பெண் இன்று

அனுபவம்: சாப்பிடுவது மட்டுமா ஆணின் கடமை?

Guest Author

‘சமைப்பது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது... இவையெல்லாம் பெரிய விஷயமா? பெண்கள் செய்யட்டும் தவறல்ல. அது அவர்கள் கடமை’ -பெரும்பாலான ஆண்களைப் போலத்தான் நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். அவர்கள் சமையலில் குற்றம் சொல்வதோடு எனக்குத் தெரியாத சமையலுக்கு செஃப் மாதிரி பரிந்துரை வேறு.

என் ஆணாதிக்கச் சிந்தனை எவ்வளவு மோசமானது என்பதைப் பொட்டில் அடித்ததுபோல் புரிந்து கொள்ள ஒரு கோடைக்காலம் உதவியது.

கோடை வெயிலோடு அக்னி நட்சத்திரமும் சேர்ந்துகொண்ட ஞாயிற்றுக்கிழமை மதிய உச்சி வேளை அது. ‘இவங்க இன்னும் என்ன செய்துகிட்டு இருக்காங்க’ என்கிற அகங்காரத்தோடும் கோபத்தோடும் சமையலறைக்குச் சென்றேன்.

அடுத்த நொடி பேச்சு வரவில்லை. வாயிலும் மனதிலும் வைத்திருந்த வார்த்தைகள் எல்லாம் சாம்பலாகிப் போன மாதிரி இருந்தது. எதுவுமே சொல்லத் தெரியவில்லை. வெளியே அடிக்கிற வெயிலைவிட சமையலறையினுள் அப்படி ஓர் அனல். அப்படியே ஒரு அரட்டு அரட்டிவிட்டது. அங்கே நிற்கக்கூட முடியாமல் திகைத்துவிட்டேன்.

ஆனால், என்னோட அக்காவோ, “இருடா தம்பி... கோவிச்சுக்காத. இன்னும் ரெண்டே நிமிஷம் ரெடியாகிடும். உக்காரு. முடிச்சாச்சு. நானே எடுத்துட்டு வந்துட றேன்” என்று சிரித்தபடி வியர்வையைத் துடைத்துக்கொண்டே அவர் சொன்ன வார்த்தைகள் என்னைக் கொன்றுபோட்டன. இப்போதும் அந்தக் காட்சி என் மனதை விட்டு மறையவில்லை. எதுவும் சொல்லாமல் வெளியே வந்துவிட்டேன்.

மண்டைக்குள் ஏதேதோ ஓடியது. அப்பாவுக்கு மட்டன், அம்மாவுக்கு நாட்டுக் கோழி, எனக்குக் கோழிக்கறி, போதாதுக்கு அடம்பிடித்து நான் சமைக்கச் சொன்ன பிரியாணி. இன்னும் என்னென்னவோ... காலை பத்து மணிக்கு அடுப்பங்கரைக்குப் போன அக்கா 2 மணி வரைக்கும் உட்காராமல், நிற்காமல் வேலை.

எவ்வளவு கேவலமாக நடந்துகொண்டோம் என்று தொண்டைக்குழி உள்வாங்கியது. மனம் கனத்துப்போனது. அக்கா சாப்பாடு பரிமாறியபோது, “எப்டில இவ்ளோ ஹீட்ல நின்னு சமைக்கிற?” என்று கேட்கும்போதே எனக்குக் குரல் உடைந்தது. “பழகிடுச்சுடா...இதெல்லாம் ஒரு விஷயமா? வா சாப்பிடலாம்” எனச் சிரித்தபடியே கடந்துவிட்டார்.

சாப்பிடத் தோன்றவில்லை. மனதுக்குள் இருந்த பாரம் என்னைச் சோற்றில் கைவைக்க விடவே இல்லை. அன்று முடிவெடுத்து மாற்றிக்கொண்டேன் என்னை. உழைப்பு, அதன் மதிப்பு என வீட்டுப் பெண்கள் மீதான மரியாதை கூடியது. சாப்பிட்ட தட்டைக் கழுவி வைக்கக்கூடச் சோம்பல்பட்ட எனக்கு வீட்டு வேலை எவ்வளவு கடினம் என விடுதி வாழ்க்கை உணர்த்தியது. ‘தி லஞ்ச் பாக்ஸ்’ படத்தில் வரும் ஷாஜன் எனக்குள்ளும் இருக்கிறார். ஆனால், அவரைக் கண்டடைய எனக்கு 22 ஆண்டுகள் ஆயின.

- அருண், திண்டுக்கல்.

SCROLL FOR NEXT