என் தோழி ஒருவருக்குத் திருமண வரன் பார்த்துக்கொண்டிருந்தனர். ஜாதகப் பொருத்தம் சரியில்லை எனச் சில வரன்கள் கைவிட்டுப்போக, வழக்கம்போல் பெண்ணின் தோற்றத்தைக் குறைகூறி சில வரன்கள் நழுவிச்சென்றன. பட்ட மேற்படிப்பு முடித்து நல்ல வேலையில் இருந்தும்கூட நிறத்தை வைத்துக் குறைசொல்லித் தட்டிக் கழித்தனர் சிலர்.
இப்படி எவ்வளவு காரணங்களைக் கூறினாலும் அவை அனைத்தையும் அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, ஒன்றைத் தவிர. பெண்ணுக்கு அப்பா மட்டுமே இருக்கிறார். அம்மா இறந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. பெண்ணுக்கு அம்மா இல்லை என்பதால் இந்தச் சம்பந்தம் வேண்டாம் என்றவர்களிடம் இதெல்லாம் ஒரு காரணமா என்று கேட்க, “என் மகன் மறுவீட்டு விருந்துக்குப் போனால் அவனைக் கவனித்து நல்ல உணவு சமைத்துப் போட மாமியார் இல்லை” என்று பையனின் அம்மா கூறிய வார்த்தைகள் என்றைக்கும் என் மனதை விட்டு நீங்காது. “பெண்ணின் தந்தையும் நன்றாகக் கவனித்துக்கொள்வார் என்றாலும் மாமியார் இருந்து செய்வதுபோல் வராது” என்றார்.
தன்னுடைய மகன் எங்கே சென்றாலும் ராஜாவைப்போல் நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கும் அவர், திருமணம் முடிந்து மருமகளை எப்படி நடத்தப் போகிறார் என்கிற கேள்வியும் எழுந்தது. நல்லவேளையாக என் தோழிக்கு வேறு இடத்தில் தன்னை மகளைப் போல் நடத்தும் மாமியார் கிடைத்துவிட்டார்.
தாயின் இடம் வெற்றிடமாக இருக்க, இப்படியான காரணங்களைக் கூறி பெண்ணை நிராகரித்தால் அது அந்தப் பெண்ணின் மனதில் எவ்வளவு காயத்தை ஏற்படுத்தும் என்பதை ஏன் அந்த அம்மா நினைக்கவில்லை?
மருமகன்களுக்கு மாமியார் வீடு என்றாலே நன்றாக உறங்கி ஓய்வெடுத்துச் செல்லும் இடமாகிவிட்டது. ஆனால், அதே நிலைமை பெண்ணுக்கு இருக்கிறதா? பிறந்த வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இளவரசிகளாக வளரும் மகள்கள், புகுந்த வீட்டில் முதல் நாளே வீட்டுப் பணிப்பெண்ணாக மாற்றப்படுகின்றனர் என்பதே நிதர்சனம்.
பெண்ணுரிமை பேசும் தாய்மார்கள்கூடத் தங்கள் மகனுக்கு என்றால் அதிலிருந்து விலகி அவர்களுக்குச் சாதகமாகவே நடந்துகொள்கிறார்கள். ஆண்-பெண் பேதமின்றி கணவன், மனைவி இருவரும் புரிந்துகொண்டு வேலைகளைப் பகிர்ந்து வாழும் சமூகத்தில் இருக்கிறோம். அப்படியானவர்களையும் பின்நோக்கி இழுத்துக்கொண்டு செல்கின்றன இப்படியான நிகழ்வுகள்.
- தீபா, கோயம்புத்தூர்.