பெண் இன்று

வாசிப்பை நேசிப்போம்: நாவல் படித்தேன், தேர்வில் வென்றேன்

Guest Author

நான் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் வரை எனக்குப் பாடப் புத்தகங்களைத் தவிர்த்துப் பிற புத்தகங்களின் வாசிப்பு அனுபவம் இருந்ததில்லை. ஒருநாள் என் பேராசிரியர், எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவல் குறித்து வகுப்பில் பேசினார். அவர் மூலமாக அந்த நாவல் பற்றியும் அதன் மீதான எதிர்வினைகள் பற்றியும் அறிந்துகொண்டேன். அதன் அடிப்படையில் ‘மாதொருபாகன்’ நாவலை வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வம் உருவானது. அந்நாவல் குறித்து எழுந்த சர்ச்சைதான் அதை வாசிக்க என்னைத் தூண்டியது.

ஒரு நாவலை எழுதியதற்காக ஓர் எழுத்தாளர் மிரட்டப்பட்டார் என்பதெல்லாம் எனக்குப் புதிதாக இருந்தது. இணையத்தில் அது தொடர்பாகத் தேடிப்படித்தேன். அதன் தொடர்ச்சியாகவே பாடநூல்களைத் தாண்டிய வாசிப்பு ஆர்வம் எனக்குள் நுழைந்தது. மாதொருபாகனைத் தொடர்ந்து பெருமாள்முருகனின் ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களையும் படித்தேன்.

அதுவரை தெரியாத ஒரு நிலமும் அந்நிலத்தில் வாழும் மக்களும் எனக்கு அறிமுகமானார்கள். இவையே எனக்கு அடுத்தடுத்து வாசிக்கும் ஆர்வத்தை அதிகரித்தன. தொடர்ந்து எழுத்தாளர் இமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவலைப் படித்தேன். நான் வாழும் சமூகத்தைப் பற்றிய பெரிய வெளிச்சத்தை அந்நாவல் எனக்கு வழங்கியது. அமெரிக்க எழுத்தாளர் அலெக்ஸ் ஹேலி எழுதிய ‘ஏழு தலைமுறைகள்’, கறுப்பினத்தவரின் துயரத்தைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியது. புதுமைப்பித்தன் கதைகளில் இருந்து வாழ்க்கையை எள்ளல்களுடன் கடந்துபோகவும் கு.ப.ரா. கதைகளில் இருந்து பெண்களின் வேறோர் உலகத்தையும் தெரிந்துகொண்டேன்.

கா.காயத்ரி

நாவல்கள் உருவாக்கும் கதையுலகம் ஒவ்வொன்றுமே எனக்குப் புதிதாக இருந்தது. முழுக்கதையை அறிய வேண்டும் என்கிற எதிர்பார்ப்புதான் என்னை நாவலை முழுமையாக வாசிக்கவைத்தது. பாடநூல்கள் ஒரு சிறிய வட்டம் என்பதை நவீன இலக்கியம் எனக்குக் கற்றுக்கொடுத்தது. நவீன இலக்கிய வாசிப்பு, பாடநூல்களை எளிமையாகப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. வாசிப்பு என்ன செய்யும் என்பதை இப்போது உணர்கிறேன். பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றிருக்கிறேன். வாசிப்புதான் இதைச் சாத்தியப்படுத்தியது. நம்மைச் சுற்றி இயங்கிக்கொண்டிருக்கும் சமூகத்தைப் புரிந்துகொள்ளவும் அதனுடன் ஒன்றிணையவும் வாசிப்புதான் உதவும்.

- கா.காயத்ரி, திருவள்ளூர்.

புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்.
SCROLL FOR NEXT