எ
ழில் கொஞ்சும் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் பரபரப்பாக ஊர்ந்தபடி இருக்கும் வாகனங்களுக்கு நடுவே சட்டென கவனம் ஈர்க்கிறது அந்தக் கலைக்கூடம். மட்பாண்டங்களும் மண்ணால் செய்யப்பட்ட பலவித சிற்பங்களும் அந்த இடத்துக்கு வேறொரு வண்ணத்தைத் தருகின்றன. வாடிக்கையாளர்களைக் கவனிப்பதும் பானைகளை அடுக்கிவைப்பதுமாக இருக்கிறார் தனலட்சுமி.
மூன்று தலைமுறைகளாக இந்தத் தொழியில் ஈடுபட்டுவருவதாக தனலட்சுமி சொல்கிறார். “திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறுதான் எங்களோட சொந்த ஊர். அங்கே இருந்துதான் பானை செஞ்சி இங்கு எடுத்துட்டு வந்து விற்கிறோம். இருபது வருஷத்துக்கு முன்னாடி இந்த இடத்துல எங்க பட்டறையைத் தொடங்கினோம். அப்போல்லாம் வியாபாரம் நல்லா இருந்துச்சு.
ஆனா, மக்கள் இப்போ பானைகளையும் மண்ணுல செஞ்ச பொருட்களையும் வாங்குறது குறைஞ்சிடுச்சி” என்று ஆதங்கப்படும் தனலட்சுமி, பானை செய்வதற்காக மண் எடுப்பது சிரமமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார். “ஒரு டிராக்டர் மண் எடுக்க பத்தாயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கு. அதனாலதான் பானைங்க மட்டுமல்லாமல் மண்ணுல செஞ்ச பொம்மைகளை வெளி மாநிலங்களில் இருந்து வரவழைச்சு விற்கிறோம்” என்கிறார்.
இந்தப் பொருட்கள் எல்லாம் கையால் செய்யப்படுவதால் அவற்றுக்கு அதிக உழைப்பு தேவைப்படும் என்கிறார் தனலட்சுமி. “நூறு பானைங்க செய்ய கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேல ஆகும். அப்படி செஞ்சு முடிச்சாலும் எல்லாமே நல்லா வரும்னு சொல்ல முடியாது. இதுல உழைப்பு அதிகமா இருந்தாலும் வருமானம் அந்த அளவுக்கு இருக்காது.
பொதுவா பொங்கல், கார்த்திகை தீபம், விநாயகர் சதுர்த்தி மாதிரி பண்டிகை நாட்கள்லயும் வெயில் காலத்திலும் வியாபாரம் ஓரளவு நல்லா இருக்கும். மத்த நாட்கள்ல கொஞ்சம் சுமாரா இருக்கும். இவ்ளோ வருஷமா செஞ்ச இந்தத் தொழிலை விடவும் மனசு இல்ல. ஆனா, இனி வரும் காலத்துல இது நீடிக்குமான்னும் தெரியல” என ஏக்கத்துடன் சொல்கிறார் அவர்.
தற்போது இயற்கை குறித்தும் சூழலுக்கு உகந்த மண் பானைகள் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுவருவது தனக்கு நம்பிக்கை அளிப்பதாக தனலட்சுமி சொல்கிறார்.
படங்கள்: நீல் கமல்