வாசிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்வின் ஓர் அங்கமாக இருக்க வேண்டும். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே வாசிப்பு தொடங்கிவிட்டது. காரணம், என் அண்ணன். இன்றும் தொடர்கிறது என் வாசிப்பு. பன்னிரண்டு வயதில் கல்கி, சாண்டில்யன் போன்றோருடன் குமுதமும் ராணியும் அறிமுகமாயின. பாட்டி ஒருவர், தான் பைண்ட் செய்து வைத்திருந்த பல புத்தகங்களைக் கொடுத்து வாசிப்பு ஆர்வத்தை அதிகப்படுத்தினார். அவரால் நானும் குமுதத்தில் வந்த தொடர்களை பைண்ட் செய்யத் தொடங்கினேன்.
திருமணமானபின் மஞ்சரி, அமுதசுரபி, கலைமகள் போன்ற மாத இதழ்கள் அறிமுகமாயின. அடடா! எத்தனை எத்தனை புத்தகங்கள், நாவல்கள், சரித்திரக் கதைகள். எங்கள் வீட்டில் ஓர் அலமாரி முழுக்க புத்தகங்கள் நிறைந்திருக்கின்றன. சிறு வயதில் என் அண்ணன் விதையிட்டு வளர்த்த வாசிப்புப் பழக்கத்துக்கு ஒரு பாட்டி நீரூற்றி உரமிட்டார். என் கணவரின் உதவியால் (வாங்கிக் கொடுத்தது மட்டுமின்றி, நூலகங்களில் இருந்தும் கொண்டுவந்து கொடுப்பார்) அது வளர்ந்து மரமானது.
இப்போதும் என் மகன் ‘மேக்ஸ்டர்’ எனும் செயலி ஒன்றைத் தரவிறக்கம் செய்து புதிய பல இதழ்களை அறிமுகப்படுத்திக் கொடுத்ததன் மூலம் நீரூற்றுகிறார். ஒரு புத்தகம் இருந்தால் எனக்குப் பசி, தாகம் தெரியாது!
- பொன்.இந்திராணி, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை.
| புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்கக முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள். |