‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ பகுதியில் வெளிவந்த ச. தமிழ்ச்செல்வன் எழுதிய கட்டுரைகளின் முழுத் தொகுப்பான ‘எசப்பாட்டு’ புத்தகத்தை அண்மையில் வாசித்தேன். ‘பெண் இன்று’வைத் தொடர்ந்து வாசித்தாலும் தவற விட்ட கட்டுரைகளை வாசிக்கவும் பிறவற்றை மீள் வாசிப்பு செய்யும் நோக்கிலும் இப்புத்தகத்தைப் படித்தேன். என் குறுகிய வாசிப்பு அனுபவத்தில் பெண்ணியம் குறித்த கட்டுரைகளையும் இதர படைப்புகளையும் ஆங்கிலத்தில் அதன் மேற்கத்தியத் தாக்கத்தோடுதான் பெரும்பாலும் படித்திருக்கிறேன். அது மிகவும் உதவியிருக்கிறது என்றாலும், நம் சமூகம் கலாச்சாரம் சார்ந்த பெண்ணிய சவால்களையும் சிக்கல்களையும் இப்புத்தகத்தின் மூலம் அதிகமாக உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.
சமூகத்தின் அடித்தட்டுப் பெண்களும் நடுத்தர வர்க்கத்துப் பெண்களும் எவ்வளவு சுயத்தோடும் மனதில் பட்டதைப் பேசும் துணிவோடும் இருக்கிறார்கள் என்பதைப் புத்தகத்தின் பல இடங்களில் உணரமுடிந்தது. இலக்கியம், அறிவியல் என ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பு மிகப் பெரிய அளவில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதை வரலாற்றுச்சான்றுகளுடன் பல இடங்களில் புத்தகம் பேசுகிறது. சமீகாலமாக இந்தியாவில் அதிகரித்துவரும் ‘ஆணுரிமைச் சங்கங்கள்’ குறித்தும் அவற்றின் குற்றச்சாட்டுகளை விமர்சிக்கும் இடங்களும் அருமை.
புத்தகத்தின் நோக்கமே ஆண்களோடு உரையாடலைத் தொடங்குவதும் அவர்களை மன மாற்றத்துக்கு உள்படுத்து வதுமாகவே இருக்கிறது. பெண்கள் தங்கள் உரிமைகளைத் தாங்களே முன்வந்து எடுத்துக் கொள்ளாதவரை யாரும் மாற்றத்தை வெளியில் இருந்து கொண்டுவந்துவிட முடியாது என்று தோன்றுகிறது. பெண்கள் தளைகளில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டு மாற்றத்தை நோக்கி முன் செல்ல வேண்டும். அது ஆண்களுக்கும் சமூகத்துக்கும் எவ்வளவு பெரிய அசௌகரியத்தையும் கலாச்சார அதிர்ச்சியையும் கொடுத்தாலும் பின்வாங்கக் கூடாது.
இதில் இருப்பவை ஆண்கள் அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய கட்டுரைகள். ஆண்களுக்குப் பெண்கள் கொடுக்கும் மிகச் சிறந்த பரிசாகவும் இப்புத்தகம் இருக்கும். ‘வரலாற்றின் பாதையில் ஆண்களும் பெண்களுமாகச் சேர்ந்து ஆண்களுக்குச் சாதகமான ஓர் உலகத்தை உருவாக்கி வைத்துவிட்டோம். பத்தாயிரம் ஆண்டுகளாகப் பழகிவிட்டதால் இந்தப் பேதம் இயல்பானது போலவும் அதற்கு எதிராகப் பேசுவது குற்றம் போலவும் உணரத் தலைப்பட்டு விட்டோம். அதை ஆண்களும் பெண்களும் இணைந்துதான் மீண்டும் சரிசெய்ய முடியும். ஆணுக்கு நீண்ட கால சாதகங்கள் இருந்த காரணத்தால் ஆண்தான் இதில் முன்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும் வீடுகளிலும் வெளியிலும் அரச சபைகளிலும்’ என்கிற புத்தகத்தின் வரிகளோடு முடிக்கிறேன்.
- நிலா, சென்னை.
| புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்கக முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள். |