பாலியல் ரீதியான கொடுமைகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள், ஆலோசனைகளைச் சமூகத்தில் பின்தங்கியிருக்கும் குழந்தைகளையும் பெண்களையும் நாடி வழங்கிவருகிறது நக்க்ஷத்ரா என்ற தன்னார்வ அமைப்பு. வடமொழியில் `நக்க்ஷ’ என்றால் `நாடுவது’, `திரா’ என்பதற்குப் பொருள் `தடுப்பது’. அவர்கள் செய்யும் பணிக்கு இந்தப் பெயர் கச்சிதமாகப் பொருந்துகிறது.
டாக்டர் அல்போன்ஸ்ராஜ், ஷெரீன் போஸ்கோ ஆகியோர் நிறுவியிருக்கும் இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து ஷெரீன் போஸ்கோ பேசினார்.
துன்புறுத்தலைத் தடுக்க
"சென்னையைப் பொறுத்தவரை குடிசைப் பகுதிகளிலும் மீனவக் குடியிருப்புகளிலும் எங்களுடைய விழிப்புணர்வு முகாம்களை நடத்தி இருக்கிறோம். வடசென்னையின் திருவொற்றியூர், பெசன்ட் நகர், வில்லிவாக்கம் போன்ற இடங்களில் வறுமை, குடும்பச் சூழ்நிலை காரணமாகக் குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பது, பள்ளி இடைநிறுத்தம் செய்யப்பட்ட குழந்தைகள் எனப் பல நிலைகளில் இருப்பவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத் தலுக்கு ஆளாவதற்கான வாய்ப்பு அதிகம்.
அப்படிப்பட்ட குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் எப்படியெல்லாம் நடக்கும்? அதைத் தவிர்ப்பதற்கு என் னென்ன முயற்சிகளைப் பெற்றோர்களும் குழந்தைகளும் மேற்கொள்ளலாம் என்னும் விழிப்புணர்வை வழங்கி இருக்கிறோம்.
விளையாட்டு முறை
பெரியவர்களிடம் பேசுவது போலக் குழந்தைகளிடம் பேசமுடியாது. அவர்களுக்குப் பிடித்த இசை, பாட்டு, நடனம், ஓவியம் போன்ற கலை வடிவங்களில் அவர்களை ஈடுபடுத்தி, மெதுவாக அவர்களுடைய உடலைப் பற்றிய தெளிவையும் அதன்மேல் அவர்களுக்கு இருக்கவேண்டிய முழு உரிமையையும் எடுத்துக் கூறுகிறோம். இதைத் தவிர POSCO (Prevention of children sexual offence) சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் காவல் துறையினருக்கும்கூட அறிவுறுத்துகிறோம்" என்கிறார் ஷெரீன்.
இவருடைய இந்தச் சீரிய முயற்சியில் சென்னை பல்கலைக்கழகத்தின் கிரிமினாலஜி துறை நிபுணர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.
புதிய காப்பகம்
"எங்களுடைய விழிப்புணர்வு பிரசாரத்தை எண்ணற்ற குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், காவல் துறையினர், மருத்துவர்கள், தன்னார்வலர்களிடம் கொண்டுசென்றிருக்கிறோம்.
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்களுக்குச் சட்ட ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் உதவும் காப்பகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம். இதற்குப் பொருளாதார ரீதியில் உதவும் கைகளைவிட மன ரீதியாக நம்பிக்கை கொடுக்கும் கைகள் எங்களோடு இணையவேண்டும் என நினைக்கிறோம்" என்றார் ஷெரீன் போஸ்கோ.