பெண் இன்று

பெண் சக்தி: பணிகளில் மாயமாகும் பெண்கள்

ஹமிதா நஸ்ரின்

மார்கெட்டிங் எக்ஸிகியூடிவ்வாக பணிபுரியும் லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), நாடு முழுவதும் பணி நிமித்தமாகப் பயணம் செய்பவர். இப்போதெல்லாம் இரண்டு பொருட்கள் கைப்பையில் இல்லாமல், அவர் வெளியூர் செல்வதில்லை. முதலாவது டேஸர் எனும் மின்னதிர்வுத் துப்பாக்கி. இரண்டாவது பெப்பர் ஸ்பிரே. பொது மக்களுக்கான வாகனங்களில், தகாத முறையில் பெண்கள் தொடப்படுவதும் உரசப்படுவதும் இப்போது அதிகரித்துவிட்டது. இதைத் தவிர்ப்பதற்காகத் தன் சம்பளத்தில் கணிசமான தொகையைச் செலவுசெய்து தனியார் காரில் அவர் செல்கிறார்

வித்யா லட்சுமண், பன்னாட்டு நிறுவனத்தில் உயரதிகாரியாகப் பணியாற்றிவருகிறார். தன் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காகப் பலவகைப் பாதுகாப்புச் சாதனங்களை வீடு முழுவதும் நிறுவியுள்ளார். அதேபோல, தனியார் வங்கியில் உயரதிகாரியாக இருந்த சந்தியா, வேலையைத் துறந்ததன் மூலம் கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி ரூபாய் வருமானத்தை இழந்துள்ளார். தன் குழந்தைகளைப் பராமரிக்கும் மையத்தைக் கண்டுபிடிக்க முடியாததே, அவர் வேலையைத் துறக்கக் காரணம்.

“என் குழந்தையின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கச் செய்யும் அளவுக்கு இங்கு எந்த இடமும் இல்லையே” என்கிறார் இந்துமதி. “சிறு வயதிலேயே நான் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருக்கிறேன். எனவே, என் குழந்தைக்கு இந்தச் சமூகத்தில் என்ன மாதிரியான ஆபத்து இருக்கிறது என்று எனக்குத் தெரியும்” என்கிறார் அவர். நல்ல சம்பளம் அளித்த உயர்பதவியை விடுத்துத் தற்போது ஆசிரியராக அவர் பணியாற்றிவருகிறார்.

2004-லிருந்து இன்றுவரை சுமார் இரண்டு கோடிப் பெண்கள் அலுவலகங்களிலிருந்து மாயமாகிவிட்டதாக உலக வங்கி ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இரண்டு கோடி என்பது நியூயார்க், லண்டன், பாரிஸ் ஆகிய நகரங்களின் கூட்டு மக்கள்தொகை. காலம் முன்புபோல் இப்போது இல்லை. அது மிகவும் மாறிவிட்டது. பெண்கள் அதிக எண்ணிக்கையில் வெளிவர, வெளிவர அவர்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துவிட்டன.

நம் நாடு எப்படிப் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கிறது என்பதற்குக் கடந்த சில மாதங்களாக நடந்துவரும் சம்பவங்களே சாட்சி. எட்டு வயது காஷ்மீர் சிறுமி கடும் சித்திரவதைக்கும் வல்லுறவுக்கும் ஆளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டாள். 11 வயது குஜராத்தி சிறுமியும் 16 வயது உத்தரப்பிரதேசப் பெண்ணும் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். கடந்த பத்தாண்டுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் 83 சதவீதம் அதிகரித்துள்ளன. அரசுத் தரவுகளின்படி பெண்களுக்கு எதிராக ஒரு மணி நேரத்துக்கு 39 குற்றங்கள் நிகழ்கின்றன.

இத்தகைய கொடும் செயல்களைப் புரிவோர் கடும் தண்டனை பெற வழிவகை செய்யப்படும் என்று சட்டத்தை இயற்றுவோர் உறுதியளிக்கின்றனர். ஆனால், அந்த உறுதிமொழி, பெண்களுக்கு நம்பிக்கை தருவதாக இல்லை. தங்களது பாதுகாப்பு கருதியோ தங்களுடைய குழந்தைகளின் பாதுகாப்புக்காகவோ பல பெண்கள் தாங்கள் வகிக்கும் உயர்ந்த பதவியை விட்டு விலகும் நிலை இன்று பரவலாக உள்ளது.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை நம் நாடு ஆசியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால், இந்துமதி போன்றவர்களின் முடிவு, அதிக அளவில் பெண்களை வேலைக்கு அமர்த்தலாம் என்று நினைக்கும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கும் உள்நாட்டுப் பெரு நிறுவனங்களுக்கும் விழுந்த அடி என்றே சொல்லலாம்.

