பெண் இன்று

வாசிப்பை நேசிப்போம்: பாவம் சிவகாமி!

Guest Author

நான் எட்டாம் வகுப்பு படித்தபோது எங்கள் ஊரில் உள்ள நூலகத்தில் என் சித்தப்பா என்னை உறுப்பினராகச் சேர்த்துவிட்டார். சிறு வயதிலிருந்தே பாடப் புத்தகங்களைத் தாண்டிச் செய்தித்தாள், வார, மாத இதழ்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்த அன்று முதல் முறையாகப் பல நூறு புத்தகங்களை ஒரே இடத்தில் பார்த்த மகிழ்ச்சியை அளவிட முடியாது. அந்த நாளின் வியப்பு இன்றும் என் நினைவில் உள்ளது. அன்றிலிருந்தே வாசிப்புப் பழக்கம் என்னை விடாப்பிடியாகத் தொற்றிக் கொண்டது.

ச.ஹரிபிரியா

கல்கி எழுதிய ‘சிவகாமியின் சபதம்’தான் நான் படித்த முதல் நாவல். அதைப் படிக்கப் படிக்க நாள்களும் பக்கங்களும் கரைந்துகொண்டே போயின. எத்தனை எத்தனை திருப்பங்கள்! அந்த நாவலைப் படித்து முடித்த அந்த நிமிடம் என் கண்களில் தேங்கிய கண்ணீரின் முன்னால் மூன்று மணி நேரத் திரைப்படத்தைப் பார்த்து முடித்த திருப்தியெல்லாம் ஒன்றுமே இல்லை. நாவலைப் படித்து முடித்த பத்து நாள்களுக்கு யாரைப் பார்த்தாலும் நான் விடவில்லை. சிவகாமியின் கதையைச் சொல்லித் தீர்த்தேன். “அந்தச் சிவகாமி பாவம் அம்மா” என்று என் அம்மாவிடம் புலம்பித் தள்ளினேன். அன்றிலிருந்து இன்று வரை நாவல்களே என் நாள்களை உயிர்ப்புடன் நகர்த்துகின்றன.

- ச.ஹரிபிரியா, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி.

புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்கக முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்.
SCROLL FOR NEXT