ஒவ்வொரு நாளும் காலை நடைப்பயிற்சியின்போது அந்தப் பள்ளி வாகனத்தை வைத்த கண் எடுக்காமல் பார்ப்பேன். பள்ளி வாகனத்தினுள் அமர்ந்திருக்கும் சிறுவர்கள் ஏக்கத்துடன் வெளியே பார்த்துக் கொண்டிருப்பார்கள். முதியவர்கள் பலர் தங்கள் பேரன், பேத்திகளை பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு அவர்களும் அந்த வாகனத்தை ஏக்கத்துடன் பார்ப்பார்கள்.
ஏன் இந்த ஏக்கம் எனத் தெரிந்துகொள்ள அங்கிருந்த பாட்டி ஒருவரிடம் பேச்சு கொடுத்தேன். அந்தப் பாட்டியும் புலம்பியபடியே, “இப்படி ஜாலியா வேனில் ஏறிப் போய் படிச்சிட்டு வர இந்தப் பசங்களுக்கு ஏன் கசக்குதுன்னு தெரியல. கிளம்பவே மாட்டேங்கிறாங்க” என்றார். பாட்டியைப் பொறுத்தவரை தினமும் இப்படி வசதியாகப் பயணிப்பதும் புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்வதும் அற்புதமான விஷயங்கள். இவற்றோடு இளமையும் கிடைத்தால் அற்புதம் என்று பாட்டி ஏங்குவது போலத் தோன்றியது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் முதல் நாள் பார்த்த பாட்டியின் பேரனை வம்புக்கு இழுத்தேன். பாட்டியிடம் கேட்ட அதே கேள்விதான். குழந்தை என்பதால் வெள்ளந்தியாகப் பேசினான். “எனக்கு எங்க பாட்டியைப் பார்த்தாலே பொறாமையா இருக்கு. பாட்டி தினமும் வீட்ல இருக்காங்க. நெனச்சப்ப பாத்ரூம் போறாங்க. நெனச்சப்ப சாப்பிடுறாங்க. நெனச்சப்ப தண்ணி குடிக்கிறாங்க. எதுவும் செய்யப் பிடிக்கலைன்னா படுத்துத் தூங்குறாங்க. என்னால அப்படி இருக்க முடியலையே. பாட்டி மாதிரி இருக்க மாட்டோமான்னு ஏக்கமா இருக்கு” என்றான்.
எல்லாருக்கும் எந்நேரமும் ஏக்கம்தான் வாழ்க்கையோ என்கிற கேள்வி எழுந்தது. கிடைக்கிற சூழலில் மகிழ்ச்சியைத் தேடி மனநிறைவோடு வாழ வேண்டும் என்பதும் புரிந்தது. இன்றைய காலகட்டத்தில் மகிழ்ச்சிக்கான நமது ஒப்பீடுகள் மிகத் தவறானவை. நம்மைப் போன்ற சாமானிய மக்கள் திரையில் ஒளிரும் நட்சத்திரங்களுடன் தங்களது வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து ஏக்கமடைகிறார்கள். அதேபோலத்தான் பாட்டிக்கும் பேரனுக்கும் இருக்கும் ஏக்கமும் ஒப்பீடும். இந்த ஒப்பீடு எதையுமே மாற்றாது. மாறாக, நம் மன நிம்மதியைத்தான் குலைக்கும். மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக்கொள்வதுதான் ஏக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழி. அடையவே முடியாத ஒரு சூழலுக்காக ஏங்குவதும் கனவு காண்பதும் அங்கலாய்ப்பதும் இன்றைய காலகட்டத்தில் அதிகமாகிக்கொண்டிருக்கிறது.
அந்தந்தக் காலகட்டத்தில் வாழ்க்கை அந்தந்த வயதுக்குரிய மகிழ்ச்சியான தருணங்களை நமக்கு வெகுமதியாகத் தன்னிடம் வைத்துக்கொண்டு காத்திருக்கிறது. நாம்தான் அந்தத் தருணங்களை நமது ஏக்கங்களால் தவற விட்டுவிடுகிறோம். வெகுமதிகளைத் தேடிப் பெறுவோம், மகிழ்ச்சியாக வாழ்வோம்.
- சொர்ணலதா