பெண் இன்று

இசையின் ஊற்றுக்கண்!

வா.ரவிக்குமார்

வைக்கம் விஜய லட்சுமிக்குப் பார்வைத் திறன் இல்லை. ஆனால், அவரிடம்தான் இசையின் ஊற்றுக்கண் திறந்தது.

பொதுவாக இசைக் கலைஞர்களுக்கு இசையோடு இசைந்த பின்னணி இருக்கும். எந்த இசைப் பின்ணனியும் இல்லாமல் முன்னிலை வகித்துக் கொண்டிருக்கும் முதல் தலைமுறை இசைக் கலைஞர் இவர். இரண்டு வயதிலிருந்தே பாடத் தொடங்கி விட்ட விஜயலட்சுமிக்கு, யேசுதாஸின் செவ்விய இசையும் இளையராஜாவின் திரை இசையுமே குருமார்களாக அமைந்துவிட்டன.

விஜயலட்சுமியின் வீட்டுக்கு வந்திருந்த உறவினர் ஒருவர், பிளாஸ்டிக் பாட்டிலில் ஒரேயொரு தந்தியைக் கொண்டு உருவாக்கப் பட்ட ஒரு பொம்மை வீணையைச் செய்து விஜயலட்சுமியிடம் கொடுத்திருக்கிறார். அதை ஸ்பூனால் மீட்டியபடியே பாடல்களுக்கான ஸ்வரங்களைத் தன்னுடைய கேள்வி ஞானத்தால் அடையாளம் கண்டிருக்கிறார் விஜயலட்சுமி.

ஆறு, ஏழு வயதில் சிறிய கோயிலில் நடந்த விஜயலட்சுமியின் அரங்கேற்றத்தைப் பார்த்த யேசுதாஸ், அவரைப் பாராட்டி ஆசீர்வதித்தார். பள்ளிகளுக்கு இடையே மாநில அளவில் நடந்த போட்டியில் பங்கெடுத்து முதல் பரிசு பெற்ற விஜயலட்சுமிக்கு இசைக் கலைஞர் சசிகுமரன் ‘காயத்ரி தம்புரு' என்னும் நான்கு தந்திகளைக் கொண்ட வாத்தியத்தைப் பரிசாகத் தந்தார். ஒரேயொரு தந்தி கொண்ட பொம்மை வாத்தியத்தில் பழகிய மகளின் வசதிக்காக விஜயலட்சுமியின் தந்தை முரளிதரன், அந்த வாத்தியத்தை ஒரே தந்தியுள்ள வாத்தியமாக மாற்றித் தந்தார்.

முறையான இசைப் பயிற்சியோடு ஒரு தந்தியோடு அமைந்த வாத்தியத்திலும் தன்னுடைய வாசிப்புத் திறனை மேம்படுத்திக்கொண்டார் விஜயலட்சுமி. பின்னாளில் அவரின் வாசிப்பைக் கேட்ட புகழ்பெற்ற வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன், விஜயலட்சுமியின் கைவசமான வாத்தியத்துக்குக் ‘காயத்ரி வீணை' எனப் பெயர் சூட்டினார்.

காயத்ரி வீணையின் மூலம் தொடங்கிய விஜயலட்சுமியின் கலைப் பயணம், மும்பையின் புகழ்பெற்ற ஷண்முகானந்த சபா உட்பட இந்தியாவின் புகழ்பெற்ற மேடைகள்தோறும் தொடர்கிறது. குருவாயூரில் நடக்கும் செம்பை சங்கீத உற்சவத்திலும் கேரளத்தின் புகழ்பெற்ற சூர்யா திருவிழாவிலும் இவரின் காயத்ரி வீணை ஒலித்திருக்கிறது.

தோடி, பைரவி போன்ற கன ராகங்கள் உட்பட எண்ணற்ற ராகங்களை காயத்ரி வீணையில் வாசிக்கும் விஜயலட்சுமிக்கு ‘செல்லுலாய்ட்' மலையாளப் படத்தில் ‘காற்றே காற்றே நீ பூக்கா மரத்தினு' என்னும் பின்னணிப் பாடலைப் பாடும் வாய்ப்பை எம்.ஜெயச்சந்திரன் வழங்கினார்.

அந்தப் பாடலைப் பாடியதன் மூலம் 2012-ல் கேரள அரசின் சிறப்பு விருதும் ‘நாடன்' படத்தில் ‘ஒற்றைக்கு பாடுந்நு பூங்குயிலே…' பாடலைப் பாடியதன் மூலம் 2013-ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான கேரள அரசின் விருதையும் 2014-ல் ஃபிலிம்பேர் விருதையும் பெற்றிருக்கிறார் வைக்கம் விஜயலட்சுமி. சுழித்தோடும் ஆற்றைப்போல தொடர்கிறது விஜயலட்சுமியின் இசைப் பிரவாகம்.

SCROLL FOR NEXT