குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002இல் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின்போது பில்கிஸ் பானு என்கிற 19 வயதுப் பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து 2024 ஜனவரி 8 அன்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளுடன் சேர்ந்துகொண்டு குஜராத் அரசு முடிவெடுத்தது சட்டத்துக்குப் புறம்பானது என நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் பூயான் அமர்வு தெரிவித்துள்ளது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 11 பேரும் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே 2022 ஆகஸ்ட் 15 அன்று விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளுக்கு மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்த நிலையில் தண்டனை குறைப்பு குறித்து மகாராஷ்டிர மாநில அரசுதான் முடிவெடுக்க முடியும் என்றும் குஜராத் அரசு இதில் தலையிட இடமில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
கொடூரமான வன்முறை வழக்கில் குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுபாஷினி அலி, லக்னோ பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ரூப் ரேகா வர்மா, பத்திரிகையாளர் ரேவதி லால் ஆகியோர் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, ஐ.பி.எஸ். அதிகாரி மீரான் சத்தா போர்வாங்கர் ஆகிய இருவரும் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். மீரான் சத்தாவின் மனுவில் ஜக்தீப் சோக்கர், மது பந்தாரி ஆகிய இருவரும் தங்களை இணைத்துக்கொண்டனர். பில்கிஸ் பானுவுடன் எவ்விதத்திலும் நேரடியாகத் தொடர்பில்லாதவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட பொதுநல மனுக்களின் நம்பகத்தன்மையைக் குற்றவாளிகளில் ஒருவர் கேள்விக்குள்ளாக்கினார். அதைத் தொடர்ந்து பில்கிஸ் பானு தரப்பில் 2022 நவம்பரில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பில்கிஸ் பானுவுடன் இருப்பவர் வழக்கறிஞர் ஷோபா குப்தா. “இந்த வழக்கில் ஊதியம் பெற்றுக்கொள்ளும்படி மனித உரிமைகள் ஆணையம் என்னிடம் தெரிவித்தது. ஒற்றைப் பைசாகூட வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன். கோப்புகளைத் தயாரிக்கக்கூடப் பணம் வேண்டாம் என்றேன். சமூகத்தின் அங்கமாக இருந்துகொண்டு சமூகத்துக்கு நான் செய்யும் கடமை இது” என்று ஷோபா தெரிவித்திருக்கிறார்.
2022இல் குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டபோது பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் அவர்களை வரவேற்றனர். சட்டத்தின் மீதான கடைசி நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது என அன்றைக்கு வேதனையோடு சொன்ன பில்கிஸ் பானு, குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்கிற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் தான் மறுபடி சுவாசிக்கத் தொடங்கியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். பெண்ணுக்கு எதிரான சமூகக் கொடுமைகளுக்கும் வன்முறைகளுக்கும் எதிராகப் பெண்களும் பொதுச் சமூகமும் ஒன்றிணைந்து குரல்கொடுத்தால் நீதி கிடைக்கும் என்பதையும் இந்தத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது.