பெண் இன்று

பெண்ணுக்கு நீதி 16: இல்லறத்தின் முன்னே ஓர் ஆபத்து

நீதியரசர் எஸ்.விமலா

“வாழ்க்கை... வாழ்க்கை... வாழ்க்கை மட்டுமே பெருமதிப்பானது. அது காட்டுமிராண்டித்தனமானது, குரூரமானது, கருணையானது, மேன்மையானது, உணர்ச்சிமயமானது, சுயநலமானது, பெருந்தன்மையானது, மடத்தனமானது, அசிங்கமானது, ஆழமானது, அழகானது, வலிநிரம்பியது, குதூகலமானது” – இப்படிச் சொன்னவர் அமெரிக்க நாவலாசிரியர் தாமஸ் வுல்ஃப்.

வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும் வாழ்க்கையின் அர்த்தம். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட திருமண வாழ்க்கை, நரகத்தில் மாட்டுவதற்குக் காரணங்கள் என்ன? உன்னதமான அன்பின் அடர்த்தி குறைந்து அங்கே சுயநலம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும்போது, மனைவி மீது கணவனும் கணவன் மீது மனைவியும் மாறி மாறி குற்றப் பத்திரிகை வாசிக்கிறார்கள். சந்தேகக் கணைகள் சரமாரியாக வீசப்படுகின்றன. கணவனும் மனைவியும் தொடர்பு எல்லைக்கு அப்பால் தொலைந்துபோய்விடுகிற நேரத்தில் வரும் அலைபேசி அழைப்புகள், அந்தரங்கத்தின் சுவரேறிக் குதித்து அத்துமீறி நுழைந்து அநியாயச் சந்தேகங்களை ஏற்படுத்திவிடுகின்றன.

இப்படியெல்லாம் பிரச்சினைகள் வரும்போது ஒரு காலத்தில், ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ எனச் சொல்லி விஷயத்தின் வீரியத்தைக் குறைத்து, இது யதார்த்தமான ஒன்று என்று பழுத்த அனுபவசாலிகள் பக்குவப்படுத்துவார்கள். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் என்று தலைபோகிற விஷயத்தையும்கூடத் தண்ணீர் தெளித்து தணித்துவிடுவார்கள். கூட்டுக் குடும்பங்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் பெண்கள் பேசிப் பேசியாவது தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டார்கள்.

மன இறுக்கம் மட்டுமே மணவாழ்க்கைச் சிக்கலின் மாபெரும் எதிரி என்று உளவியல் மருத்துவம் சொல்கிறது. வெளிப்படுத்தாத கோபம், தாபம், விரகம், வேட்கை, ஏமாற்றம் ஆகியவை அன்புப் பிணைப்பில் விரிசலை உண்டாக்கும் வீரியம் படைத்தவை.

குடும்பப் பிரச்சினைகள் பெரிதானால் விஷய ஞானம் தெரிந்த ஊர்ப் பெரியவர்களைக் கூப்பிட்டு பஞ்சாயத்து வைத்தார்கள். இருதரப்பினரையும் பற்றி நன்கு தெரிந்தவர்களே அதில் பங்கேற்றதால் பிரச்சினையில் தொடர்புடைய தம்பதி உண்மையை மட்டுமே பேசியாக வேண்டிய கட்டாயம் இருந்தது.

அப்படி நடந்த ஒரு பஞ்சாயத்தில் தன் கணவனின் ஆண்மைக் குறைவை நாசூக்காகச் சுட்டிக்காட்டிய பெண்ணுக்கு மணவாழ்க்கையிலிருந்து விடுதலை அளிக்கப்பட்டது. இப்படி எளிதில் பேசித் தீர்க்கும் நடைமுறையைப் பயன்படுத்திக்கொள்ள குடும்ப நலச் சட்டம் வாய்ப்பளிக்கிறது.

நீதிமன்ற நடைமுறைகள் என்பதும் ஒரு யுத்தத்தைப் போன்றதே. எந்த ஒரு யுத்தத்திலும் ஒரு தரப்பு மட்டுமே வெற்றிபெற இயலும். ஆனால், சமரசம் என்பது சரித்திரம் சந்தித்த சராசரி போர்க்களங்களைவிடச் சற்றே வேறுபட்டது. இங்கே இருதரப்பும் ஜெயிக்கும்.

தம்பதியர்களிடையே பிரச்சினை ஏற்படும்போது, அது தொடர்புடைய சகல விஷயங்களையும் ஒரே நேரத்தில் ஒரே நீதிமன்றத்தில் தீர்க்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் விவாகரத்து, தாம்பத்திய மீட்டமைப்பு, சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை, வரதட்சிணைப் பிரச்சினை, ஜீவனாம்சம், குழந்தைகளின் பாதுகாவல் உரிமை ஆகிய எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கும் அதிகாரம் குடும்ப நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் இந்த வரத்தைச் சாபமாக மாற்றும் வகையில் தவணை முறையில் ஒவ்வொரு மனுவாக அதாவது ஒரு மனு முடிவுக்கு வரும்போது, அடுத்த மனுவைத் தாக்கல் செய்து வழக்கை நீட்டிக்கிறார்கள். எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கேட்டு ஒரே மனுவாகப் போடாமல் ஒவ்வொரு மனுவாகத் தாக்கல்செய்து, ஒவ்வொரு மனுவையும் உச்ச நீதிமன்றம்வரை எடுத்துச் சென்று, அடுத்தவரின் வாழ்க்கையை அழித்துவிட்ட ஆனந்தத்தில் மிதக்கும்போது தன் இளமையும் பறிபோய்விட்டது என்ற உண்மையைக் காலம் கடந்து உணர்வதுதான் நகைமுரண்.

குடும்ப அமைப்பு எஞ்சியிருக்கும் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும்போது அதற்கு விரைவாகத் தீர்வு கிடைத்தால்தான் வாழ்க்கையைத் திட்டமிடுவது, வாழ்க்கையில் வளம்பெறுவது, அடுத்த தலைமுறையைப் பெற்று வளர்ப்பது உள்ளிட்ட பல காரியங்கள் எந்தத் தடங்கலும் இன்றித் தொடரும். வழக்கு தாமதம் காரணமாக இளமையும் இன்பமும் பறிபோவதால் திருமணம் என்ற பந்தத்தில் சிக்குவதைவிட, தேவைக்கும் தேவைப்படும் காலத்துக்கு மட்டுமே சேர்ந்து வாழ்வது மேலானது என்ற எண்ணம் இளைய தலைமுறையிடம் வளர ஆரம்பித்துள்ளது. அது ஆபத்துமிக்கது. சமூகம் நிலைத்து நிற்பதற்குக் குடும்பம் என்ற அமைப்பு தேவை. இதைக் கருத்தில்கொண்டு குடும்ப நலச் சட்டம் வழங்கும் சிறப்பான வழிமுறைகளைப் பயன்படுத்தி எளிய வழிகளில் விரைவாக வழக்குகளை முடித்துக்கொள்வதுதான் குடும்ப நலச் சட்டத்துக்குத் தரும் முறையான மரியாதையாக இருக்கும்.

(நிறைவடைந்தது)
கட்டுரையாளர், முனைவர், நீதியரசர்
தொடர்புக்கு:judvimala@yahoo.com

SCROLL FOR NEXT