.4,13,000 பெற்றேன். இந்தத் தொகையின் மூலம் ஏர்பேக், சாப்ட் கவர் சீட், பெல்ட் தயாரிக்கும் இயந்திரங்களை வாங்கினேன். இந்தப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். இதன் மூலம் மாதம் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை வருமானம் வருகிறது. வாழ்க்கையில் நாம் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும் தொடர்ந்து போராடினால் நாமும் சாதிக்கலாம்! | இந்தத் திட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு: 1800 599 1600 / 155 330