பெண் இன்று

வாசிப்பை நேசிப்போம்: விடுதலையின் தொடக்கம்

Guest Author

பள்ளி நாள்களில் பாடப்புத்தகங்களைத் தாண்டி அப்பா வாங்கிக்கொடுத்த தெனாலிராமன் கதைகள், அக்பர் பீர்பால் கதைகள், முல்லா நஸீருதீன் கதைகள் ஆகியவற்றை வாசிப்பேன். வாரந்தோறும் நாளிதழோடு இலவச இணைப்பாக வரும் சிறுவர்மணிக்காகத் தங்கையுடன் சண்டைபோடுவேன்.

கல்லூரி விடுதியில் சக தோழிகளிடம் இருக்கும் நாவல்களை வாங்கிப் படிப்பேன். எழுத்தாளர்கள் சிவசங்கரி, ரமணிசந்திரன் ஆகியோரின் நாவல்கள் பிடிக்கும். அனுராதா ரமணனின் 'சிறை' சிறுகதையைப் படித்து முடித்தபோது எழுந்த சிலிர்ப்புச் சிறையிலிருந்து வெளிவர வெகுநேரம் ஆனது. மு. வரதராசனாரின் ‘நெஞ்சில் ஒரு முள்’, கவிஞர் வைரமுத்துவின் ‘சிகரங்களை நோக்கி’ நாவல்களை மிகவும் ரசித்துப் படித்தேன்.

என் கணவர் சென்னை புத்தகக்காட்சிக்கு என்னை வருடம் தவறாமல் அழைத்துச் செல்வார். அங்கு நான் வாங்கிய எழுத்தாளர் மருதனின் ‘இரண்டாம் உலகப் போர்’, ‘இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு’ ஆகிய இரண்டு நூல்களும் வரலாற்றின் மீதான ஈர்ப்பை அதிகரித்தன.

வங்காளதேசத்தின் மதக் கலவரங்களை கண்முன் நிறுத்திய தஸ்லிமா நஸ்ரினின் ‘லஜ்ஜா’, ரஷ்யாவில் தொழிலாளிகள், விவசாயிகளின் எழுச்சியை விவரித்த மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’, கறுப்பர்களின் கல்லறையால் கட்டப்பட்ட அழகிய நகரம் அமெரிக்கா எனும் கூற்றை நாவலாக வடித்த அலெக்ஸ் ஹேலியின் ‘வேர்கள்’, சாதிய அமைப்பின் கொடிய வடிவமான மனிதக் கழிவைக் கைகளால் அகற்றும் தொழிலாளர்களின் வடுக்களையும் வரலாற்றையும் விவரிக்கும் பாஷா சிங்கின் ‘தவிர்க்கப்பட்டவர்கள்’ ஆகிய நூல்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தவை.

யசோதா சரவணன்

டெட்சுகோ குரோயாநாகி எழுதிய ‘டோட்டோசான்: ஜன்னலில் ஒரு சிறுமி’ எனும் நூலில் இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில் ஜப்பானின் ஒரு பள்ளியில் வகுப்புகள் முடிந்த பின்பும் மாணவர்கள் வீடு செல்ல மனமின்றி இருந்த கல்விமுறையைப் பற்றிச் சொல்லியிருப்பார். அந்த டோமாயி பள்ளியையும் அதன் தலைமையாசிரியர் கோபயாஷியையும் இன்றும் மறக்க முடியவில்லை.

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு எழுதிய ‘அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்’ எனும் நூல் சாதியச் சமூகத்தில் சட்டங்களை அவர் கையாண்ட விதம், அளித்த தீர்ப்புகள் ஆகியவை ஒடுக்கப்பட்டவர்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதிக்கு ஒரே நம்பிக்கை நீதிமன்றம் என்பதை உணர்த்தியது. இன்று நான் வழக்கறிஞராக, பேச்சாளராகச் சிறக்கக் காரணம் புத்தகங்களே. வாசிப்புப் பழக்கம் என்பது சமூக விடுதலையின் தொடக்கம் என்பதால் இன்றைக்கும் அந்தப் பழக்கம் தொடர்கிறது.

- யசோதா சரவணன், சென்னை.

புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்கக முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்.
SCROLL FOR NEXT