நம் பிரதமர் அயல்நாட்டு முதலீட்டைக் கவர்ந்து இந்தியாவின் பொருளாதாரத்தை உலக அளவில் முன்னேற்றுவதற்குக் கனவு காண்கிறார். ஆனால், அவரது ஆட்சியில் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளும் பாலியல் அத்துமீறல்களும் வல்லுறவுகளும் அந்தக் கனவுகளை வெறும் பகல் கனவுகளாக ஆக்குகின்றன. பெண்களுக்கு எதிரான அந்தக் கொடுஞ்செயல்கள் எப்படியொரு நாட்டையே பின்னுக்குத் தள்ளக்கூடும் என்பதை அவை உலகுக்கு உணர்த்துகின்றன.

பெண்களுக்குச் சமஉரிமை அளித்து, அவர்களை அதிக எண்ணிக்கையில் வேலைக்கு வரவைப்பதன் மூலம் இந்தியாவின் உற்பத்தித் திறன் 2025-ல் 52 லட்சம் கோடியாக உயரும் என ‘மெக்கென்ஸி குளோபல் இன்ஸ்டிடியூட்’ ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. ஆனால், இந்தியாவில் இன்று வெறும் 27 சதவீதப் பெண்கள்தாம் வேலைக்குச் செல்கின்றனர். மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது, இது மிகவும் குறைந்த அளவு. பெண்களுக்கு அதிகக் கட்டுப்பாடு விதித்திருக்கும் சவுதி அரேபியாவுடன் ஒப்பிடும்போது மட்டுமே இது சற்று அதிகம்.

இந்தியாவில் ஆண் குழந்தைகளுக்கான விருப்பம் பாலினச் சமநிலையைத் தகர்த்துள்ளது. இன்று நம் நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களைவிட நான்கு கோடிக்கும் அதிகமாக உள்ளது. மேலும் நம் நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், நிலப்பிரபுத்துவ, சாதி, பாலின ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ள கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். அங்கே பெரும்பாலான பெண்கள், தாங்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும்போது அது குறித்து முறையாகப் புகார் அளிக்க முன்வருவதில்லை. இதனால், குற்றவாளிகள் பெரும்பாலும் தண்டிக்கப்படாமலேயே உலவுகின்றனர்.

பிரௌன் யுனிவர்சிட்டி நடத்திய ஆய்வின்படி பாதுகாப்பான பயணத்துக்காகப் பெண்கள் ஆண்களைவிட அதிகமாகச் செலவு செய்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களும் வன்முறைகளும் தெருக்களிலும் பயணங்களிலும் இன்று மலிந்துள்ளன. நகரமயமாக்கலின் அசுரத்தனமான வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கப் பெண்களின் பாதுகாப்புக்கு என முறையான சட்டதிட்டம் தேவையாக உள்ளது.

பொதுமக்களின் தொடர் போராட்டங்களின் பலனாகத் தற்போது குழந்தைகளை வல்லுறவு செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனைவரை விதிக்கப்படுகிறது. பெண்களை வல்லுறவு செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல் தற்போது வலுத்துவருகிறது. தனியார் நிறுவனங்களும் தங்களிடம் பணிபுரியும் பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்காகச் செலவு செய்தும்கூட, பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை.

நான் ஆணாகப் பிறந்திருந்தால், என் வாழ்வே மாறியிருக்கும் என்று வருந்திப் புலம்பும் பெண்கள் பலர் இன்றும் நம்மிடையே உள்ளனர். வசிக்கும் தெருவிலோ ஊரிலோ பெண்களுக்கு எதிராக ஏதேனும் வன்முறை நிகழ்ந்தால், அதைக் காரணமாகச் சொல்லியே பெண்களை வீட்டில் முடக்கிவைக்கும் பல குடும்பங்களும் உண்டு. பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தால், கண்டிப்பாக அதிக அளவில் பெண்கள் வேலைக்குச் செல்வார்கள். அடுத்த பத்து ஆண்டுக் காலத்தில் அவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும். அது பெண்களின் கையில் இல்லை. சட்டம் இயற்றும் அரசின் கையில்தான் அது இருக்கிறது.

SCROLL FOR NEXT