கடந்த வார (ஜூன் 30) ‘பெண் இன்று’வில் வெளியான ரயில் பயண அனுபவத்தைப் படித்ததும் இதை எழுதத் தோன்றியது.
என்னுடைய வழக்கமான மாலை நேரத்து நடைப்பயணத்தில் வாய் நிறைய சிரிப்போடு, தோழமையாகத் தலையசைக்கும் பூ விற்கும் வயதான பாட்டி அவர். பெயர் முனியம்மா. இந்த மண்ணுக்கே உரிய நிறத்தில் இருப்பார். நெற்றியில் பெரிய பொட்டு. அவரிடம் பூ வாங்குவதற்காகவே அவர் இருக்கும் பக்கமாகச் செல்வதும் உண்டு. நான் பூ வாங்கவில்லை என்றால்கூட அந்த நேசமான தலையாட்டலும் சிரிப்பும் மாறாது அவரிடம்.
அவருக்கு ஏதாவது சாப்பிட வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அதை அவர் எப்படி எடுத்துக்கொள்வாரோ என்று மனதில் சிறு தயக்கம். சில நாள்களுக்கு முன் ஒரு மாலை நேரத்தில் வழக்கமாக அவர் அமரும் இடத்துக்கு எதிர்த் திசையில் சென்றுகொண்டிருந்தேன். அவர் ஞாபகம் மனதில் நிழலாடியது. எதிர்த்திசையில் நான் பார்க்க அவரும் அதே நேரம் சரியாக என்னைப் பார்த்தார். வழக்கமான சிரிப்பும் தலையாட்டலும். நான் சாலையைக் கடந்து அவரிடம் சென்றேன். “பூ வேண்டுமா?” என்று கேட்டார். “உங்களுக்கு ஏதாவது சாப்பிட வாங்கிக்கொடுக்க ஆசை. வாங்கிக் கொடுத்தால் சாப்பிடுவீர்களா” என்று கேட்டேன். “அருகில் உள்ள ஹோட்டலில் சுண்டல் விற்கிறார்கள். வாங்கிக் கொடுத்தால் சாப்பிடுவேன்” என்றார் அவர். எனக்கு மனம் நிறைய மகிழ்ச்சி. நான் செல்ல அடியெடுத்து வைக்கும் முன் கெட்டியாகக் கட்டிய மல்லிகையைச் சிறு துண்டு கிள்ளிக்கொடுத்து, “இந்தா, பூ வச்சுக்கிட்டுப் போ” என்றார். சட்டென்று என் அம்மாவின் நினைவு வந்தது.
அவர் கேட்ட சுண்டலை வாங்கிக் கொடுத்துவிட்டு அவரிடம் பூ வாங்கிக்கொண்டு மனம் நிறைய சந்தோஷத்துடன் வீடு வந்து சேர்ந்தேன். அவருக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை. அவ்வப்போது பார்த்துப் பரிமாறிக்கொண்ட புன்னகையும் சில சொற்களும்தான். ஆனால், அந்தப் பாட்டி இப்போது என் மனதுக்கு மிக நெருக்கமானவராகத் தெரிகிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிப்படும் அம்மாவின் நேசத்தையும் பாசத்தையும் அவரிடம் நான் பார்க்கிறேன். ஒரு புன்னகை எவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்துகிறது பாருங்கள்!
- கார்த்தியாயினி பிரபாகரன், சென்னை.