நான் மூன்றாம் வகுப்பு படித்தபோது என் அப்பா வாங்கி வந்த ‘சிறுவர் மணி’, ‘சுட்டி விகடன்’ போன்ற இதழ்களின் மூலம் எனக்கு வாசிப்புப் பழக்கம் தொடங்கியது. நான் படித்த முதல் கதைப் புத்தகம் ‘விக்ரமாதித்யனும் வேதாளமும்’. என் அப்பா படிக்கும் புத்தகங்களை எடுத்து வாசித்துப் பார்ப்பேன். அரசியல், தத்துவம் தொடர்பான வார்த்தைகளைப் புரிந்துகொள்ள அந்த வயதில் சிரமமாக இருந்து. அம்மா தினமும் நாளிதழ் படிக்கும்போது பள்ளிப் புத்தகம் அல்லாமல் நானும் ஏதேனும் படிக்க வேண்டும் எனத் தோன்றும். ஆனால் பொதுத்தேர்வையொட்டிய என் பள்ளிப் பருவம் பாடப் புத்தகங்களுக்குள்ளேயே முடங்கிவிட்டது.
கல்லூரி நாள்களில் மீண்டும் என் புத்தக வாசிப்பு துளிர்விடத் தொடங்கியது. ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமி சபதம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘அலை ஓசை’ என கல்கி என்னை ஆட்கொண்டிருந்த காலம் அது. இந்திரா சௌந்தரராஜன் கதைகள், சக தோழிகள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் சிலவற்றையும் படித்தேன். என்னை மிகவும் பாதித்தது ஜெயமோகனின் ‘அறம்’.
கல்லூரிக் காலத்துக்குப் பிறகு குடிமைப் பணியாளர் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நான் சந்தித்த, சந்திக்கிற தோல்விகளாலும் என்னைச் சுற்றியிருப் போராலும் ஏற்படும் மன அழுத்தத்துக்கு வலி நிவாரணியாக அமைபவை புத்தகங்கள்தான். வாசிக்க நினைக்கும் புத்தகங்களை எல்லாம் வாங்கிப் படிக்க வேண்டும் என்பது என் கனவுகளில் ஒன்று. பட்டியல் நீண்டுகொண்டே செல்வதால் கனவு தொடர்கதையாகிவிட்டது.
- கி. வைஷாலி, பாவட்டக்குடி, திருவாரூர்.