பெண் இன்று

வாசிப்பை நேசிப்போம்: தாத்தா தொடங்கிவைத்த அறிவுப் பயணம்

Guest Author

சிறு வயதிலிருந்தே பொது அறிவுப் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடைகள், திருவிழாக்கள் என எங்கே சென்றாலும் சிறு சிறு பொது அறிவு வினா - விடை புத்தகங்களை வாங்கிச் சேகரித்து வைத்திருக்கிறேன். வாசிக்கும் பழக்கம் என் தாத்தாவிடமிருந்து (அம்மாவின் அப்பா) தொற்றிக்கொண்டது. இதழ்கள், நாளிதழ்களில் வரும் கதைகளைப் படிக்கும் பழக்கம் அப்படித்தான் தொடங்கியது.

சென்னைக்கு வேலைக்கு வந்தவுடன் அறிமுகமானது புத்தகக் காட்சி. வருடந்தோறும் புத்தகங்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கினேன். முடிந்தவரை எனக்குத் தெரிந்தவர்களுக்கு அவற்றைப் பரிசாகவும் அளிப்பேன். அடுத்த தலைமுறைக்கு வாசிப்பைக் கடத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் என் உறவினர் குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை வலியுறுத்துகிறேன்.

முதலில் ஆங்கில நாவல்களில் தொடங்கி, தாய்மொழிப் பற்று எட்டிப் பார்க்க, ‘பெண் ஏன் அடிமையானாள்?’, ‘பெண்ணின் மறுபக்கம்’, ‘சேகுவேராவின் வரலாறு’, ‘கழிவறை இருக்கை’, ‘சண்டைக்காரிகள்’ எனப் பல புத்தகங்கள் என்னுள் நிறைய கேள்விகளை எழுப்பின. அந்தத் தேடலில் தொடங்கிச் சிறிது சிறிதாக என் சிந்தனையை விரிவுபடுத்திக்கொள்கிறேன்.

சிறிய கவிதைகள் முதல் சிறுகதை வரை என்னுடைய தமிழ் ஆர்வம் கொண்டு சென்றிருக்கிறது. எனது சிறிய படைப்புகளை வானொலி மூலமும் சமூக ஊடகங்கள் வழியாகவும் பகிர்ந்துவருகிறேன். இது என்னை மென்மேலும் ஊக்குவிக்கிறது. புத்தக வாசிப்பு ஒருவரை மனக்கவலை, சோர்வு போன்ற பலவற்றிலிருந்து விலக்கி ஒருமுகப்படுத்துதலை உருவாக்குகிறது. நம்முடைய கற்பனைத் திறனை அதிகப்படுத்துகிறது.

சினிமா பார்ப்பதுபோல் புத்தகம் வாசிப்பதும் நம்மை வேறு உலகிற்கு எடுத்துச் செல்லும். அடுத்த தலைமுறைக்கு நல்ல புத்தகங்களையும் வாசிப்பையும் கடத்துவதே நம் தலையாய கடமையாக இருக்க வேண்டும். பெண்ணியம், பகுத்தறிவு, சமத்துவம் போன்ற தத்துவங்களைப் புரிந்துகொண்டதன் விளைவாக என்னுடைய பெயரை என் தாய், தந்தையரின் பெயரோடு சேர்த்தே பதிவிடுகிறேன். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வாரந்தோறும் அறிமுகப்படுத்தப்படும் புத்தகங்கள் குறித்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதிலிருந்து புத்தகங்களைக் குறிப்பெடுத்துக்கொண்டு முடிந்த அளவுக்கு வாங்கிப் படித்து, பகிர்ந்து, மகிழ்கிறேன்.

- ஜனனி நாக-கணேசன், பட்டுக்கோட்டை.

SCROLL FOR NEXT