“உ
டல் அளவில் நான் ஒரு மென்மையான, பலவீனமான பெண் என்பது எனக்குத் தெரியும்; ஆனால், என்னிடம் ஒரு ராஜாவின் இதயமும் மனமும் உண்டு” என்று பிரிட்டிஷ் முதலாம் எலிசபத் 500 ஆண்டுகளுக்கு முன் சொன்னார். ஏன் அப்படிச் சொன்னார் என்பதற்கான சூழலையும் இங்கு சொல்ல வேண்டும். 1588-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பெயின் நாட்டின் ஆர்மடா எனப்படும் 130 கடற்படைக் கப்பல்களின் அணிவகுப்பு இங்கிலாந்து நாட்டைத் தாக்கி முதலாம் எலிசபத்தின் ஆட்சியை ஒழிக்கப் புறப்பட்டது. அப்போது தில்பியூரி என்ற இடத்தில் தன் படைவீரர்களுக்கு நம்பிகையூட்டும் விதத்தில் மகாராணி இப்படிப் பேச வேண்டியிருந்தது. காரணம், அந்தப் படைவீரர்களுக்குத் தங்களது மகாராணி ஒரு பெண் என்பதால் தாங்கள் தோற்று விடக்கூடுமோ என்ற அச்சம் இருந்ததுதான்.
ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகும் பெரும்பாலான ஆண்கள், பெண்களைப் பலவீனமானவர்களாகவே பார்க்கின்றனர். ஒரு பெண்ணை நிரந்தரமாக அடிமையாக்கும் ஒரு கருவியாகத் திருமணம் என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, பிரிட்டனில் அன்னிபெசன்ட் அம்மையாருக்கு நடந்த சம்பவமும் இதற்குச் சாட்சி. அன்னி பெசன்ட் அம்மையாருக்கும் ப்ராங்க் பெசன்ட் என்பவருக்கும் 1867-ல் திருமணம் நடந்தது. மதத்தின் மீது மாறுபட்ட கருத்துகளைக்கொண்ட அன்னிபெசன்ட் அம்மையாருக்கும் மத போதகாரான அவருடைய கணவருக்கும் இடையிலான வாழ்க்கை 1873-ல் முறிந்துபோனது. ஆனால், அன்று இருந்த சூழ்நிலையில் மணவிலக்கு என்பது நடுத்தர வர்க்கத்தினருக்குக்கூட எட்டாக்கனியாக இருந்தது. கணவரை விட்டுப் பிரிந்துவிட்டாலும் அன்னி பெசன்ட், தன் கணவரது குடும்பத்தின் பெசன்ட் என்ற பெயரொட்டைத் தன் வாழ்நாள் முழுவதும் சுமக்கவேண்டியிருந்தது. அந்தக் காரணத்தால்தான் மணவிலக்குப் பெறுவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவ உரிமை கோரி, அன்னி பெசன்ட் அம்மையார் ‘Marriage : A Plea for Reform’ என்ற நூலை எழுதினார்.
இந்தியாவில் ‘சமூக சேவையின் தாய்’ என்று போற்றப்படுபவர் தூர்காபாய் தேஷ்முக். அவர் எட்டு வயதுக் குழந்தையாக இருந்தபோதே, அவருடைய முறைமாப்பிள்ளை சுப்பாராவ் என்பவருக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டது. அவர் பருவம் அடைந்த பிறகு, தன் கணவருடன் வாழாமல் திரும்பி வந்து கல்வி கற்று வழக்கறிஞர் ஆனார். பின்னர் 1953-ல் இந்தியாவின் நிதியமைச்சராக இருந்த சி.டி.தேஷ்முக் என்பவரை மணந்துகொண்டார். அவர் வாழ்ந்த காலத்தில் பெண்கள் மணவிலக்கு பெறுவது அவ்வளவு எளிதல்ல. அந்தக் காரணத்தால்தானோ என்னவோ தன் முன்னாள் கணவரின் விதவை மனைவியான திம்மையம்மாவைக் கடைசிவரை தன்னுடன் வைத்திருந்து பராமரித்தார்.
