வயதாகிவிட்டாலே பலரால் நடுக்கமில்லாமல் நடக்கக்கூட முடியாது. ஆனால், ரஷ்யாவில் வசிக்கும் 89 வயதான அறுவை சிகிச்சை நிபுணர் ஆலா லுவுஷ்கினா (Alla Levushkina) வாரத்துக்கு நான்கு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்துவருகிறார்.
இவர் மாஸ்கோவில் உள்ள ரயாசன் நகர மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக 67 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார். குடலிறக்கம், குடல்நோய் பிரிவில் நிபுணத்துவம் பெற்றுள்ள அவர், இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளைச் செய்திருக்கிறார்.
ஆயிரக்கணக்கானோருக்கு அறுவை சிகிச்சை செய்தபோதும் இதுவரை இவரது அறுவை சிகிச்சை தோல்வியடையவில்லை என்பது மருத்துவச் சாதனையாகக் கருதப்படுகிறது.
திருமணம் செய்துகொள்ளாத ஆலா, மாற்றுத்திறனாளியான தன் ஒன்றுவிட்ட மருமகனோடும் செல்லப் பிராணிகளான எட்டுப் பூனைகளுடனும் வசித்துவருகிறார்.
வரும் மே 5-ம் தேதி ஆலாவுக்கு 90-வது பிறந்தநாள்! தற்போதுவரை பணி ஓய்வு குறித்து அவர் யோசிக்கவில்லையாம்.
“என்னைப் பொறுத்தவரை மருத்துவராக இருப்பது ஒரு தொழில் மட்டுமல்ல; அது வாழ்க்கையோடு கலந்துவிட்ட ஒன்று. ஒருவேளை நான் வேலை செய்வதை நிறுத்திவிட்டால் வேறு யார் இந்த அறுவை சிகிச்சைகளைச் செய்வார்கள்?” என்று கேட்கிறார்.