சென்னை பரங்கிமலையில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ப்ரீத்தி சௌத்ரி எனும் ராணுவப் பெண் அதிகாரி, தன்னுடன் போட்டியிட்ட 215 ஆண் ராணுவ வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி, வீர வாள் (Sword of Honour) விருதைப் பெற்று பெண்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இத்தகைய சாதனையை இதுவரை உலகின் வேறெந்த நாட்டுப் பெண்ணும் நிகழ்த்தியதில்லை.
ராணுவப் பயிற்சி மையத்தில் ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் கடுமையானவை. 49 வாரங்களுக்கு நடக்கும் இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து வெளியேறுவதே ஒரு சாதனைதான். அத்தகைய கடினமான பயிற்சியைக் கடந்த மாதம் 10-ம் தேதி வெற்றிகரமாக முடித்ததோடு மட்டுமல்லாமல், அதற்கான உயரிய விருதான வீர வாள் விருதையும் ப்ரீத்தி சௌத்ரி வென்றுள்ளார். அதே பயிற்சியில் விரீதி எனும் பெண் ராணுவ அதிகாரி வெள்ளிப் பதக்கத்தை வென்று, பெண்களின் வீரத்தை நிரூபித்திருக்கிறார்.
இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து அகாடமியின் அதிகாரி விவேக் சூரஜ்ஜின் தலைமையில் 255 அதிகாரிகள் வீறுநடை போட்டு அணிவகுத்து வந்தனர். இதில் 40 பேர் மட்டுமே பெண்கள். அந்த அணிவகுப்பில் இந்திய ராணுவம் மட்டுமல்லாமல் பூட்டான், ஆப்கானிஸ்தான், தஜகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்தும் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர். லெப்டினெண்ட் ஜெனரல் தேவன் ரவீந்திரநாத் சோனி, தெற்குப் பிராந்தியத்தின் ஜெனரல் ஆபீசர் காமாண்டிங் இன் சீஃப் ஆகியோர் இந்த அணிவகுப்பைப் பார்வையிட்டு மதிப்பிட்டனர். இவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் பல விருதுகள் அன்று வழங்கப்பட்டன. அதில் வீர வாள் விருதை ப்ரீத்தி வென்றதால், வழக்கம் போலத் தொடங்கிய அணிவகுப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாறியது.
ஏனென்றால் வீர வாள் விருது அவ்வளவு எளிதில் பெறக்கூடியதல்ல. அங்கு நடக்கும் கடினப் பயிற்சியின் இறுதியில் உடல் திறனிலும் கல்வியிலும் ஆயுதத்தைக் கையாளும் திறனிலும் தலைமைப் பண்பிலும் களச் செயல்பாட்டிலும் நீண்ட தூர ஓட்டத்திலும் குத்துச் சண்டையிலும் சிறந்து விளங்கும் வீரருக்கு வழங்கப்படும் விருது இது.
சென்னையில் தான் தங்கியிருந்த நாட்களும் அங்கு தான் நிகழ்த்திய பல சாகசங்களும் வாழ்நாள் முழுவதும் தன் மனதில் நிறைந்திருக்கும் என்கிறார் ப்ரீத்தி சௌத்ரி.