அவர் 1953-ல் சீனாவுக்கு அரசு முறை பயணமாகச் சென்றபோது அங்கே குடும்பநல நீதிமன்றங்கள் செயல்படும் முறையைப் பார்த்தார். அது பற்றி, அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவிடம் தெரிவித்து, குடும்பநல நீதிமன்றங்களை இந்தியாவிலும் தொடங்க வலியுறுத்தினார். பின்னர் 1974-ல் இந்தியச் சட்ட ஆணையம், இந்தியாவில் குடும்பநல நீதிமன்றங்கள் தொடங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்து அறிக்கை வெளியிட்டது. அதன் பிறகு பத்தாண்டுகள் கழித்து 1984-ல் குடும்பநல நீதிமன்றங்கள் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த வகையிலான முதல் குடும்பநல நீதிமன்றம், ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்கப்பட்டது.
நீதிமன்றங்கள் மனித உரிமைகளின் சரணாலயம் என்று சொல்லப்பட்டாலும் நீதிமன்றம் என்ற வார்த்தையைக் கேட்டால் பொதுமக்கள் பலருக்கு ஏற்படுவது அச்சமும் ‘எத்தனை ஆண்டுகளோ’ என்ற விரக்தி உணர்வும்தான். சாதாரண நீதிமன்றங்கள் குடும்பநல வழக்குகளை விசாரித்தாலும் அவற்றுக்கு முன்னுரிமை அளிப்பது இயலாத காரியம். பத்தோடு பதினொன்றாக வழக்கு விசாரணைக்கு வரும்போது இளமை தொலைந்து போயிருக்கலாம் அல்லது வாழ்க்கையே முடிந்துபோய் இருக்கலாம். பெரும்பாலான வழக்குகளில் வழக்கில் வெற்றிபெறுபவர், மகிழ்ச்சியைக் கொண்டாடிவிட முடியும்.
குடும்பநல வழக்குகளைப் பொறுத்தவரை பெரும்பாலான வழக்குகளில் கேட்டது கிடைத்தாலும்கூட, சில வழக்குகளில் மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும். பெரும்பாலும் வழக்கைத் தொத்தி வரும் சோகமே மிஞ்சி இருக்கும். பண பலம், படை பலம் அதிகம் பெற்றிருந்த ஆண்களை எதிர்த்து வழக்காடுவது பெண்களுக்கு அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. எனவே, சட்டத்தின் முன்பாக சமமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றால் மாற்றுமுறை தீர்வுகளை உருவாக்குவதுதான் சரியான வழியாக இருக்கும்.
மண/மனச் சிக்கல்களில் மாட்டி உடைந்த உறவுகளை ஒட்ட வைக்கும் முயற்சியில், தவிப்பும் சோகமும் ததும்பத் ததும்ப வரும் பெண்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஒட்டவைக்கும் சூழல் கொண்டதாகக் குடும்பநல நீதிமன்றங்கள் அமைய வேண்டும் என்று முடிவுசெய்து நாடாளுமன்றம் குடும்பநலச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
சட்டத்தின் விதிகள் மட்டுமே வாழ்க்கை மர்மங்களைத் திறக்கும் சாவிகளாக இருக்க முடியாது. அதற்கு, சட்டம் அறிந்த நீதிபதியையும் தவிர உளவியல் நிபுணர்கள், ஆற்றுப்படுத்தும் ஆலோசகர்கள், மருத்துவர்கள், சமூக சேவகர்கள் போன்றோரின் ஆற்றலும் அனுபவமும் துணையாக இருக்க வேண்டும். இவ்வாறாக மாறுபட்ட கோணங்களிலிருந்து மனித வளத்தைத் தேடிச் செல்வதைக் குடும்பநல நீதிமன்ற அமைப்பு அனுமதிக்கிறது.
இதைத் தவிர, சாதாரண சட்டங்களிலிருந்து பல்வேறு வகைகளில் மாறுபாடு உடைய நடைமுறைகளைக் குடும்பநலச் சட்டம் அறிமுகம் செய்துள்ளது. பின் குடும்பநல வழக்குகளில் ஏன் இந்தக் கால தாமதம்? அடுத்த வாரம் பார்ப்போம்.
(பாதைகள் விசாலமாகும்)
கட்டுரையாளர், முனைவர், நீதியரசர்
தொடர்புக்கு:judvimala@yahoo.com