எனக்கு 13 வயது ஆனபோது வாசிக்க ஆரம்பித்தேன். தற்போது 72 வயது வரைக்கும் அதைத் தொடர்கிறேன். என் வாசிப்புக்கு என் தந்தை உறுதுணையாக இருந்தார்.
ராஜாஜியின் ராமாயணம் - மகாபாரதம், கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘அலை ஓசை’, ‘கல்கி’யில் சோமு எழுதிய ‘வெண்ணிலவுப் பெண்ணரசி’, சாண்டில்யனின் ‘கடல்புறா’, ‘யவன ராணி’, கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’, அகிலனின் ‘பாவை விளக்கு’, ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, எண்ணிக்கையில் அடங்காத எத்தனையோ தொடர்கள் எனப் பலவற்றை வாசித்தேன். பிறகு, சுஜாதா, வாஸந்தி, கீதா பென்னட், பாலகுமாரன், அனுராதா ரமணன், சிவசங்கரி, தமிழ்வாணன், ரமணிசந்திரன் போன்றோரின் படைப்புகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மோனிகா ஃபெல்டனின் மொழிபெயர்ப்பான ‘மீரா’வையும் தி.ஜானகிராமன் கடைசியாக எழுதிய ‘நளபாகம்’ நாவலையும் படித்தேன்.
நான் படித்த ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். சாண்டில்யனின் சரித்திர நாவல்கள் பிரமிப்பை ஏற்படுத்தும். ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் கதாபாத்திரங்களும் பெயர்களும் நினைவை விட்டு நீங்காதவை. நாளிதழ்களில் தற்போது ‘இந்து தமிழ்திசை’யை வாசிக்கிறேன். வாசிப்பு என்பது சிறந்த ஆறுதல். என் மகளும் மகனும் புத்தக வாசிப்பைப் பழக்கமாகக் கொண்டுள்ளதில் மகிழ்ச்சி.
- வே.ருக்மணி, கோவை.
| வாசிப்பை நேசிப்போம்
முகவரி: பெண் இன்று, இந்து தமிழ்திசை, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in |