பார்ப்பதும் குற்றம்தான்!
குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் அதிகரித்துவரும் நிலையில், ‘குழந்தைகள் தொடர்பான பாலியல் காட்சிகளைப் பார்ப்பது குற்றமாகாது’ என 2024 ஜனவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை செப்டம்பர் 23 அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ‘அதுபோன்ற படங்களை உருவாக்குவது மட்டுமல்ல தரவிறக்கம் செய்வது, செல்போனில் சேமித்துவைப்பது, பிறருக்கு அனுப்புவது, இணையத்தில் பதிவேற்றுவது உள்ளிட்ட அனைத்துமே போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய இரண்டின் கீழும் குற்றச் செயல்களே’ என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. ‘குழந்தைகள் ஆபாசப் படங்கள்’ என்கிற சொல்லுக்கு மாற்றாக, ‘குழந்தைகளைப் பாலியல்ரீதியாகச் சுரண்டக்கூடிய, தகாத முறையிலான சித்தரிப்பு’ என்பதைப் பயன்படுத்த வேண்டும் என நீதிபதி பர்திவாலா அறிவுறுத்தியுள்ளார். போக்சோ சட்டத்திலும் இந்த மாற்றங்களைச் செய்யும்படி அவர் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார்.
அதிகமாக உழைக்கும் பெண்கள்
வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதாக மத்தியத் தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். பெண்கள் பொதுவெளிக்கு வந்து பொறுப்புகளை ஏற்று நாட்டையே வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கும் அவர், இந்த முன்னேற்றத்தை ‘அமைதிப் புரட்சி’ எனக் குறிப்பிட்டுள்ளார். பெண்கள் முன்பைவிட அதிகமாக உழைப்பதாகவும் ஆண்களைக் காட்டிலும் நீண்ட நேரம் வேலை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெண்கள் வேலைக்குச் செல்வது அவர்களது பொருளாதார நிலையை உயர்த்தும் என்கிறபோதிலும் ஏற்கெனவே வீட்டு வேலைகளில் அதிக நேரத்தைச் செலவிடும் அவர்கள் தற்போது பணியிடங்களிலும் நீண்ட நேரம் வேலை செய்வதால் அவர்களது உடல், மன நலன் பாதிக்கப்படக்கூடும் எனப் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களின் பொதுப் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் ஆண்களும் வீட்டு வேலைகளில் பங்களிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.