பெண் இன்று

வாசிப்பை நேசிப்போம்: தூங்கவிடாத நாவல்

Guest Author

என் தந்தை மளிகைக்கடை நடத்திவந்தார். கடைக்குப் பொட்டலம் போடுவதற்காக நல்ல நிலையில் உள்ள பழைய பேப்பர், நாளிதழ்களைக் குறைந்த விலைக்கு வாங்குவோம். அவற்றில் இடம்பெற்றிருக்கும் சிறுகதைகளைப் படிப்பேன். மற்றபடி நூலகங்களுக்குச் சென்றோ, புத்தகங்களை விலைக்கு வாங்கியோ படித்ததில்லை. கதைகள் படிப்பதிலும் கேட்பதிலும் ஆர்வம் உண்டு.

நான் கல்லூரிப் படிப்பை முடித்து, மத்திய அரசுப் பணியில் வேலைக்குச் சேர்ந்த பின்பு புத்தகங்கள் வாங்கத் தொடங்கினேன். அப்போது சுயமுன்னேற்றம், உள்மன ஆற்றல்கள் தொடர்பான புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன். விடுமுறை நாள்களை வாசிப்புக்கென்று ஒதுக்கிவிடுவேன். ஜெயகாந்தன் எழுதிய ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலைப் படித்த பின்பு புத்தக வாசிப்பின் மீது ஆர்வம் அதிகமானது. நாவல் வாசிப்பின் சுவை எனக்குத் தெரிந்தது.

அதுவரை விடுமுறை நாள்களில் மட்டுமே படித்துக்கொண்டிருந்த நான், தினமும் படிப்பதற்காக நேரம் ஒதுக்கினேன்.

முதல் நாவல் வாசிப்பைத் தொடர்ந்து ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ மற்றும் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ஜெயமோகனின் ‘அறம்’, இமையத்தின் ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’, நளினி ஜமீலாவின் ‘எனது ஆண்கள்’ என்று பல வகையான புத்தகங்களை வாசித்தேன். ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலில் வரும் கல்யாணி கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. இமையம் எழுதிய ‘செல்லாத பணம்’ நாவலை ஒரு நாள் மாலைப் பொழுதில் வாசிக்கத் தொடங்கி இரவு முழுவதும் படித்துவிட்டுக் காலையில்தான் உறங்கச் சென்றேன். அந்நாவலைப் பாதியில் நிறுத்த மனம் வரவில்லை.

ஜானுபிரியா

எனக்கு இரண்டு குழந்தைகள். மகன் ஆறாம் வகுப்பு, மகள் இரண்டாம் வகுப்பு. அவர்களுக்கும் புத்தக வாசிப்பில் ஆர்வம் அதிகம். யெஸ். பாலபாரதி எழுதிய ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ புத்தகத்தை என் குழந்தைகளுடன் கதையாடலாகப் பகிர்ந்துகொண்டேன். மிகவும் பயனுள்ள புத்தகம். தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு குறைந்தது பத்துப் பக்கங்களையாவது வாசித்தால்தான் அன்றைய நாள் நிறைவுறும். மாதம் ஒருமுறை நானும் என் குழந்தைகளும் பொது நூலகத்துக்குச் சென்று வருகிறோம். அடுத்துப் படிக்க விரும்பும் புத்தகங்களின் பட்டியலை எனது நாள்குறிப்பில் குறித்து வைத்து ஒவ்வொன்றாகப் படித்துவருகிறேன்.

- ஜானுபிரியா, சென்னை.

வாசிப்பை நேசிப்போம்

புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப் பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்க்க முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்.
முகவரி: பெண் இன்று, இந்து தமிழ்திசை, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in

SCROLL FOR NEXT