ஒ
வ்வொரு நாளும் புதுப் புதுப் பயணங்கள்; அந்தப் பயணங்களின்போது பல சக்கரங்கள் நம்மைச் சுமந்து செல்கின்றன. ஆனால், கால்கள் என்னும் சக்கரம் இல்லையெனில் வாழ்க்கைப் பயணம் சீராக இருக்காது. அப்படிக் கால்கள் இல்லாமலோ சரிவரச் செயல்படாமலோ முடங்கிக் கிடக்கிறவர்களின் வாழ்க்கையை மூன்றாவது காலாகத் தாங்கி நிற்கிறார் மீனா தத்தா.
கொல்கத்தாவில் பிறந்த மீனா தத்தா, திருமணத்துக்குப் பிறகு சென்னையில் குடியேறினார். சிறு வயதிலிருந்தே சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று இவருக்கு ஆசை. அந்த ஆசைக்கு வடிவம் கொடுக்கிற வகையில் பிறந்ததுதான் ‘முக்தி’ தொண்டு நிறுவனம். 1986-ல் சென்னை மீனம்பாக்கத்தில் இந்தத் தொண்டு நிறுவனத்தை மீனா தொடங்கினார். “இந்த இடத்தை என் அம்மா எனக்குக் கொடுத்தார். நான் ஒரு அமைப்பாக இதை நடத்த என் கணவர் உறுதுணையாக நின்றார்” என்று சொல்கிறார் மீனா தத்தா.
இந்தியாவில் பல லட்சம் பேர் பிறவிக் குறைபாடு, விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகக் கால்களை இழந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவருக்கும் அவ்வளவு எளிதாகச் செயற்கைக் கால்கள் கிடைப்பதில்லை. இந்தியாவின் இந்த நிலைதான் செயற்கைக் கால்கள் உருவாக்கும் தொண்டு நிறுவனம் தொடங்குவதை நோக்கி மீனாவை நகர்த்தியது.
“இங்கு வரும் அனைவருக்கும் செயற்கைக் கால்களை மிகக் குறைவான எடையில் செய்து கொடுக்கிறோம். இங்கு வரும் பயனாளிகளின் கால்களை அளவெடுத்து, அதற்கேற்ற வகையில் செயற்கைக் கால்களை உருவாக்குகிறோம்” என்று சொல்லும் மீனா தத்தா, செயற்கைக் கால்களுக்காகக் கட்டணம் வசூலிப்பதில்லை. 1993-ல் சென்னையிலிருந்து டெல்லிவரை சுமார் 36 மாற்றுத் திறனாளிகளுடன் இருசக்கர வாகனங்களில் பயணித்ததைத் தன் வாழ்நாளில் மறக்க முடியாது எனக் குறிப்பிடுகிறார்.
இதுவரை இந்தியா, மெக்ஸிகோ, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மூன்று லட்சத்துக்கும் அதிகமானோருக்குச் செயற்கைக் கால்களை வழங்கியிருப்பதாக மீனா தத்தா குறிப்பிடுகிறார். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேல்.
“இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் முகாம்களை நடத்தி, அதன் மூலம் எங்களது சேவை பலதரப்பட்ட மக்களையும் சென்றடையும்படி பார்த்துக்கொள்கிறோம். முக்தி சேவை நிறுவனத்தைத் தொடங்கியபோது துளசிதாசன் மட்டும்தான் என்னுடன் இருந்தார். இவர் செயற்கைக் கால் உருவாக்கும் ஊழியராகக் கடத்த 33 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவருகிறார். செயற்கைக் கால் செய்யும் முறை குறித்து ராஜஸ்தானில் முறைப்படி பயிற்சிபெற்றவர் இவர். தற்போது பதினெட்டு ஊழியர்கள் எங்களிடம் பணிபுரிகின்றனர்.
ஒருவருக்குச் செயற்கைக் கால் பொருத்தும்போது முதலில் அவருக்குத் தன் உடலில் புதிய உறுப்பு இணைக்கப்பட்டதைப் போல இருக்கும். சில மாதங்களில் அந்த பிரமை அவர்களது மனதில் இருந்து நீங்கிவிடும்” என்கிறார் மீனா.
இங்கு வருபவர்களுக்கு முதலில் ஆலோசனை வழங்கப்படுகிறது. அதில் அவர்களது சந்தேகங்களுக்குத் தெளிவான முறையில் விளக்கம் தரப்படுகிறது. இங்கு இரண்டு வகையான செயற்கைக் கால்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பல்வேறு நோய் காரணங்களுக்காகக் கால்கள் எடுக்கப்பட்டவர்களுக்கும் விபத்தில் கால் இழந்தவர்களுக்கும் புராஸ்தெடிக் (Prosthetic) வகை செயற்கைக் கால்கள் வழங்கப்படுகின்றன. மற்றொன்று போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆர்தோஸ்டேடிக் (Orthostatic) வகையிலான செயற்கைக் கால்கள் பொருத்தப்படுகின்றன. இந்தக் கால்கள் அனைத்தும் இந்தத் தொண்டு நிறுவன ஊழியர்களால் உருவாக்கப்படுகின்றன. இந்தச் சேவைக்காகப் பல விருதுகளையும் மீனா தத்தா பெற்றிருக்கிறார்.
தன் உடல் சுமையையே பெரிதாக நினைப்பவர்கள் மத்தியில், பிறரது பாரத்தைத் தாங்கி நிற்கும் தூணாகச் செயல்பட்டுவரும் மீனா தத்தா, பாராட்டுக்குரியவர் மட்டுமல்ல; நல்லதொரு வழிகாட்டியும்கூட!
படங்கள்:நீல் கமல்