பெண் இன்று

என் பாதையில்: உடையும் மௌனங்கள்

Guest Author

இந்த மௌனம்தான் எவ்வளவு ஆழமானது, அர்த்தம் நிறைந்தது. அதுவும் பெண்ணின் மௌனம் ஆழமும் அர்த்த மும் நிறைந்ததோடு ரணங்களாலும் ஆனது, வலி மிகுந்தது. ரணங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு இறக்கி வைக்க முடியாத கனம்.

குடும்பமும் சமூகமும் அவள் மீது வீசியெறியும் கேள்விகளுக்குப் பதில்கள் ஒலியாக வெளிவரத் துடிக்கும்போது அதை அப்படியே அமிழ்த்திப் போட்டு விடுகிறாள். ஒலி அப்படியே துடிதுடித்து அமைதியாகிவிடுகிறது. இப்படி எத்தனை ஒலிகள் அவள் மனதுக்குள் துடித்துத் துடித்துப் பின் நினைவிழந்து கிடக்கின்றனவோ?

குடும்ப உறுப்பினர்களே அவளைப் புரிந்து கொள்ளாமல் பேசும்போது கண்ணீரால் கரை எழுப்பி மௌனமாகிறாள். பெரும்பாலும் தன் பதில்கள் குடும்ப ஒற்றுமையைக் குலைத்து விடுமோ என்கிற பயத்தில் மௌனமாகிறாள். அவள் பேசாமடந்தையாக வார்த்தைகளை விழுங்கும்போது அவளுக்குள் போர்க்களம் நிகழும். உள்ளே எவ்வளவுதான் போராடினாலும் உதடுகள் மௌனமாகத்தான் இருக்கும். ஒரு துளிச் சத்தம்கூட வெளியே கேட்பதில்லை. உடன் இருப்பவர்களுக்கும் அது புரிவதில்லை.

உதடுகள் மௌனமாக இருந்தாலும் கைகளும் கால்களும் பரபரவென்று இயந்திர கதியில் வழக்கமான வேலைகளைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன. அவை நின்று விட்டால் அந்த வீடு நின்று விடும். இந்த நிலை இன்று நேற்றல்ல. பெண் தோன்றிய காலத்திலிருந்தே யுகம் யுகமாக இந்த நிலைதான்.

பெண் மௌனத்தைத் தன் உறைவிடமாகக் கொண்டாலும் வெளியே கேட்கிற மொழிகள் அவளுக்குத் துணையாக நிற்கின்றன. காக்கை கரையும் ஒலி, மின்விசிறி சுழலும் சத்தம், வீட்டிலுள்ளோர் நடந்து போகும் சத்தம், குக்கர் சத்தம், மிக்ஸி சத்தம் இப்படிப் பல சத்தங்கள் அவளுக்குத் துணை நிற்கின்றன. மௌனத்தைப் போர்வையாகப் போர்த்திக்கொண்டாலும் பெண் தனக்குள்ளேயே பேசிக்கொள்கிறாள். தன்னை நோகடித்தவர்களை நோக்கிக் கேள்விகளைக் கேட்கிறாள். தன்னை அவமானப்படுத்தியவர்களுடன் சண்டை போடுகிறாள்.இப்படியாகத் தன் மனதைத் தானே சமாதானப் படுத்திக்கொள்கிறாள்.

கனத்த இருளாகப் போர்த்தி இருந்த மௌனம் இப்போது சிறிது காலமாக விலக ஆரம்பித்திருக்கிறது. பெண் கொஞ்சமே கொஞ்சமாகத் தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறாள். அதையே தாங்கிக்கொள்ள முடியாத இந்த ஆணாதிக்கச் சமூகம் அவளைத் திமிர் பிடித்தவள் என்றும், குடும்பத்தை அரவணைத்துச் செல்லத் தெரியாதவள் என்றும், அடங்காப்பிடாரி என்றும் முத்திரை குத்துகிறது. அதைக் கண்டு கொள்ளாமல் மனதில் உள்ளதை நேர்மையுடன் இக்காலப் பெண்கள் பேச ஆரம்பித்திருப்பதைப் பார்க்கும்போது சிறிது நம்பிக்கை வருகிறது. பெண்ணுக்குச் சின்ன சின்ன ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் எல்லாவற்றுக்கும் மேலாகச் சுய கௌரவம் இருக்கிறது என்கிற விஷயம் இனிமேலாவது இந்தச் சமூகத்துக்குப் புரியுமென்று தோன்றுகிறது.

- ஜே. லூர்து, மதுரை.

SCROLL FOR NEXT