நிறைய நல்ல விஷயங்கள், பழக்கங்கள் உலகில் உண்டு. அவற்றைச் சுலபமாக நம்முடைய கைகளில் கொண்டு வந்து சேர்ப்பதுதான் வாசிப்பு. வாசிப்புப் பழக்கம் நமக்கு இருந்தால் அதுவே பெரும் பேறு. அந்தப் பேறு எனக்குப் பள்ளி நாள்களிலேயே கிடைத்துவிட்டது. அப்போது எங்கள் வீட்டில் ஆனந்த விகடன், குமுதம், கல்கண்டு ஆகிய இதழ்களை வாங்குவார்கள். பள்ளி விட்டு வந்தவுடனே யார் முதலில் புத்தகத்தைப் படிப்பது என என் தம்பி, தங்கையோடு போட்டி நடக்கும். இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. அப்படிப் படிக்கத் தொடங்கியது இன்றும் தொடர்கதையாகத் தொடர்வதைப் பெருமையாக நினைக்கிறேன்.
வார இதழ்களில் ஆரம்பித்த வாசிப்பு, நாவல்களுக்கு மாறி, நூலகத்தை அறிமுகப்படுத்தியது. பக்கத்து வீட்டு நாராயணி மாமியின் கல்கி இதழ், ‘பொன்னியின் செல்வ’னை மனதில் பதிய வைத்து, வரலாற்று நாவல்கள் படிக்கிற ஆர்வத்தைத் தூண்டியது. கல்லூரிக் காலத்தில் பலரைப் போல் நானும் சுஜாதா, இந்துமதி, லக்ஷ்மி, ராஜேஷ்குமார் ஆகியோரின் நாவல்களை விரும்பிப் படித்தேன். மங்கையர் மலர் இதழ் என்னையும் எழுதத் தூண்டியது. சின்ன சின்ன குறிப்புகளை எழுத ஆரம்பித்தேன். சில போட்டிகளில் பங்கெடுத்து, பரிசுகளும் கிடைத்தன.
நூலகத்தில் உறுப்பினராக இணைந்து புத்தக வாசிப்பைத் தொடர்கிறேன். வாஸந்தி நாவல்களை இங்கேதான் ரசிக்க ஆரம்பித்தேன். வாசிப்பு தந்த அந்த மகிழ்ச்சியான தருணங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. வாசிக்கும் நேரம் எனக்குரிய, மனதுக்கு இதம் தரும் நேரம். ஆன்லைனில் படிப்பதைவிடப் புத்தகத்தைப் படிப்பதை ரசிக்கிறேன். புதுப் புத்தக வாசம் என்னைச் சிறுமியாக உணர வைக்கிறது.
- எம்.ஜெயா, மதுரை.
| புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்கக முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள். |